பொருளாதாரம்

img

எச்டிஎப்சி எனும் ஒரு கொரோனோ வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

 மதுரை, ஏப்.1- கொரோனோ தாக்கத்தால் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் பெற்ற எல்லாவிதமான கடன்களுக்கும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான மாதாந்திர தவணைத் தொகையை (இஎம்ஐ) கட்டவேண்டாமென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த மூன்று மாத தவணைத் தொகையை பின்னாளில் செலுத்த வேண்டும். இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கிலிருந்து மாதந்திர தவணைத் தொகை (இஎம்ஐ) எடுப்பதற்கான முன் அழைப்பு குறுந்தகவலை அனுப்பியுள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் சிறு, குறு தொழில்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் தான் ரிசர்வ் வங்கி மக்களின் சிரமத்தைக் குறைக்க மாதாந்திர தவணைத் தொகை செலுத்துவதிலிருந்து விலக்களித்துள்ளது. இதனால் எப்டிஎப்சி உள்ளிட்ட பல்வேறு நிதி நிறுவனங்களில் கடன் பெறுபவர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டிருந்தனர்.

இந்த நிலையில் எச்டிஎப்சி வங்கி ஏப்ரல் மாதத்திற்காக தொகையை உங்கள் கணக்கில் இருப்பு வையுங்கள் அதிலிருந்து எடுத்துக்கொள்வோம் என தகவல் அனுப்பியுள்ளது. எச்டிஎப்சி வங்கியில் பிரதிமாதம் 5, 7 ஆகிய தேதிகளில் பணம் செலுத்தவேண்டியவர்களுக்கு இந்தத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கியே ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை மதிக்கவில்லையெனில் சுயஉதவிக்குழுக்களுக்கு பணம் வழங்கியுள்ள மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் என்ன செய்யப்போகின்றன என்பதுதான் கேள்வி? கொரோனாவிட விட கொடியதாக உள்ளது எச்டிஎப்சி வங்கியின் அதிர்ச்சியூட்டும் தகவல். இந்தப்பிரச்சனை குறித்து தணிகைமணி என்ற புகைப்படக் கலைஞர் கூறுகையில். கொரோனாவால் சுப நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எங்களுடைய வாழ்வாதாரமே  வீடியோ, புகைப்படம் எடுப்பது தான். மதுரை மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொழில் ஈடுபட்டுள்ளனர்.

90 சதவீதம் பேர் வங்கிகளில் கடன் பெற்று தான் தொழில நடத்தி வருகின்றனர் தொழில் நெருக்கடியில் உள்ள எங்களை வதைப்பது நியாயமாக இல்லை என்றார். பார்த்தசாரதி என்பவர் கூறுகையில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீடியோ தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். எங்கள் தொழில் கையிருப்பு வைத்து செய்யக்கூடிய தொழில் அல்ல. வங்கிகள், தனியார் நிறுவனங்கள் மூலமாக கடன் பெற்றுத்தான் தொழில் நடந்துவருகிறோம். வருடத்திற்கு ஆறு மாதங்கள் தொழில் இருக்கும். ஆறு மாதம் கடும் நெருக்கடிக்கு உள்ளாவோம். கொரோனா-வால் தொழில் முடங்கியுள்ளது. மத்திய -மாநில அரசுகள் அறிவித்தபடி தனியார் வங்கி நிறுவனங்கள் தங்களுடைய கடன் தவணையை மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும். மீறும் வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.

;