நீதிமன்றம்

img

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு 

எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், குடியுரிமை திருத்த மசோதாவை மோடி அரசு  நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத்திருத்த மசோதா 2019 ஐ மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள இலங்கை தமிழர்கள் இந்த சட்டத்தின் கீழ் இந்திய குடியுரிமை பெற இயலாது என்பது குறிப்பிடத்தக்கது. . 
இந்த மசோதாக்கு  நேற்று மாநிலங்களவையில் ஆதரவாக 125 வாக்குகளும், எதிராக 99 வாக்குகளும் பதிவாகின.  இதேபோல் நாடாளுமன்ற மக்களவையில், ஆளும் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை பலம் உள்ள நிலையில், இந்த மசோதா நேற்று முன்தினம் அங்கு தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் பதிவாகின.
இதனிடையே, குடியுரிமை சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாகாலாந்து, அசாம் போன்ற வட கிழக்கு மாநிலங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அசாம் திரிபுரா போன்ற மாநிலங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. 
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி ,மோடி அரசு மிருக பலத்துடன் நிறைவேற்றி உள்ள  குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

;