பொருளாதாரம்

img

திசை தெரியாமல் தத்தளிக்கும் கப்பல்... - சி.ஸ்ரீராமுலு

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். இது எடப்பாடி பழனிசாமி தலை மையிலான அதிமுக அமைச்சரவை சமர்ப்பிக்கும் முழுமை யான கடைசி பட்ஜெட் என்பதால் பல்வேறு ஊகங்களை ஊடகங்கள் வெளியிட்டு வந்தன. 113 பக்கங்களை கொண்ட பட்ஜெட் உரை புத்தகத்தை முழுமையாகப் புரட்டிய போது அரசின் நிதிநிலைமை பெரும் சிக்கலில் இருப்பது நன்றாகத் தெரிகிறது. ஊடகங்கள் ஊதியது போல் கவர்ச்சியும் இல்லை, சத்தும் இல்லை, கெத்தும் இல்லாமல் வெற்று அலங்கார வார்த்தை கள் மட்டுமே அதிகம் இடம் பிடித்திருந்தன.

தேடித்தேடி படித்தாலும் மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் தென்படவில்லை. எதை முதன்மைப் படுத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும்; அதற்கான எந்த ஏற்பாடும் இல்லை.தேசிய சராசரி யைக் காட்டிலும் வேலையின்மை அதிகரித்துள்ளதை ஒப்புக் கொண்டாலும் அதற்கான தீர்வு எதுவும் சொல்லப்படவில்லை.

பூதக்கண்ணாடி கொண்டு தேட ...

கல்வி, சுகாதாரம், விவசாயத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப் பட்டதாகக் கூறிக் கொண்டாலும், சிறு குறு தொழில்களுக்கு நிதி அதிகமாக ஒதுக்கி ஊக்கப்படுத்தி வேலையின்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் கிடையாது. மழை, புயல், வெள்ளம், வறட்சி ஆகிய இயற்கை இடர்ப்பாடு களைச் சமாளிக்க தமிழக அரசு கூறிய நிதி எவ்வளவு?  உடனடித் தேவைக்காக கொடுத்த நிதி, மறு கட்டுமானங்க ளுக்காக மாநில அரசு தயார் செய்து அளித்த பட்டியல், மத்திய  அரசு கொடுத்த நிதி எவ்வளவு? புதிய திட்டங்கள் ஏதாவது இருக்குமா என்று பூதக் கண்ணாடியைக் கொண்டு தேட வேண்டியிருக்கிறது.

சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் செய்யப்பட்ட  அறிவிப்பு களின் நிலை ஒதுக்கப்பட்ட நிதி குறித்து ஏதாவது சொல்லப் பட்டிருக்குமா என்றால் அதுவும் கிடையாது. சலுகைகளை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், மாற்றுத்திறனா ளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைக்கும் ‘யானைப் பசிக்கு சோளப்பொரி’யாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

காலி டப்பாவும்  கடன் தொகை உயர்வும்

“மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் கடன் சுமை அதிகரிக்கத்தான் செய்யும். எந்த ஒரு அரசும் கடன் இல்லாமல் அரசை வழி நடத்த முடியாது. மாநில அரசின் வருமானத்தில் இருந்து இது சரி செய்யப்படும்” என கடந்த நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது அன்றைய நிதித்துறை செயலாளரும் இன்றைய தலைமைச் செயலாளருமான க. சண்முகம் தெரிவித்தார். ஒரு வாதத்திற்கு இது உண்மை என்று எடுத்துக் கொண்டா லும், கடந்த முறை தமிழக அரசின் கடன் சுமை 3 லட்சத்து 55 ஆயிரத்து 844 கோடியாகும். ஆனால், இந்த முறை அந்தக் கடன் 4 லட்சத்து 57 கோடியாகும். ஓராண்டில் கடன் தொகை ஒரு லட்சம் உயர்ந்திருக்கிறது.

1984-85 ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ. 2, 129 கோடி. அன்றைக்கு முதலமைச்சராக இருந்தவர் எம்ஜிஆர். அவரைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த கருணாநிதி முதல்வராக இருந்தபோது 2000-2001 ஆம் ஆண்டில் அந்த தொகை ரூ.28 ஆயிரம் கோடியாக உயர்ந்தது. பின்னர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த ஜெயலலிதா ஆட்சியில் ரூ. 57 ஆயிரம் கோடியாக கடன் தொகை அதிகரித்தது. எடப்பாடி முதல்வரான போது மாநில அரசின் கடன் தொகை ரூ. 2,52,431 கோடியை எட்டியது. தற்போது கடன் தொகை ரூ.5 லட்சம் கோடியை நெருங்குகிறது. சில ஆண்டுகளாகவே பல்வேறு நிதிப் பிரச்சனைகள் இருப் பினும் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிதிப்பற்றாக்குறை வீதத்தை 3 விழுக்காட்டிற்கு உள்ளாகவே அரசு பராமரித்து வரு கிறது. கடந்த ஆண்டு மாநில அரசின் மொத்த வரவு ரூ‌.2 லட்சத்து 19 ஆயிரம் கோடி என்றும் செலவு  ரூ‌. 2 லட்சத்து 41 ஆயிரம் கோடி என்றும் இதனால் அரசுக்கு ரூபாய் 21 லட்சத்து 618 கோடி பற் றாக்குறை என்றும் நிதியமைச்சரே ஒப்புக் கொண்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் பற்றாக்குறையும் கடன் நிலுவைத் தொகையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது நிதி நிலைமை மிக மோசமாக அபாயக் கட்டத்தில் உள்ளது. வாங்கிய கடனுக் காக 37 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி கட்டி வருகிறார்கள். இதனால் தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் 57 ஆயிரம்  ரூபாய் கடனாளி களாக மாற்றியிருக்கிறது எடப்பாடி அரசு.

