மாநிலங்கள்

img

மோடி பிற்படுத்தப்பட்டவர் என்றால் ஆர்எஸ்எஸ் பிரதமர் ஆக்கியிருக்காது

லக்னோ:

பிரதமர் நரேந்திர மோடி, அண்மையில், உத்தரப்பிரதேசத்தில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் சாதிய அடிப்படையில் கூட்டணி சேர்ந்துள்ளதாக விமர்சித்திருந்தார்.


இந்நிலையில், மோடியின் இந்த விமர்சனத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான மாயாவதி ட்விட்டரில் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:


எங்கள் கூட்டணியை சாதிய ரீதியானது என்று மோடி கூறுவதைக் கேட்டால் சிரிப்புதான் வருகிறது. சிறுபிள்ளைத்தனமாக மோடி பேசியிருக்கிறார்.

மோடி சாதியவாதத்தின் வலியை அனுபவித்ததில்லை. அதனால்தான், எங்கள் கூட்டணியை அவர் சாதியோடு இணைத்துப் பேசியுள்ளார். இது முற்றிலும் தவறானதும், முதிர்ச்சியற்றதும் ஆகும். மோடி, தன்னை பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லிக்கொண்டே சாதிய வாதத்துக்குள் ஈடுபடுகிறார்.


மோடி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நரேந்திர மோடி பிறப்பால் பிற்படுத்தப்பட்டவரல்ல. பிறப்பால் பிற்படுத்தப்பட்டவராக இருந்திருந்தால் ஆர்எஸ்எஸ் அவரை பிரதமராக அனுமதித்திருக்காது. கல்யாண் சிங் போன்ற தலைவர்களுக்கு ஆர்எஸ்எஸ் என்ன செய்திருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காக சாதியை இழுக்கும் மோடி அதற்கு பதிலாக உண்மையிலேயே குஜராத்தில் என்ன நடக்கிறது என்று நேரில் சென்று பார்க்க வேண்டும்.

அங்கு தலித் மக்கள் கவுரவமான வாழ்க்கையை நடத்த முடியாது என்பது எனக்குத் தெரியும். ஒரு தலித் தன்னுடைய திருமணச் சடங்கிற்காகக் கூட குதிரையில் சவாரி செய்ய முடியாத கேவலமான நிலைதான் அங்கு உள்ளது. தலித்துக்கள் மீதான அட்டூழியங்கள் குஜராத்தில் அதிகம்.


வாக்குப்பதிவு தங்களுக்கு சாதகமாக இல்லை என்பதை அறிந்துகொண்ட விரக்தியில் பிரதமர் மோடி இருக்கிறார். அதனாலேயே அபத்தமான குற்றச்சாட்டுக்களை எல்லாம் அவர் கூறிவருகிறார். பாஜக மீண்டும் அதிகாரத்திற்கு வரப்போவதில்லை; மீண்டும் பிரதமர் என்ற மோடியின் கனவும் நிறைவேறப் போவதில்லை.

இவ்வாறு மாயாவதி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

;