செவ்வாய், ஆகஸ்ட் 4, 2020

பேஸ்புக் உலா

img

ஆர் எஸ் எஸ் கற்பனையை நாம் அங்கீகரிக்க முடியாது -வெங்கடேஷ் ஆத்ரேயா

அஞ்சல் துறை நியமனத்திற்கான நுழைவு தேர்வு வினாத்தாள்  இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டதை எதிர்த்த போராட்டம் மத்திய அரசை தற்காலிகமாக  பணிய வைத்துள்ளது. இது தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி மட்டும் அல்ல. அனைத்து தேசிய மொழிகளுக்கும் மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று நாம் பார்க்கவேண்டும். எனினும், கடந்த வாரம் நடத்தப்பட்ட தேர்வு  ரத்து  என மாநிலங்களவையில் அறிவித்த அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அவர்களின் உரை ஆங்கிலம், இந்தி தவிர  இந்திய நாட்டின்  இதர தேசிய மொழிகள் அனைத்தையும் கடுமையாக அவமதித்துள்ளது. அமைச்சர் தனது அறிவிப்பில் இத்தேர்வு அனைத்து "உள்ளூர்" மொழிகளிலும்  நடத்தப்படும் என்று கூறியுள்ளார். ("All Local Languages...") ஒவ்வொரு மாநிலத்தின் பிரதான மொழியையும் பலகோடி மக்கள் தமது தாய் மொழியாக கருதுகின்றனர். தமிழகத்தில் மட்டும் எட்டு கோடி தமிழ் மக்கள் பேசும் தமிழ் மொழியை "உள்ளூர் மொழி" என்று வர்ணிப்பது, அதே சமயம் இந்தியை தேசிய மொழி என்று அங்கீகரிப்பது என்ற ஆணவமான இந்த நிலைபாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த நிலைப்பாடு இந்தியாவை ஒற்றை நாகரீகமாக, ஒற்றை நாடாக, பன்முகத்தன்மையை மறுக்கும் அணுகுமுறை. இது  தான் பாஜகவின் அரசியல் நிலைப்பாடு. 

நாம் மீண்டும் உரக்கச் சொல்லவேண்டும்: இந்தியா என்பது பல தேசிய இனங்கள் விரும்பி இணைந்து வாழும் நாடு. இத்தகைய பன்முகத்தன்மையை கொண்ட ஒரு நாடு திடீரென்று முளைத்து எழுந்துவிடவில்லை, இந்திய ஒன்றியம் என்ற நவீன நாடு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சுதந்திரப்போரில் உருவானது, வரலாறு முழுமைக்கும் இந்தியா ஒரே நாடாக இருந்தது என்ற ஆர் எஸ் எஸ் கற்பனையை நாம் அங்கீகரிக்க முடியாது. விடுதலைப்போராட்டத்தில் எந்தப்பங்கும் ஆற்றாத, வெள்ளை ஏகாதிபத்திய அரசுக்கு வெண்சாமரம் வீசிய இயக்கங்களின் ஆட்சியில் இன்று நாடு பிடிபட்டுள்ளது வருந்தத்தக்கது. துரதிருஷ்டம் என்னவென்றால், இன்று இந்திய அந்நிய ஏகபோகங்கள் இந்தியா முழுவதையும் ஒரே சந்தையாக ஆக்க வேண்டும் என்ற நோக்கில் இருந்து மாநிலங்களின் உரிமைகளை வெட்டுவதற்கும் மத்திய அரசிடம் அதிகாரங்களை குவிக்கவும் தங்கள் முழு வலுவை செலுத்துகின்றனர். நாடு முழுவதும்ஒருகட்சி ஆட்சி  என்ற நிலைபாட்டை இன்றைய ஆளும் கட்சியும் பெருமுதலாளிவர்க்கமும் ஆதரிக்கின்றன. துரதிருஷ்டவசமாக, தாராளமய கொள்கைகள் அமலாக்கப்பட்டதில் இருந்து, மாநில கட்சிகளில் பெரும்பான்மையான கட்சிகள், மாநில அரசின் அதிகாரங்களை பாதுகாக்க முனைப்பு காட்டுவதில்லை. இடது சாரி கட்சிகள் இதில் சரியான நிலை எடுத்துள்ள போதிலும் அவர்கள் வலு நாட்டளவில் வரம்புக்கு உட்பட்டதாகவே உள்ளது.  

மீண்டும் இன்று மத்திய மாநில உறவுகள் என்ற பிரச்சினையை விவாதப்பொருளாக ஆக்கி, இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அதே நேரத்தில், மாநிலங்களின் உரிமைகளையும் மீட்க போராட வேண்டியுள்ளது.

;