பொருளாதாரம்

img

தமிழகத்திற்கு ஒதுக்கிய நிதியை அளித்திடுக மாநிலங்களவையில் எஸ்.முத்துக்கருப்பன் வேண்டுகோள்

மத்திய அரசு, தமிழக அரசுக்கு ஒதுக்கியிருந்த செயல்பாட்டு மானியத்தொகையை (performance grants) முழுமையாக விடுவித்திட வேண்டும் என்று மாநிலங்களவை அஇஅதிமுக உறுப்பினர் எஸ். முத்துக்கருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சனைகளை எழுப்பும் பூஜ்யம் நேரத்தில் எஸ். முத்துக்கருப்பன் பேசியதாவது:

14ஆவது நிதி ஆணையம் தமிழகத்திற்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 365.37 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 414.92 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்திருந்தது.2017-18 மற்றும் 2018-19 ஆகிய இரு நிதி ஆண்டுகளுக்கும் சேர்த்து இவ்வாறு ஒதுக்கியிருந்தது.

2018-19 நிதியாண்டு ஏற்கனவே முடிந்துவிட்டது. நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துமே நிதி நெருக்கடியால் கடுமையாகத் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. தங்களுடைய அன்றாட செலவுகளையே செய்யமுடியாமல் அவதிக்குள்ளாகி இருக்கின்றன. தங்கள் குடிமக்களுக்கு அவற்றால் அடிப்படை வசதிகளைச் செய்து தர முடியவில்லை. இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்பாட்டு மானியத்தொகையை முழுமையாக விடுவிக்காததன் காரணமாக  இவற்றிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

மாநிலத்தில் கடும் வறட்சி நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் அளிப்பதாக உறுதியளித்திருந்த நிதியை தமிழக அரசு மத்திய அரசு விடுவிக்குமானால் அது பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

எனவே மத்திய நிதியமைச்சகம் இதனைச் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு எஸ். முத்துக்கருப்பன் கோரினார்.

(ந.நி.)

;