மாநிலங்கள்

img

எஸ்.சி. பட்டியலில் புதிதாக 17 சாதிகளா? மாநில அரசுக்கு அதிகாரமில்லை

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநில தாழ்த்தப்பட்டோர் பட்டியலில், புதிதாக 17 சாதிகளை சேர்த்து, அம்மாநில முதல்வர் ஆதித்யநாத் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மாயாவதி கூறியிருப்பதாவது:இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து 17 சாதிகளை நீக்கி அவற்றை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்ப்பது என முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. அரசியல் சாசனத்தின் 341-ஆவது பிரிவின்படி தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சாதியை சேர்ப்பதும் நீக்குவதும் முடியாத ஒன்று. அப்படி செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாகும். அப்படியே சேர்ப்பது என்றாலும் நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறதே தவிர மாநில முதல்வருக்கு அதிகாரம் இல்லை. இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் நிஷாத், பிண்ட், மல்லாஹ், திவர் உள்ளிட்ட 17 இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரைத்தான், அம்மாநில பாஜக அரசு, திடீரென எஸ்.சி. பட்டியலில் சேர்த்துள்ளது. இதன்மூலம், ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருப்பவர்கள், தங்களுக்கு இருக்கும் குறைந்தபட்சவாய்ப்புக்களை புதிதாக சேர்க்கப்பட்ட 17 சாதியினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இதர பிற்படுத்தப்பட் டோர் பட்டியலிலிருந்து, 17 சாதிகளை கழித்துக் கட்டியதால், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் ஏனைய சாதியினர் கூடுதல் வாய்ப்புகளை பெறும் சூழலும் உருவாகியுள்ளது.
 

;