தேசம்

img

லிங்காயத்துக்களுக்கு சாதி, மத, இன பேதமில்லை.... கர்நாடக மாநிலத்தில் மடாதிபதியாக நியமிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்

பெங்களூரு:
கர்நாடகா மாநிலம் ‘கதக்’ மாவட்டம் அசுதி கிராமத்தில் 350 ஆண்டுகள் பழமையான முருகராஜேந்திர கோரனேஷ்வர லிங்காயத்து மடம் உள்ளது. இதில் 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீர்த்திருத்தவாதி பசவண்ணரின் கருத்துகளை தலைமை மடாதிபதி முருக ராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி பரப்பி வருகிறார்.இந்நிலையில், இந்த லிங்காயத்து மடத்தின் அடுத்த மடாதிபதியாக கதக் மாவட்டத்தைச் சேர்ந்த திவான் ஷெரீப் முல்லாவை நியமித்து, தலைமை மடாதிபதி முருக ராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

தனது தந்தை ரஹ்மான் முல்லா மூலம், பசவண்ணரை அறிந்த திவான் ஷெரீப் முல்லா, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக, லிங்காயத் மடத்தில் தங்கி முறைப்படி பசவண்ணரின் தத்துவத்தைக் கற்றுத் தேர்ந்ததுடன், பசவண்ணரின் கருத்தியலையும் முழு நேரமாக பரப்பி வந்தார்.அதனடிப்படையில் ஷெரீப் முல்லாவுக்கு, கடந்த 2019 நவம்பர் 10-ஆம் தேதி தீட்சை வழங்கிய, தலைமை மடாதிபதி முருகராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி, தற்போது தனக்கு அடுத்த மடாதிபதியாகவும்- 3 குழந்தைகளுக்கு தந்தையான 33 வயது ஷெரீப் முல்லாவை நியமித்துள்ளார். இதனை பெரும்பாலான லிங்காயத்து மடங்கள் வரவேற்றுள்ள நிலையில், வழக்கம்போல இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு முஸ்லிமை எவ்வாறு மடாதிபதியாக நியமிக்கலாம் என்று கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கின்றனர்.அவர்களுக்கு தலைமை மடாதிபதி முருக ராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி தற்போது பதிலடி கொடுத்துள்ளார்.“பசவண்ணரின் கொள்கைப்படி எங்களுக்கு சாதி, மதம், மொழி, இன பேதமில்லை. எங்களைப் பொறுத்தவரைக்கும் அனைவரும் சமம். எங்கள் மடத்தின் கதவுகள் எல்லா சமயத்தினருக்கும் திறந்தே இருக்கும். சாதி, மத பேதங்களை நாங்கள் முற்றிலுமாக வெறுக்கிறோம்” என்று முருக ராஜேந்திர சுவாமி கூறியுள்ளார்.

“புதிய மடாதிபதியின் அறிவு, திறமை, பக்குவம், ஞானம் ஆகியவற்றை பார்த்தே இந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறேன். இவரை நியமித்ததன் மூலம் பசவண்ணரின் எண்ணம் நிறைவேறியுள்ளது. எங்கள் மடம் ஒரு முன்மாதிரியாக விளங்குவதில் மகிழ்ச்சி. பசவண்ணரின் தத்துவங்கள் நாட்டின் நன்மைக்கும், எதிர்க்காலத்துக்கும் வழிகாட்டுபவையாக உள்ளன” என்றும் முருக ராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி குறிப்பிட்டுள்ளார்.இதனிடையே, “நான் மிக எளியவன். எனது மிகச் சிறிய சேவையை அங்கீகரித்து, மடாதிபதி முருக ராஜேந்திர கோரனேஷ்வர சுவாமி, என்னைத் தனது குடையின் கீழ் ஏற்றுக் கொண்டுள்ளார்; பசவண்ணர், அடியார்கள் மற்றும் எனது குருக்களின் வழியைப் பின்பற்றி நடப்பேன்” என்று இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள திவான் ஷெரீப் முல்லா தெரிவித்துள்ளார்.

திவான் ஷெரீப் முல்லாவின் தந்தை ரஹ்மான் முல்லாவும் பசவண்ணர் மீது ஈடுபாடு கொண்டவர். தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை, பல ஆண்டுகளுக்கு முன்பே மடத்திற்கு அன்பளிப்பாக வழங்கியவர். அத்துடன் அந்த நிலத்தில் கட்டடமும் கட்டிக் கொடுத்துள்ளார்.

;