பொருளாதாரம்

img

‘Baa2’ தரநிலைக்கு சரிந்தது, இந்திய பொருளாதாரம்!

அதிர்ச்சியளிக்கும் மூடிஸ் அறிக்கை

புதுதில்லி, நவ. 8 - இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியா வின் கடன் மதிப்பீட்டு நிலையை மூடிஸ் (Moody’s) நிறுவனம் வெகுவாக குறைத்துள்ளது. முதலீட்டுத் தகுதிக்கான தரநிலையில், இரண்டாவது மிக மோசமான தரநிலைப் புள்ளியான ‘Baa2’-வை  இந்தியாவுக்கு ‘மூடிஸ்’ வழங்கியுள்ளது. இது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச நாடுகளின் கடன் மதிப்பீட்டு நிலை தொடர்பாக ‘மூடீஸ் இன்வெஸ்டார்ட்ஸ் சர்வைசஸ்’ நிறுவனம் அவ்வப்போது ஆய்வறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், மூடிஸின் முந்தைய ஆய்வறிக்கைகளில் கடன் மதிப்பீட்டு நிலையில் ’நிலையான’ இடத்திலேயே இந்தியா இருந்தது. ஆனால், தற்போது ‘எதிர்மறையான’ Baa2- என்ற இடத்திற்கு போய்விட்டதாக ‘மூடிஸ்’ கூறியுள்ளது. பொருளாதார மந்தநிலையை சமாளிக்கத் தவறியதே, இந்தியாவின் கடன் மதிப்பீடு குறைந்து போனதற்கு காரணம் என்றும் ‘மூடிஸ்’ தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் மீதான கடன் மதிப்பீட்டு நிலை குறைக்கப்படும்போது அந்நாட்டின் மீது குவியும் முதலீடுகள் குறையும். அந்நிய முதலீட்டாளர்கள் அந்நாட்டின் மீது முதலீடு செய்யத் தயங்குவார்கள். முதலீடு குறைந்தால் தொழில் துறை முடங்கும். இது பொருளாதார வளர்ச்சியை மேலும் சீர்குலைக்கும். வேலையின்மை பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.  அந்த வகையில், ‘மூடீஸ்’ நிறுவனத்தின் இந்த அறிக்கை இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, முதலீட்டுத் தகுதிக்கான தரநிலையில், இரண்டாவது மிக மோசமான தரநிலைப் புள்ளியான ‘Baa2-வை இந்தியாவுக்கு ‘மூடிஸ்’ வழங்கியிருப்பது, இந்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ‘மூடீஸ்’ நிறுவனம் இந்தியாவின் மதிப்பீட்டைக் குறைத்திருந்தாலும், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்வதாகவும், வளர்ச்சிக்கான பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சம் சமாளித்துள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி கொண்டுவந்த பணமதிப்பும், 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமல்படுத்திய ஜிஎஸ்டி வரிவிதிப்பும், கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி படுமோசமான நிலைக்கு கொண்டுசென்று விட்டதையே ‘மூடிஸ்’ அறிக்கை உறுதிப்படுத்தி இருக்கிறது.

;