பொருளாதாரம்

img

பிரச்சனையை ஒப்புக் கொள்ள மறுப்பதுதான் பெரிய தவறு.... பொருளாதார மந்த நிலை விஷயத்தில் மோடி அரசை சாடிய மன்மோகன் சிங்

புதுதில்லி:
பிரச்சனைகளை ஒப்புக்கொள்ளாமல், அதற்கு சரியான தீர்வுகளை கண்டுபிடிக்க முடியாது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோடி அரசுக்கு புத்திமதி கூறியுள்ளார்.திட்டக்குழுவின் முன்னாள் துணைத்தலைவரும், பொருளாதார வல்லுநருமான மாண்டேக் சிங் அலுவாலியா எழுதிய ‘பின்புலம்’ (Back stage) என்ற பொருளாதார நூலின் வெளியீட்டு விழா, தில்லியில் நடந்தது. அப் போது நூலை வெளியிட்டுப் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மேலும் கூறியிருப்பதாவது:

மாண்டேக் தனது புத்தகத்தில், 2004-2014 முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் நல்லமற்றும் பலவீனமான புள்ளிகளையும் சுட்டிக் காட்டியுள்ளார். இந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.ஏனென்றால், இந்தியாவின் வளர்ச்சிவிகிதம் நடப்பு நிதியாண்டில், கடந்த6 ஆண்டுகளில் இல்லாத, வீழ்ச்சியாக, 5 சதவிகிதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் பொருளாதாரம் 5 சதவிகிதம், இரண்டாவது காலாண்டில் 4.5 சதவிகிதம் என்றஅளவிலேயே வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் மந்தநிலையில் உள்ளது. ஆனால் இப்போதுஉள்ள மத்திய அரசு, மந்தநிலை என்றஒன்று இருப்பதையே ஒப்புக் கொள்ளமறுக்கிறது. இது நமது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்று நான் நினைக்கிறேன். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நீங்கள் அடையாளம் காணவில்லை எனில், அந்த பிரச்சனைகளைக் களைவதற்கு நம்பகமான தீர்வைக் கண்டுபிடிக்க முடியாது. அதுதான், உண்மையான ஆபத்து. 

2024-25 நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலர் (ரூ.350 லட்சம் கோடி) அளவுக்கு உயர்த்தப்போவதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், மாண்டேக் சிங் அலுவாலியா,தனது புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளபடி, அதற்கு வாய்ப்பு கிடையாது. விவசாயிகளின் வருமானம் மூன்று ஆண்டு காலத்தில் இரட்டிப்பாகும் என்றுஅரசு கூறுகிறது. அது நடக்கும் என எதிர்பார்க்க எந்த காரணமும் நம்மிடம் இல்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 8 சதவிகிதமாக உயர்த்த முடியும். ஆனால் நிதிக்கொள் கையில் மறுசீரமைப்பு செய்வதுடன் தைரியமான முறையில் வரி சீரமைப்புகளைச் செய்ய வேண்டும். மாண்டேக் சொல்வது போல், நீங்கள் உண்மையான நிதி வரைபடத்தைப் பார்த்தால், மாநிலங்கள் மற்றும் மத்தியஅரசின் உண்மையான நிதிப் பற்றாக் குறை 9 சதவிகிதம் அதிகமாக உள்ளது. இது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 9-லிருந்து 10 சதவிகிதம் வரை செல்வதற்கு தடையாக அமைந்து விடும். வளர்ந்து வரும் நமது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இப்படி இருப்பது நல்லதல்ல. பொருளாதாரத்தை வேகம்பிடிக்க வைக்க, மத்திய அரசு, தனது செலவீனங்களை உயர்த்த வேண்டும். உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி, பாதுகாப்பு ஆகியவற்றில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டும். மேலும் இந்தத்துறைகள் அனைத்துக்கும் கடந்த காலங்களைக் காட்டிலும் அதிக கவனம் தேவை.இவ்வாறு மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

;