தேசம்

img

புல்லட் ரயிலுக்காக அழிக்கப்படும் காடு... 54 ஆயிரம் மாங்குரோவ் மரங்களை வெட்டி வீச முடிவு..

மும்பை:
குஜராத் சட்டமன்றத் தேர்தலையொட்டி, வாக்குகளைக் கவர்வதற்காக, மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். இது தனது கனவுத்திட்டம் என்று அப்போது கூறிய
மோடி, இதற்கான கடனுதவியை ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமையிடம் ( Japan International Cooperation Agency) பெறப் போவதாகவும் கூறினார்.

மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு ரூ. 1 லட்சம் கோடி தேவைப்படும் என்ற நிலையில், அதில், 88 ஆயிரம் கோடிரூபாயை கடனுதவியாக தருவதாகஜப்பான் கூட்டுறவு முகமையும் ஒப்புக் கொண்டது.அதைத்தொடர்ந்து, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வை, இந்தியாவுக்கு வரவழைத்த பிரதமர் மோடி, கடந்த மே மாதம் புல்லட் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2023-ஆம் ஆண்டு இந்தியாவில் புல்லட் ரயில்கள் ஓடும் என்றும் படோடோபமாக அறிவித்தார்.ஆனால், துவக்கத்திலேயே இத்திட்டத்திற்கு எதிர்ப்பு எழுந்தது.மகாராஷ்டிராவின் பால்கர் வழியாக 108 கி.மீ. தொலைவுக்குச் செல்லும் ரயில் பாதைக்கு நிலமெடுக்க, விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குஜராத்திலும் இதேபோல 8 மாவட்டங்களில் 850 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்தது. சுமார்5 ஆயிரம் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். 

மேலும், ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயிகள், தங்களின் நிலத்தை எடுப்பதற்கு எதிராக அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.ஜப்பான் அரசுக்கு கடிதங்களையும் எழுதினர். இதன்காரணமாக, மும்பை - அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கான கடனுதவியையே, ஒருகட்டத்தில் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை (JICA) நிறுத்தி வைத்தது.எனினும், இரண்டாவது முறையாக பிரதமர் ஆகியுள்ள மோடி,மீண்டும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை துவங்க உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.இந்நிலையில்தான், மகாராஷ்டிர சட்டமன்றத்தில் பேசிய சிவசேனா எம்எல்ஏ மனீஷா கயாந்தே, புல்லட் ரயில் திட்டத்துக்காக சுமார் 14 ஹெக்டேரில் பரவியிருக்கும் 54 ஆயிரம் சதுப்பு நில மரங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றச் சாட்டு எழுப்பியுள்ளார். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ சரத்ரன்பைஸும் குற்றச்சாட்டு வைத் துள்ளார்.நவி மும்பைக்குள் வெள்ள நீர்வராமல் தடுப்பதற்கு மாங்குரோவ் காடுகள் பெரிதும் உதவும்நிலையில், அவற்றை வெட்டுவதால் மும்பை கடும் பாதிப்பைச் சந்திக்கும் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அவர்களுக்குப் பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் திவாகர் ராவ்தி, “புல்லட் ரயில் திட்டத்துக்காக அனைத்துத் தூண்களும் மிகவும் உயரமாகக் கட்டப்பட உள்ளன. அதனால் சுற்றுச் சூழலுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அத்துடன், புல்லட் ரயில் திட்டத்துக்காக சிலமரங்கள் வெட்டப்பட்டாலும், ஒருமரத்துக்கு, ஐந்து மரங்கள் விகிதம் புதிய மரங்கள் நடப்படும்” என்று சமாளித்துள்ளார்.

;