நீதிமன்றம்

img

ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கும் உரிமைகளை உயர்த்திப்பிடித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு

ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளுக்கும் ஆண்களுக்கு நிகராக உரிமைகளை உயர்த்திப்பிடித்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. 
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ராணுவத்தில் பணிபுரியும் அனைத்துப் பெண் அதிகாரிகளும் ராணுவத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் கட்டளை பிறப்பிக்கும் பணிகளுக்கும் தகுதி உடையவர்கள் (eligible for permanent commission and command posts) என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்கிறது. இவ்வுரிமைகளுக்காக ராணுவத்தின் பணிபுரியும் பெண்கள் கடந்த பத்தாண்டுகாலமாக போராடிக் கொண்டிருந்தார்கள். தில்லி உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தும், அரசாங்கம் தில்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த மறுத்துவிட்டது. ‘கட்டளை பிறப்பிக்கும் பணிகளுக்கு பெண்கள் லாயக்கில்லை’ என்று அரசாங்கம் ஆண் ஆதிக்க மனோபாவத்துடன் பிறப்பித்திருந்த உத்தரவை உச்சநீதிமன்றம் சரியாகவே டிஸ்மிஸ் செய்திருக்கிறது. மேலும், பெண்கள், “கருவுறுவதற்கும், தாய்மை அடைவதற்கும், குழந்தைகளைப் பேணுவதற்கும்தான் லாயக்கு” என்கிற அரசின் சிந்தனையோட்டத்தையும் உச்சநீதிமன்றம் சரியாகவே டிஸ்மிஸ் செய்திருக்கிறது. ஏனெனில் இத்தகைய சிந்தனையோட்டம் ஆண்கள்தான் ஒரு குடும்பத்தில் சம்பாதிப்பவர், பெண்கள் அதனை வைத்துக்கொண்டு குடும்பத்தைப் பராமரிப்பதுடன் தன்னைச் சுருக்கிக்கொள்ள வேண்டும் என்று காலங்காலமாகக் கூறப்பட்டுவரும் ஆணாதிக்க மனோபாவத்தின் பிரதிபலிப்பேயாகும்.
பெண்களுக்கு எதிராக சமூகம் விதித்துள்ள பாகுபாடுகளைப் புறந்தள்ளி, அரசமைப்புச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சம உரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சுமார் 30 சதவீத அளவிற்கு ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகளின் உரிமைகளுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எப்போதுமே குரல் கொடுத்து வந்திருக்கிறது.  
ராணுவத்தில் ஆண்களுக்கு நிகராகப் போராடிவரும் பெண்களின் பக்கம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நிற்கிறது. மத்திய அரசாங்கம், உச்சநீதிமன்றம் அளித்துள்ள 3 மாத காலக்கெடுவுக்குள் பெண் அதிகாரிகளுக்கும் உரிமைகளை அமல்படுத்திட வேண்டும் என்று மாதர் சங்கம் கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

;