பொருளாதாரம்

img

மோடி ஆட்சியில் 3,400 வங்கிக் கிளைகள் மூடல்

புதுதில்லி:
மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில்- அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளுக்குச் சொந்தமான 3 ஆயிரத்து 400 வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ள தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தபின், வங்கிகள் இணைக்கப்படுவதும், கிளைகள் மூடப்படுவதும் தொடர் நடவடிக்கைகளாக மாறியுள்ளன. வராக்கடன்கள், வங்கி மோசடிகளை தடுக்க முடியாத நிலையில், தனது கையாலாகாத்தனத்தை மறைக்க, மோடி அரசு இந்த கண்மறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வங்கிக் கிளைகள் இதுவரை மூடப்பட்டிருக்கின்றன என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுத், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு மத்திய ரிசர்வ் வங்கி தற்போது பதில் அளித்துள்ளது.

அதில், “இந்தியாவில் உள்ள 26 பொதுத்துறை வங்கிகள் 2014-15 முதல் 2018-19 வரையிலான ஐந்து நிதியாண்டுகளில் மொத்தம் 3 ஆயிரத்து 427 வங்கிக் கிளைகளை மூடியுள்ளன அல்லது மற்ற வங்கிக் கிளைகளோடு இணைத்துள்ளன” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இதில் மற்றொரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால், மூடப்பட்ட மொத்த வங்கிக் கிளைகளில் 75 சதவிகித வங்கிக் கிளைகள்- அதாவது 2 ஆயிரத்து 568 வங்கிக் கிளைகள், இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்று கூறப்பட்டிருப்பதாகும்.மேலும், 2014-15ஆம் ஆண்டில் 90 கிளைகளாக துவங்கிய மூடல் நடவடிக்கை, 2015-16ஆம் ஆண்டில் 126 கிளைகள், 2016-17ஆம் ஆண்டில் 253 கிளைகள், 2017-18ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 83 கிளைகள் என்று ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வந்துள்ளது. 2018-19ஆம் ஆண்டில் 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன.பாரதிய மகிளா பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் - ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன. இதேபோல 2019 ஏப்ரல் மாதத்தில் தேனா வங்கியும் விஜயா வங்கியும் பாங்க் ஆப் பரோடாவுடன் இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

;