பேஸ்புக் உலா

அப்பா உங்கள் அடியாட்களை என் பின்னால் அனுப்பாதீர்கள்-பாஜக எம்எல்ஏ-வின் மகள் கதறல்

“அப்பா, விக்கி, அதாவது மரியாதைக்குரிய எம்எல்ஏ பப்பு பர்தாவுல் ஜி, விக்கி பர்தாவுல் ஜி, ப்ளீஸ் நீங்கள் அமைதியாக வாழுங்கள் எங்களையும் வாழவிடுங்கள். அப்பா நீங்கள் உங்கள் அடியாட்களை…. ராஜிவ் ரானா போன்றவர்களை… என் பின்னால் அனுப்பியிருக்கிறீர்கள். எனக்கு சோர்வாக இருக்கிறது… ஓடிக்கொண்டே இருப்பதில் நாங்கள் சோர்வடைந்திருக்கிறோம், எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. விக்கி, அப்பா அபியையும் அவருடைய உறவினர்களையும் தொந்தரவு செய்வதை நிறுத்துங்கள். நீங்கள் அமைதியாக வாழுங்கள். அரசியலைச் செய்துகொண்டிருங்கள். நான் மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் இருக்க விரும்புகிறேன்.”

இது உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சக்‘ஷி மிஸ்ரா என்ற 23 வயதுப் பெண் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியுள்ள செய்தி.

“இந்த வீடியோ மூலமாக, எதிர்காலத்தில் எனக்கோ அபிக்கோ அவரது குடும்பத்திற்கோ ஏதேனும் நிகழுமானால் எனது தந்தையும் விக்கி பர்தாவுலும் ராஜிவ் ரானாவும்தான் அதற்குப் பொறுப்பு. என் தந்தைக்கு உதவுகிறவர்ளைக் கேட்டுக்கொள்கிறேன், தயவு செய்து அவருக்கு உதவுவதை நிறுத்துங்கள், ஏனென்றால் எங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ப்ளீஸ் அப்பா, உங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள். அபியும் அவரது குடும்பத்தினரும் நல்ல மனிதர்கள், அவர்கள் விலங்குகள் அல்ல,” என்றும் கூறியிருக்கிறார் சக்‘ஷி.

ஆம், நீங்கள் ஊகித்தது போலவே இது சாதி வரப்பு தாண்டிய காதல் இணையரின் கதைதான். ஆம், நீங்கள் ஊகித்தது போலவே பெண்ணின் காதலன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான்.

பப்பு பர்த்தாவுல் என்று குறிப்பிடப்பட்டுள்ள பெண்ணின் அப்பா ராஜேஷ் மிஸ்ரா ஒரு அரசியல்வாதி. அந்த மாநிலத்தின் ஆளுங்கட்சியான பாஜக-வைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்.

நண்பர்கள் துணையோடு இந்த மாதம் 4ம் தேதி ஒரு கோவிலில் சக்‘ஷி மிஸ்ரா, அஜிதேஷ் குமார் இருவரும் திருமணம் செய்துகொண்டார். அப்போதே அவர் தனக்கும் தன் கணவருக்கும் இந்தத் திருமணத்தை ஏற்காத தனது தந்தையிடமிருந்து பாதுகாப்புத் தேவை என்று பதிவிட்டிருந்தார். இன்று (ஜுலை 15) அலகாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில், நீதிமன்றக் கூடத்திற்குள் செல்வதற்கு முன்னதாக, அபி என்ற அஜிதேஷ் குமார் ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். இருவரின் பாதுகாப்புக்காக வந்த காவல்துறையினர் இருந்தபோதே அந்தக் கும்பல் அபியின் கன்னத்தில் மாறி மாறி அறைந்தது. இது பற்றித் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி தனது கோபத்தை வெளிப்படுத்தியதுடன், இணையர் எங்கே வேண்டுமானாலும் செல்வதற்கு உதவும் வகையில் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆணையிட்டிருக்கிறார்.

செய்தியாளர்களிடம் தனது மகளின் குற்றச்சாட்டை மறுத்துள்ள எம்எல்ஏ, இவர்களின் காதலை தான் எதிர்த்தது அஜித்தேஷின் சாதிக்காக அல்ல, மாறாக வயது வேறுபாட்டிற்காகவும் அஜித்தேஷின் குறைந்த வருமானத்துக்காகவும்தான் என்று கூறியிருக்கிறார்.

ஏற்பாட்டுத் திருமணங்களில்தான் வயது வேறுபாடு நிறைய இருக்கிறது என்பது ஒருபுறமிருக்க, 18 வயதுக்குப் பின் எந்த வயதுள்ளவரைக் காதலிப்பது, எவ்வளவு வருமானம் உள்ளவரைக் கரம் பிடிப்பது என்பதெல்லாம் அவரவர் உரிமை. பொதுவான மனித உரிமை மட்டுமல்ல, தெளிவான சட்ட உரிமையும் கூட.

நாட்டில் எங்காவது, கௌரவ மயிறின் பெயரால் நடந்துகொண்டே இருக்கும் சாதி ஆணவப் படுகொலைகளின் பட்டியலில் சக்‘ஷி-அஜித்தேஷ் பெயர்களும் சேர்ந்துவிடாமல் தடுத்துக் காப்பாற்றுகிற பொறுப்பு அந்த மாநில அரசு, காவல்துறையின் அதிகாரத்தில் மட்டுமல்ல –சாதிய எதிர்ப்பாளர்கள் மனித உரிமைப் போராளிகளின் தோள்களிலும் ஏற்றப்பட்டிருக்கிறது.

;