செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

பேஸ்புக் உலா

img

என்ஐஏ திருத்தங்களின் இரட்டை அபாயங்கள்

என்ஐஏ எனப்பட்ட தேசிய புலனாய்வு முகமையின் அதிகார வரம்பை விரிவுபடுத்தும் திருத்தங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது மோடி அரசு. மூன்று முக்கிய  திருத்தங்கள்: 1. ஆள் கடத்தல், கள்ளநோட்டு அடித்தல், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை தயாரித்தல்-விற்றல், இணைய குற்றம், வெடிகுண்டு விவகாரம் ஆகியவற்றையும் இனி இது  விசாரிக்கும். 2. இவற்றை விசாரிக்கும் என்ஐஏஅதிகாரிகளுக்கு இதர போலிஸ் அதிகாரி களைப் போன்ற அதிகாரங்கள் இருக்கும். 3. அமர்வு நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக நியமிக்கும் அதிகாரம் மத்தியஅரசுக்கு உண்டு.(இண்டியன் எக்ஸ்பிரஸ் 16-7-19)

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளது. ஆனால் இந்தத் திருத்தங்களின் மூலம் அனேகமாக அதைத் தன் கையில் எடுத்துக் கொள்கிறது மத்திய அரசு. முக்கியமான குற்றங்களை எல்லாம் மத்திய அரசு நிறுவனமே விசாரிக்கும், அதன் அதிகாரிகள் எல்லாம் மாநில போலிஸ் அதிகாரிகளே, மாநிலத்தில் உள்ள அமர்வு நீதிமன்றங்கள் இனி  மத்திய அரசு சொல்லும் வழக்குகளில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனும் இந்த  திருத்தங்களின் அர்த்தம் இதுவன்றி வேறு என்ன? உள்ள உரிமைக்கே ஆபத்து என்றால்  "மாநில சுயாட்சி" பற்றி பேச முடியுமோ!

இந்த என்ஐஏ என்பது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டு இப்போது பாஜக  அரசிடம் சிக்கியுள்ளது. இது அதன் அதிகாரத்தை விரிவுபடுத்துவதன் நோக்கம் இரண்டு. ஒன்று, பயங்கரவாதக் கொடூரங்களில் ஈடுபடும் சங் பரிவாரிகளை சிரமமின்றி காப்பாற்றுவது. அந்தப் பரிவாரத்தின் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் பலரையும் மோடி அரசு காப்பாற்றியிருக்கிறது. இதில் அது சந்தித்த பிரச்னைகளை தீர்க்கவே இந்த திருத்தங்கள். மற்றொன்று, அப்பாவி முஸ்லிம்களையும் பயங்கரவாதிகள் எனச் சொல்லி வதைப்பது, அதன் மூலம்  மதப் பிளவை அதிகப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடுவது. ஏற்கெனவே தமிழகத்திலும்  விசாரணை என்ற பெயரில் என்ஐஏ அப்பாவிகளை அவர்கள் முஸ்லிம்கள் என்பதாலேயே  மிரட்டுகிறது எனும் குற்றச்சாட்டு உள்ளதை மனதில் கொண்டால் இந்த கூடுதல் அதிகாரம் கூடுதல் அநீதியாக இருக்கும் என்பதை உணரலாம்.

பயங்கரவாதத்திற்கு எதிராக சட்டப்படியான நடவடிக்கைகள் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்கு ஏற்கெனவே சட்டங்கள் உள்ளன. இந்த புதிய திருத்தங்கள் பயங்கரவாதத்தை 
ஒழிக்க அல்ல; மாறாக, அதில் பாரபட்சம் காட்டி பாஜக தனது மனுவாத மதவெறி அரசியலை  முன்னெடுக்க. மக்கள் ஒற்றுமையில் அக்கறை உள்ள அனைவரும் எதிர்க்க வேண்டிய
அநியாய திருத்தங்கள் இவை. 
Ramalingam Kathiresan

;