பொருளாதாரம்

img

ஜூலை மாதத்தின் பயணிகள் வாகன விற்பனை 31 சதவீதம் சரிவு

ஜூலை மாதத்தின் பயணிகள் வாகனங்களின் விற்பனை 30.98 சதவீதம் சரிந்துள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 9 மாதங்களாக வாகன விற்பனை மற்றும் உற்பத்தி வீழ்ச்சியால் இந்திய ஆட்டோமொபைல் துறை கடுமையான இழப்பைச் சந்தித்து வருகிறது. அத்தோடு, ஆட்டோமொபைல் துறையில் வேலை இழப்பும் அதிகரித்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 2 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விற்பனை குறைந்துள்ளதால் பல நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் பொதுமக்கள் பயன்படுத்தும் கார், பைக் போன்ற பயணிகள் வாகனங்களின் விற்பனை குறித்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ஜூலை மாதம் அனைத்து ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களும் மொத்தமாகச் சேர்த்து 2,00,790 வாகனங்களை விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயணிகள் வாகனங்களின் விற்பனை 30.9 சதவீதம் சரிந்துள்ளதாகவும், இருசக்கர வாகனங்களின் விற்பனை 16.8 சதவீதமும், கார் விற்பனை 36 சதவீதமும் சரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், ஜூலை மாதத்தில் வாகனங்கள் 122,956 என்ற அளவில் மட்டுமே விற்பனையாகியுள்ளதாகவும், சரக்கு வாகன விற்பனையும் 25.7 சதவீதம் குறைந்துள்ளதாகவும், பயணிகள் வாகன உற்பத்தி 17 சதவீதம் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பொருளாதார மந்தநிலை, அதிக ஜிஎஸ்டி, மத்திய அரசு ஊக்குவிக்கும் எலெக்ட்ரிக் வாகனப் போன்ற பல்வேறு காரணங்களால் வாகன விற்பனை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், விற்பனை குறைந்ததால், பல நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகளை மூட வேண்டிய கட்டாயத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

;