மாநிலங்கள்

img

சஞ்சீவ் பட்டுக்கு அனுப்பப்பட்ட 30 ஆயிரம் ராக்கிகள்

அகமதாபாத்:
சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையையொட்டி, பிரதமர் மோடிக்கு, பலரும் ‘ராக்கி’கட்டிவிட்ட புகைப்படங்கள் ஊடகங்களில்வெளியாகியிருந்தன. பிரதமர் மோடியை தங்களின் சகோதரராக கருதுகிறோம் என்று அந்த பெண்கள் அளித்த பேட்டிகளும் விரிவாக வெளியிடப்பட்டு இருந் தன.இந்நிலையில்தான், குஜராத் வன் முறை சம்பவத்தில், பிரதமர் மோடிக்கு எதிராக துணிந்து சாட்சி கூறியதற்காக, பாஜகவால் பழிவாங்கப்பட்டு, தற்போது ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் ஐபிஎஸ்அதிகாரிக்கு, ஆச்சரியப்படும் வகையில்சுமார் 30 ஆயிரம் பெண்கள் ‘ராக்கி’கயிறு அனுப்பி ஆதரவு தெரிவித்துள்ளனர். 

கடந்த 2002-ஆம் ஆண்டு, மோடி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர். நாட்டையே உலுக்கிய இந்த வன்முறைகள் குறித்து, பின்னாளில், சிறப்புப் புலனாய்வுக்குழு, நானாவதி கமிஷன் ஆகியஅமைப்புக்கள் மூலம் விசாரணை மேற் கொள்ளப்பட்டது. அப்போது, முக்கியமான சாட்சியமாக விளங்கியவர் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட். குஜராத் மாநில காவல்துறை அதிகாரியாக இருந்த சஞ்சீவ் பட், நடந்த உண்மைகளை யாருக்கும் அஞ்சாமல் ஒளிவுமறைவின்றி கூறினார்.குஜராத்தில் நடக்கும் வன்முறைகளை, கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அப்போதைய முதலமைச்சரான நரேந்திர மோடி, காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதாக சஞ்சீவ் பட் அளித்த வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியது. வன்முறையை வேடிக்கை மட்டுமேபார்க்கும் வகையில், காவல்துறையினரின் கைகளை முதல்வர் மோடி கட்டிப்போட்டு விட்டார் என்று சஞ்சீவ் பட் குற்றம்சாட்டினார். சிறப்புப் புலனாய்வுக்குழு, நானாவதி கமிஷனில் மட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்திலும் இதே குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.
ஆனால், மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பின்னணியில், 2015-ஆம் ஆண்டு, சஞ்சீவ் பட்டின் ஐ.பி.எஸ். பதவி பறிக்கப்பட்டு பழிவாங்கப்பட்டார். அத்துடன், 2018-ஆம் ஆண்டு சஞ்சீவ் பட் கைதும் செய்யப்பட்டார்.அதாவது, சஞ்சீவ் பட், ஜாம் நகர்கூடுதல் சூப்பிரண்டாக பணியாற்றிய காலத்தில், கைதி ஒருவர் காவல்நிலையத்தில் இறந்து போனார். இது தொடர்பானவழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது; இந்த வழக்கை 30 ஆண்டுகளுக்குப் பின், திடீரென தூசுத்தட்டி சஞ்சீவ் பட்டை குஜராத் பாஜக அரசு, கைதுசெய்தது.

விசாரணையின் முடிவில், கடந்த ஜூன் 20-ஆம் தேதி சஞ்சீவ் பட்-டிற்கு ஜாம்நகர் நீதிமன்றம், ஆயுள் தண்டனையும் விதித்தது. தற்போது 2 மாதமாக பாலன்பூர்சிறையில் சஞ்சீவ் பட் தண்டனை அனுபவித்து வருகிறார்.மோடிக்கு எதிராக சாட்சி கூறியதாலேயே சஞ்சீவ் பட் பழிவாங்கப்பட்டுள்ளதாக கூறும் சமூக ஆர்வலர்கள், தீபிகாராஜாவத் என்ற பெண் வழக்கறிஞர் தலைமையில் சஞ்சீவ் பட்டுக்கு நீதிகேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனொரு பகுதியாக, வட இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை கையில்எடுத்த இவர்கள், “சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பெண்கள் அவருக்கு ‘ராக்கி’ அனுப்புமாறு அண்மையில் வேண்டுகோள் விடுத்தனர். ராக்கி என்பது, பெண்கள் தாங்கள் சகோதரராக கருதுவோருக்கு அணிவிக்கும் கயிறு ஆகும். இந்நிலையில், தீபிகாவின் வேண்டுகோளை ஏற்ற பெண்கள் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், சஞ்சீவ் பட்டிற்கு ‘ராக்கி’ அனுப்பி, தங்களின் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர். ரக்ஷாபந்தன் அன்று மட்டும் 300-க்கும் மேற்பட்டபெண்கள், பாலன்பூர் சிறைக்கே சென்று,அங்கு அடைக்கப்பட்டுள்ள சஞ்சீவ் பட்-டுக்கு நேரில் ராக்கி கட்டி, சகோதரத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

;