பொருளாதாரம்

img

குமுறும் மொத்த வியாபாரிகள், தள்ளாடும் சில்லரை வர்த்தகம்

மதுரை,மார்ச் 31- கொரோனா தாக்குதலால் மத்திய-மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பதை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக சுயவிலக்கம் அவசியம். ஒன்று கூடல் தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக தமிழகத்தில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.  எனினும், மதுரை மாநகரில் காவல்துறையின் நடவடிக்கையால் மொத்த வியாபாரிகள் பொருட்களை இரண்டாம் கட்ட வர்த்தகர்களுக்கு கொடுக்க முடியவில்லை. இதனால் சாதாரண ஏழை-எளிய, நடுத்தர மக்களின் கைகளுக்கு பொருட்கள் போய்ச்சேரவில்லை.  மதுரையின் முக்கிய வியாபாரத் தலங்கள் சித்திரக்காரத்தெரு, கீழவெளி வீதி, கீழமாசி வீதி. இங்குதான் மொத்த வியாபாரிகளும், சில்லரை பலசரக்கு வர்த்தகர்களும் உள்ளனர். இங்கிருந்து பொருட்களை வாங்கிச்சென்று தான் மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து சிறு கடைக்காரர்களும் வியாபாரம் செய்கிறார்கள். ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் பெரும்பாலான சிறிய பலசரக்குக்கடைகளில் பொருட்கள் இல்லை என்ற நிலை வந்துவிட்டது, இன்னும் மூன்று நாட்களில் பலசரக்குகள் கிடைப்பது என்பது குதிரைக்கொம்புதான். இதுகுறித்து மதுரை நகரின் முக்கிய வர்த்தகர் ஒருவரிடம் பேசியபோது, விவசாயம்- இடுபொருட்கள்- விவசாயிகள்- உற்பத்தி, ஆலைகள்-மொத்த வியாபாரிகள்-சிறுவர்த்தகர்கள்-சில்லரை வியாபாரிகள்-மக்கள் இதுதான் சுழற்சி முறை. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் இந்த சுழற்சி அறுந்துவிட்டது. சில்லரை வர்த்தகர்களிடம் பொருட்கள் இல்லை. மொத்த வியாபாரிகளிடம் பொருட்கள் உள்ளது. இதை அடுத்த கட்ட நிலையிலுள்ள வர்த்தகர்களுக்கு கொண்டு செல்லமுடியவில்லை. இந்த இடத்தில்தான் காவல்துறையின் தொலைநோக்குப் பார்வையும், சரியான திட்டமிடலும் அவசியமாகிறது. இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்கின்றனர். எங்களால் அனைத்து இரண்டாம் கட்ட வியாபாரிகளுக்கும் பொருட்களை கொடுக்கமுடியவில்லை.  பருப்பு ஆலைகள், மாவு மில்கள், அரிசி ஆலைகள்  உற்பத்தியை நிறுத்திவிட்டன. 144 தடையுத்தரவு நீடித்தால் மொத்த வியாபாரிகள் முதல் மக்கள் வரை பெரும் சிரமத்தைச் சந்திப்பார்கள். தமிழக அரசின் அறிவிப்பிற்கும் காவல்துறையின் நடைமுறைச் செயல்பாடுகளுக்கும் தொடர்பில்லையோ என்று கருதவேண்டியுள்ளது என்றார். அரிசி ஆலை உரிமையாளர் ஒருவரிடம் பேசியபோது, ஆலைகளில் அரிசி போதுமான அளவு இருப்பு உள்ளது. இதை மூடையாக தயாரித்து லாரிகளில் ஏற்றி  வியாபாரிகளுக்கு கொண்டு செல்வது அவசியம். இதற்கு வழியில்லை. காவல்துறை கெடுபிடியால் ஆட்களும் வேலைக்கு வருவதில்லை. ஆலையின் காவலாளியை மற்றொரு காவலாளி சென்று மாற்ற முடியவில்லை. ஒரு ஆலைக்கு குறைந்தது பத்து தொழிலாளர்கள் வருவதற்கு அனுமதித்தால் அரிசி தட்டுப்பாடு வராது என்றார். சில்லரை வர்த்தகர் ஒருவரிடம் பேசியபோது, என்ன சார் காலை ஆறு மணி முதல் பிற்பகல் 2.30 மணி வியாபாரம் செய்யலாம் என்கிறது காவல்துறை. இது சில்லரை வியாபாரிகளுக்கு மட்டும்தானாம். மதுரை நகரில் வியாபாரம் செய்பவர்கள் இரவு 11 மணி முதல் மறுநாள் காலை ஐந்து மணி வரை வியாபாரம் செய்யவேண்டுமென்கின்றனர். ஐந்து மணிக்கு மேல் வியாபாரிகள் பணம் கொடுக்கவோ, ஏற்கனவே ஆர்டர் கொடுத்திருந்த பொருட்களை வாங்கவோ காத்திருப்பார்கள். கடை என்றால் நான்பேர் இருக்கத்தான் செய்வார்கள். இதற்காக 144 தடையுத்தரவை மீறியதாக கடைகளில் நோட்டீஸ் ஒட்டிவிட்டார்கள். இப்படி சுமார் 10 கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. லாரி வாடகையுடன் 5.500 ரூபாய்க்கு பருப்பை கொள்முதல் செய்துவிடுவோம். இப்போது லாரி வாடகையுடன் சேர்த்து ரூ.6 ஆயிரம் முதல் ரூ.6,500 வரை செலவாகிறது. அப்படியே பொருட்கள் வந்தாலும் அதை சிறு வியாபாரிகளுக்கு கொடுக்கமுடியவில்லை. காவல்துறை கெடுபிடிதான் காரணம். உதாரணத்திற்கு ஒரு வியாபாரி மதுரை சித்திரக்காரத் தெருவிலுள்ள மொத்த கடைக்கு வந்து 10 மூடை பருப்பு வாங்குவதற்கு அதிகபட்சம் 20 நிமிடம் தான் ஆகும். ஆனால் இப்போது பழைய சிந்தாமணி தியேட்டர் (ராஜ்மஹால்) அருகில் வாகனங்களை நிறுத்தி விட்டு இரண்டு தெருக்கள் தாண்டி வந்து மூடையை தூக்கிச்செல்ல வேண்டும். இதனால் காலவிரயம் ஆவதோடு பொருட்கள் இருந்தும் வழங்க முடியாத நிலை உள்ளது என்றார். மொத்தவியாபாரிகள்,  இரண்டாம் கட்ட வியாபாரிகள், சிறுவர்த்தகர்கள் இவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியர் தான்.  விவசாயம் தொடங்கி நுகர்வோர் வரையிலான கண்ணி அறுந்துவிடாமல் கடைக்கோடி கிராமத்தில் உள்ளவருக்கும் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மதுரை மாநகர் வர்த்தகர்களே இப்படி தவித்தால், கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு மஞ்சளும், சீரகமும், கடலைமாவும், கடுகும் எங்கே கிடைக்கும்? கொரோனா பாதிப்பு சமயத்தில் காவல்துறை திட்டமில்லா நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்படலாமா? காவல்துறையிடம் எஞ்சியுள்ள நாட்களை கடத்துவது  பெரும் சிரமம்தான் என்கின்றனர் வர்த்தகர்கள்.

;