தேசம்

img

இறுதிச்சடங்கில் பங்கேற்ற 18 பேருக்கு கொரோனா

மும்பை
நாட்டின் நிதிநிலை நகரை பெற்றுள்ள மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் உள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இதுவரை 65 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2 ஆயிரத்து 197 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2 ஆயிரத்து 940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கையும் தாறுமாறாக இருப்பதால் அம்மாநில அரசு கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.  

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய நகரான தானேவில் அருகே உள்ள உல்ஹாஸ்நகர் பகுதியைச் சேர்ந்த பெண் (40 வயது) உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இறந்த பின் செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிறருக்கு கொரோனா பரவாமல் இருக்க இறந்த பெண்ணின் உடலைப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து அதிகாரிகள்  குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் உடலை பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து வெளியே எடுக்க கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   

ஆனால் இறந்த பெண்ணின் உடலை அவரது குடும்பத்தினர் வெளியே எடுத்தது மட்டுமில்லாமல் 70-க்கும் மேற்பட்டோரை அழைத்து இறுதிச்சடங்கைச் செய்துள்ளனர். தகவலறிந்த அதிகாரிகள் இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிட்டனர். இதில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று நோய் சட்டத்தினை மீறியதற்காக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

;