தேசம்

img

கும்பல் படுகொலையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன - பி.ஆர். நடராஜன்


கும்பல் படுகொலையை தடுக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து  கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பிஆர் நடராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பதில் அளித்துள்ளார். 
சமீபத்தில் மாட்டிறைச்சி  வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கும்பல் கொலை செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வருடம் மற்றும் மாநிலங்கள் வாரியாக வேண்டும். கடந்த மூன்றாண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டுகளாக  கும்பல் படுகொலை குறித்த  பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அகற்றப்பட்ட வழக்குகள், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட  தண்டனைகள் பற்றிய விவரங்கள், மற்றும் கும்பல் கொலைகள் நடப்பதைத்  தடுக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.. 
இதற்கு உள்துறை  இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் அவர்கள் அளித்த பதில் பின்வருமாறு.: 
"போலீஸ்" மற்றும் "பொது ஒழுங்கு" ஆகியவை இந்திய அரசியலமைப்பின் அட்டவணை 7ன் படி மாநில அரசு சம்பந்தப்பட்டவை. மேலும் குற்றத் தடுப்பு, குற்றங்களை கண்டறிதல், பதிவு செய்தல் , குற்ற விசாரணை, மாநில அரசின் சட்ட அமலாக்க முகவர் அமைப்பு மூலம் குற்றவாளிகளை விசாரணை செய்தல் ஆகியவற்றிற்கு மாநில அரசுகளே பொறுப்பானவை. தேசிய குற்ற பதிவு பணியகம் கும்பல் கொலைகள் தொடர்பாக எந்த தரவையும் பராமரிக்கவில்லை.
எவ்வாறாயினும், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கும், எந்தவொரு தனி நபரும்
சட்டத்தை தங்களது கைகளில் எடுத்துக் கொள்வாரேயானால் அவர்களை சட்டப்படி உடனடியாக  தண்டிப்பதை உறுதி செய்வதற்கும், அவ்வப்போது, ​​மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, உள்துறை அமைச்சகம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. 
04.07.18 தேதியிட்ட மத்திய அரசின் ஆலோசனை கடிதத்தில் வன்முறைத் தூண்டுதலுக்கான சாத்தியக்கூறுகள் கொண்ட போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளைப் பரப்புவதைக் கண்காணிக்கவும், அவற்றை திறம்பட எதிர்கொள்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்ளும் நபர்களை உறுதியாகக் கையாளவும் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பசுவைப் பாதுகாத்தல் என்ற பெயரில் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் குற்றவாளிகள் மீது உடனடி மற்றும் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்காக அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் 9.8.16 அன்று ஒரு ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், 23.7.18 மற்றும் 25.9.18 தேதியிட்ட மத்திய அரசின் ஆலோசனைகள் நாட்டில் கும்பல் கொலை சம்பவங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆடியோ காட்சி ஊடகங்கள் மூலம், கும்பல் கொலை செய்வதைத் தடுக்க  அரசாங்கம் பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கும்பல் வன்முறை மற்றும் கொடூரத்தைத் தூண்டும் திறன் கொண்ட தவறான செய்திகள் மற்றும் வதந்திகளின் பிரச்சாரத்தில் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுப்பது பற்றியும் சேவை வழங்குநர்களுக்கும் அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.

;