பொருளாதாரம்

img

இலவச அரிசியுடன் மளிகைப் பொருட்கள் ரேசன் கடைகளில் வழங்க கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்:
நாடு முழுமையான அடைப்பை நோக்கிச் செல்லும் நிலையில் கேரள அரசு இந்த மாதம் 15 கிலோ இலவச அரிசியும் மளிகைப் பொருட்களும் வழங்க புதனன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நீலம், வெள்ளை நிற குடும்ப அட்டைகளுக்கு இந்த மாதம் 15 கிலோ அரிசி வழங்கப்படும். இதன் மூலம் கேரளத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் பயனடையும். பிபிஎல் குடும்ப அட்டைகளுக்கு 35 கிலோ அரிசி வழங்குவது தொடரும். இவர்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய உணவுப்பை இலவசமாக வழங்கவும் பரிசீலிக்கப்படுகிறது. அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய உணவுப்பை கண்காணிப்பில் உள்ள அனைவரது வீடுகளிலும் ஒப்படைக்கப்படும்.   

மாவேலி கடைகள், சப்ளைகோ விற்பனை மையங்கள் மூலமாகஅல்லது பஞ்சாயத்து, நகராட்சி உறுப்பினர்கள் மூலம் நேரடியாக வீடுகளில் ஒப்படைப்பது என்கிற இரண்டு சாத்தியப்பாடுகள் குறித்து பரிசீலித்து வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இது தெரியவரும். ரேசன் கடைகள் மூலம் வழங்கினால் மக்கள் கூட்டமாக வர வாய்ப்புள்ளது என்பதை கருத்தில் கொண்டு அதற்குப் பதிலாக மாற்று வழியை கண்டறிய அரசு முயன்று வருகிறது.ரேசன் கடைகளின் பணிநேரத்தில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்தும் அமைச்சரவை விவாதித்துள்ளது. அதன்படி காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் ரேசன் கடையில் பொருட்கள் வழங்கப்படும். மாநிலத்தில் தேவையான உணவுப் பொருட்கள் பொது வினியோகத் துறை, கன்ஸ்யூமல் பெட் கிடங்குகளில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  

சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் முன்னதாக வழங்கவும், இந்த ஓய்வூதியம் பெறாத குடும்பங்களுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் வழங்க ஏற்கனவே அரசு முடிவு செய்துள்ளது. அதோடு தற்போது உணவு தானியங்கள் விநியோகிக்கும் முடிவை அரசு மேற்கொண்டுள்ளது.

;