பொருளாதாரம்

img

உலகின் பொருளாதார வலிமைமிக்க நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு பின்னடைவு

உலகில் பொருளாதார வலிமைமிக்க நாடுகளின் பட்டியலில், இந்தியா 7வது இடத்திற்கு பின்னுக்கு சென்றுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான பொருளாதார வலிமைமிக்க நாடுகளின் பட்டியலை, உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், அமெரிக்கா  20.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இதை அடுத்து, சீனா 13.6 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் 2வது இடத்திலும், ஜப்பான் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் 3வது இடத்திலும், ஜெர்மனி 4 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடனும் 4வது இடத்திலும் உள்ளன. 

இதை தொடர்ந்து, இந்தியாவை பின்னுக்குத் தள்ளி 2.8 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்துடன் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் 5 மற்றும் 6வது இடத்தை பிடித்துள்ளன. கடந்த 2017-ஆம் ஆண்டு 6வது இடத்தில் இருந்த இந்தியா, 2018-ஆம் ஆண்டில் 7வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறைந்து இருப்பதால் பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னடைவை சந்தித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வலிமை 2.7 லட்சம் கோடி டாலராகும். ஒரு ஆண்டில் 50 ஆயிரம் கோடி டாலர் மட்டுமே இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளது. 

பொருளாதார வளர்ச்சித் தளர்வு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவையே இந்தியா பின்னடைவை சந்திக்க காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். 

;