பொருளாதாரம்

img

கடன் கொடுப்பதும் தவணையை தள்ளி வைப்பதும் சலுகை அல்ல

அரசு சில பொருளாதார அறிவிப்புகளை சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு  அறிவித்துள்ளது. பொருட்களை தயாரித்து என்ன செய்வது? அதை வாங்க மக்களிடம் பணம் வேண்டாமா? வாங்கும் சக்தி மக்களிடம் இல்லாமல், தொடர் உற்பத்தியும் மிகப்பெரிய பொருளாதார அழிவை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர வேண்டும். கடன் கொடுப்பது, கடன் தவணையை தள்ளி வைப்பதும் சலுகை அல்ல. மேலும் அதிகச்சுமை. கடன் கொடுத்து, இது போன்ற அசாதாரணமான நாட்களில் வட்டியை தள்ளுபடி செய்வதும், மானியங்கள் தருவதும் தான் சலுகைகள். வருமான வரி தாக்கலை தள்ளி வைப்பது சலுகை அல்ல. வரி போடாமலிருப்பதுதான் சலுகை.

13.05.2020 ஆம் தேதியைத் தொடர்ந்து 14.05.2020 அன்று மத்திய நிதியமைச்சர் பல திட்டங்களை அறிவித்துள்ளார். அத்தனையும் கடன்கள். நபார்டு வங்கி மூலம், முன்பு உள்ள கடன் தொகையுடன் மேலும் 30000கோடி மூன்று கோடி சிறு விவசாயிகளுக்கு கடன் தர முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது ஒரு விவசாயிக்கு 10000 ரூபாய் கடன். ஏற்கெனவே விவசாயிகள் கடனால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இது மேலும் மேலும் விவசாயிகளுக்கு சுமையைத்தான் ஏற்படுத்தும். விவசாயிகளின் பழைய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய கடனை வட்டியில்லாமல் தர வேண்டும். அல்லது பணப்பயிர்களுக்கு மட்டும் குறைந்த வட்டியில் கடன் தரலாம். மேலும் விவசாயிகளின் குறை தீர்க்க, ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு குழு அமைக்க வேண்டும். இயற்கைச் சீற்றம் ஏற்பட்டு, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டால், குழுவின் பரிந்துரைப்படி அந்த கடனை ரத்து செய்து புதிய கடன் தரவேண்டும். இப்படி செய்தால் மட்டுமே விவசாயிகளை காப்பாற்ற முடியும்.

காரணம் ஒரு சிறு மற்றும் பிற தொழில்  உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி பொருட்களை மூலப்பொருட்களாகவோ, இறுதி பொருட்களாகவோ ஓரளவிற்கு பாதுகாக்க முடியும். விவசாயியின் பொருள், ஸ்டாக் அதாவது இருப்புச்சரக்கு என்றும் பூமி தான். விதையை பூமியில் போடவேண்டும். உழைப்பை பூமியில் போட வேண்டும். உரத்தையும் பூமியில் போட வேண்டும். வறட்சியால் அல்லது மழை வெள்ளத்தால் சேத மடைந்தால், விவசாயியின் அத்தனை ஸ்டாக்கும் அதாவது மூலப்பொருள், இறுதிப்பொருள் அனைத்தும் மண்ணோடு மண்ணாய் அழிந்து விட, எப்படி கடனை கட்ட முடியும். இதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  விவசாயத்தை புதிய கண்ணோட்டத்துடன் இயற்கை பேரிடர்களை கணக்கில் கொண்டு எழுத வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே விவசாயிகள் மீது மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் பழைய கடன்களை தள்ளுபடி செய்து புதிய கடன்களை வழங்கி அவர்களது விளைபொருட்களை நேரடியாக அரசே கொள்முதல் செய்ய உத்தரவாதம் அளிக்கவேண்டும்.

-கோ.வி. சேகர்

;