விரலுக்கேற்ற வீக்கமா?

“வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தும் தமிழகம் போன்ற மாநிலங்களில் வருவாய் பற்றாக்குறையே இல்லாமல் இருக்காது. வரி வருவாய் உள்ளிட்ட வளர்ச்சி விகிதங்களை 10 முதல் 12 விழுக்காட்டிற்குள்ளாகவே   ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்ற அடிப்படையில் மதிப்பீடு தயார் செய்துள்ளோம். இதனால் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 25 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும் என்ற கடன் அளவையும் தாண்டவில்லை. கட்டுக்குள் தான் வைத்திருக்கிறோம். 23.4 விழுக்காட்டிற்குள் கடன் வாங்கியிருக்கிறோம். வருவாய்ப் பற்றாக்குறையை அடியோடு போக்க முடியாது” என்று நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன் கூறுவது “கடனுக்கு அட்டிகை வாங்கி வட்டிக்கு அட்டிகையை விற்றது” என்னும் கிராமத்து பழமொழி ஞாபகப்படுத்துகிறது.

எஜமான விசுவாசம்

உலக மற்றும் இந்தியப் பொருளாதாரச் சூழலில் வீசும் எதிர்காற்றை தமிழ்நாடும் எதிர்கொண்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழகத்திற்கு ரூபாய் 74 ஆயிரத்து 304 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நிதிக் குழு பரிந்துரைத்த நிலை யில் மத்திய அரசு தனது நிதிநிலை அறிக்கையில் ரூ.30,000 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. மானியத் தொகையை முழுமையாக பெறுவதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தும்.

ஜிஎஸ்டியை அமல்படுத்தும் போது மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடுசெய்ய கடமைப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு வழங்கப்படவேண்டிய இழப்பீட்டை எக்காரணம் கொண்டும் குறைக்கக் கூடாது என்று நிதியமைச்சர் பன்னீர்செல்வம் மத்திய அரசுக்கு மென்மை யாக கோரிக்கை  விடுத்திருக்கிறார். ஜிஎஸ்டியால் மாநில அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்தால் மட்டுமே மத்திய அரசுக்கு ஆதரவு கொடுக்கும் என்றார் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்திற்குள் நடத்திய ‘ரெய்டு’  மூலம் எடப்பாடி தலைமையிலான அமைச்சரவையை தங்களின் அடிமை களாக மாற்றியது மத்திய பாஜக அரசு.

உணவுப் பாதுகாப்புச் சட்டம், ஜிஎஸ்டி, நீட், புதிய தேசிய கல்விக் கொள்கை, குடியுரிமை திருத்தச் சட்டம் என தமிழக மக்களுக்கு எதிராக மோடி அரசு கொண்டு வந்த அனைத்தையும் நிறைவேற்றும் ‘சோதனைக் களமாக’ களமாக மாறியுள்ளது தமிழகம்.

இணக்கத்துக்கான பரிசா?

பல திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டபடி நிதியை ஒதுக்கவில்லை என்பது ஒருபுறமிருக்க தமிழ்நாட்டின் பங்காக வழங்கப்படும் நிதிப் பகிர்வுகளும் வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக,  2019 -20 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தமிழக அரசுக்கு மத்திய வரிகளின் பங்காக கிட்டத்தட்ட 34 ஆயிரம் கோடி என அறிவித்த மத்திய அரசு, திருத்திய மதிப்பீட்டில் 26 ஆயிரம் கோடி ரூபாயாக வெட்டிவிட்டது. மத்திய வரி வசூல் எதிர்பார்த்த அளவை விட  ஆண்டுக் காண்டு தமிழ்நாட்டிற்கு குறைவாகவே  கிடைக்கிறது. குறிப்பாக, 2018-19 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளை விட  வரி வசூல் வெகுவாகச் சுருங்கிவிட்டது.

2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய வரி வசூலில் தமிழ கத்திற்கான பங்கு ரூ.2,368 கோடி குறைந்து விட்டது. கடந்த 2 ஆண்டில் மட்டும் மத்திய வரி வசூல் பங்கில் தமிழகத்திற்கு ஒட்டு மொத்தமாக ரூ. 7 லட்சத்து 58 ஆயிரத்து 86 கோடி குறைத்து பற்றாக்குறையை அதிகரிக்கச் செய்ததுதான் மத்திய அரசோடு இணக்கமாக செயல்படும் மாநில அரசுக்கு கொடுத்த பரிசாகும்! அமைச்சர் பதவி மூலம் சேர்த்த சொத்துக்களையும் அந்தப் பதவியையும் பாதுகாத்துக் கொள்ள பாஜகவின் வலையில் சிக்கிக்கொண்டனர். அதிமுகவினர் இதை திரையிட்டு மூடி மறைப்பதற்கு தேடிய காரணம் தான், மத்திய அரசோடு மாநில அரசு ஒருங்கிணைந்து செயல்படுவது. ஆனால் அதனால் பாலாறும் தேனாறும் வழிந்து ஓடவில்லை என்பது இந்த பட்ஜெட் மூலம் நிரூபணமாகி இருக்கிறது.

அனைத்து வகையிலும் முழு ஆதரவை கொடுத்துவரும் தமிழக அதிமுக அரசுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய பங்குத் தொகையைக் கூட வழங்காமல் கடன் சுமையை அதிகரித்துவரும் மத்திய பாஜக அரசாங்கத்தையும் பிரதமர் மோடியையும் கண்டிக்கும் துணிவு இல்லாத தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை என்பது  திசை தெரியாமல்  தத்தளிக்கும் கப்பலில் பயணம் செய்வது போன்றதாகும். 

;