பொருளாதாரம்

img

வேலையின்மை அதிகளவில் உள்ள 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பாஜக-வால் ஆளப்படுகின்றன - சி.எம்.ஐ.இ

இந்தியாவில் அதிகளவில் வேலையின்மை உள்ள 10 மாநிலங்களில் 6 மாநிலங்கள் பாஜக-வால் ஆளப்படுகின்றன என்று சி.எம்.ஐ.இ அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

நாட்டில் கடுமையான பொருளாதார வீழ்ச்சி காணப்படும் நிலையில், வேலையின்மை குறித்த அறிக்கை ஒன்றை சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவில் அதிகளவில் வேலையின்மை காணப்படும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், வேலையின்மை அதிகம் உள்ள மாநிலமாக 31.2 சதவீதத்துடன் திரிபுரா முதலிடத்தில் உள்ளது. இதை அடுத்து, வேலையின்மை தில்லியில் 20.4 சதவீதமும்,  ஹரியாணாவில் 20.3 சதவீதமும், இமாச்சல பிரதேசத்தில் 15.6 சதவீதமும், பஞ்சாப் மாநிலத்தில் 11.1 சதவீதமும், ஜார்கண்ட்டில் 10.9 சதவீதமும், பீகாரில் 10.3% சதவீதமும், சட்டிஸ்கர் மாநிலத்தில் 8.6 சதவீதமும், உத்திரபிரதேசத்தில் 8.2 சதவீதமும் காணப்படுகிறது.

இவ்வறிக்கையில் பாஜக ஆளும் பகுதியான திரிபுரா, ஹரியாணா, இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட், பீகார் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக வேலையின்மையே நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், தென் மாநிலங்களில் கேரளாவில் 5.4 சதவீதமும், கர்நாடகாவில் 3.3 சதவீதமும், தமிழகத்தில் 1.8 சதவீதமும், புதுவையில் 0.8 சதவீதமும் வேலையின்மை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதம் சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள வேலையின்மை குறித்தான அறிக்கையில், மூன்று வருடத்தில் இல்லாத அளவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வேலையின்மை 8.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 2% அதிகரித்துள்ளதாகவும், இது இந்தியா அதிகளவிலான வேலை நெருக்கடியை சந்திருப்பதையே கூறியிருந்தது.

இதே என்.எஸ்.எஸ்.ஒ-வின் அறிக்கையின் படி, கடந்த 2017 - 2018ம் ஆண்டு தொழிலாளர் கணக்கெடுப்பு வேலையின்மை விகிதம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், இது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான நிலையினை எட்டியது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2011 - 12 மற்றும் 2017 - 18க்கு இடையே தொழிலாளர்களின் எண்ணிக்கை 47 மில்லியனாக சுருங்கி விட்டதாகவும், இதே வேலை தேடும் மக்கள் எண்ணிக்கை கடந்த 2011 - 12ல் 55.9% மாக இருந்ததாகவும், இதே 2017 - 2018ல் 49.5 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

;