பொருளாதாரம்

img

உள்நாட்டு கார் விற்பனை 41 சதவீதம் சரிவு!

 41 சதவீதம் சரிவு

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில், மோசமாகியுள்ள உள்நாட்டு கார் விற்பனை, தொடர்ந்து 10வது மாதமாக சரிந்துள்ள நிலையில், கடந்த மாதத்தில் மட்டும் கார் விற்பனை 41 விழுக்காடு அளவுக்கு குறைந்து விட்டது. இந்தியாவின் ஆட்டோ மொபைல் துறை மந்த நிலையை சந்தித்துள்ளது. சந்தையில் கிராக்கி குறைந்த காரணத்தால் கார்கள் விற்பனை சரிவைச் சந்தித்துள்ளது. மாருதி சுசுகி, ஹூண்டாய் மோட்டார், ஹோண்டா, டாடா ஆகிய நிறுவனங்களின், பயணியர் மற்றும் சரக்கு வாகனங்களின் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 2 லட்சத்து 87 ஆயிரத்து 198 ஆக இருந்த உள்நாட்டு பயணியர் வாகன விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் ,ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 524 ஆக குறைந்து விட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்டில் 1,96,847 ஆக இருந்த உள்நாட்டு கார் விற்பனை, இந்த ஆண்டு ஆகஸ்டில் 1 லட்சத்து 15,957 ஆக சரிந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் 41.09 விழுக்காடு சரிவு எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இதுதவிர, மோட்டார் சைக்கிள் விற்பனை யானது, 22.33 விழுக்காடு அளவுக்கு குறைந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் 12 லட்சத்து 7,005 மோட்டார் சைக்கிள்கள் விற்பனையானதாகவும், இந்த ஆண்டு ஆகஸ்டில் 9 லட்சத்து 37,486 மட்டுமே விற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. சரக்கு வாகனங்களின் விற்பனையும் 38.7 விழுக்காடு குறைந்து விட்டதாகவும், ஏற்றுமதியைப் பொறுத்தவரை 4.2 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளதாகவும், இது 2.4 விழுக்காடு அதிகம் எனவும் இந்திய ஆட்டோமொபைல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

;