தேசம்

img

டிரம்ப் திரும்பிப்போ... ஆவேசமாக களமிறங்குகிறார்கள் விவசாயிகள்

புதுதில்லி:
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்தியாவுக்கு வர இருக்கிற நிலையில் அவரை எதிர்த்து மிகப் பெரும் போராட்டத்தை நாடு முழுவதும் நடத்துமாறு அகில இந்திய விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி  டிரம்ப் பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியா வருகை தர இருக்கிறார். அவரை வரவேற்பதற்காக விரிவான பல ஏற்பாடுகளை நரேந்திர மோடி அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. இதை அகில இந்திய விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்தியாவின் கோழி இறைச்சி சந்தையை கைப்பற்ற டிரம்ப் சூழ்ச்சி
இந்தியாவுக்கு வருகை தருகிற  டிரம்ப் இந்தியாவின் பால் பொருள்கள் மற்றும் கோழி இறைச்சி சந்தையை முற்றாக கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்து இருக்கிறார் என்று விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது . டிரம்பை வரவேற்றுள்ள மோடி அரசாங்கம் அவருடன், பால் பொருட்கள் மற்றும் கோழி இறைச்சி சந்தையை அமெரிக்காவுக்கு திறந்து விடுவதற்கான வர்த்தக உடன்பாடுகளில் கையெழுத்திட இருக்கிறது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ரூ. 42 ஆயிரம் கோடி பெறுமான பால் பொருள்கள், கோழி கால்கள், கோழி இறைச்சி மற்றும் விவசாய உற்பத்திப் பொருட்கள் தாராளமாக இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதற்கான சூழல் ஏற்படும். இது கிட்டத்தட்ட பால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 10கோடி பால் உற்பத்தியாளர்களை கடுமையாக பாதிக்கும்.

கோழி இறைச்சி  உடன்பாடு:10 கோடி இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள் 
இந்தியாவில் கிட்டத்தட்ட  பத்து கோடி மக்கள் பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.  இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் ஏழை விவசாயிகள். மேலும் ஏராளமான விவசாயிகள் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இவர்களை மோடி - டிரம்ப் இடையே கையெழுத்தாக உள்ள கோழி இறைச்சி உடன்பாடு மிக கடுமையான முறையில் பாதிக்கும் என்று விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

பழங்கள்-தானியங்கள் மீதான இறக்குமதி வரியை குறைப்பதற்கான உடன்பாடு
மேலும், ப்ளூபெர்ரி, செர்ரி பழங்கள் மற்றும் சோயாபீன், கோதுமை, மைதா, அரிசி போன்ற தானியங்கள் மற்றும் பல்வேறு விவசாய உற்பத்திப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதி வரியை மிகக் கடுமையான முறையில் குறைப்பதற்கான உடன்பாடு மேற்கொள்ளப்பட இருக்கிறது . குறிப்பாக 100 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் வரை இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது.  விவசாய உற்பத்திப் பொருட்கள் மீதான இந்த வரி குறைப்பு, உள்நாட்டு விவசாயிகளை மிகக் கடுமையாக பாதிக்கும்.

இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அமெரிக்க அரசிடம் அடகு வைப்பதா?
பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் மோடி அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மோசமான உடன்பாடுகளின் விளைவாக, குறிப்பாக பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்பாடுகள், இந்திய விவசாயிகளை கடுமையான நிர்ப்பந்தத்திற்கு, கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் என்று விவசாயிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இத்தகைய ஏகாதிபத்திய ஆதரவு நடவடிக்கையை கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபடுமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்திய பால் பொருள்கள் சந்தை எத்தனை பிரம்மாண்டமானது?
இந்தியாவில் மிக பிரம்மாண்டமான முறையில் ஒரு வலைப்பின்னல் போல செயல்பட்டுக்கொண்டிருக்கிறது பால் பொருட்கள் துறை. இந்திய பால் உற்பத்தி துறையில் மட்டும் கிட்டத்தட்ட பத்து கோடி விவசாயிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இந்த பால் உற்பத்தியாளர்கள் தங்களது பால் மற்றும் பால் பொருட்களை கூட்டுறவு வலைப்பின்னல் மூலம் நாடு முழுவதும்  கொண்டிருக்கிறார்கள். பல ஆண்டுகாலமாக இந்த நடைமுறை என்பது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய பால்பொருள்கள் மூலம் கிடைக்கக்கூடிய வருமானத்தில் 71 சதவீதம் அந்த விவசாயிகளின் கைகளுக்கு சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்திய பால் சந்தையை அமெரிக்காவுக்கு திறந்துவிடுமாறு மோடியிடம் டிரம்ப் நிர்ப்பந்தித்து வருகிறார். இந்தியா அதை ஏற்றுக்கொள்ள ஒப்புக் கொண்டுள்ளது. தற்போது இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பால் மற்றும் பால் பொருட்கள் மீது விதிக்கப்பட்டு கொண்டிருக்கிற 64 சதவீத வரி என்பது ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்கா நிர்ப்பந்தித்து வருகிறது. அது நடந்தால் இந்தியாவில் உள்ளூர் பால் பொருட்களின் விலை மளமளவென சரிந்து மிகப் பெரும் வீழ்ச்சியைத் தொடும். அப்படி விழுந்தால் இந்திய பால் உற்பத்தியாளர்கள் மிகக் கடுமையான துயரத்தில் சிக்குவார்கள்.

ரூ.80 ஆயிரம் கோடி புழங்கும் கோழி இறைச்சி துறை
இந்தியாவைப் பொறுத்தவரை  கோழி இறைச்சி துறையில் கிட்டத்தட்ட 4.8 கோடி குடும்பங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அத்தனை குடும்பங்களின் வாழ்வாதாரமாக கோழி இறைச்சித் தொழில் திகழ்ந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு ரூபாய் 80,000 கோடி அளவிற்கு பணம் புழங்கும் ஒரு துறையாக இது இருக்கிறது. நாடு முழுவதும்  கோழி இறைச்சிக் கடைகள் லட்சக்கணக்கில் இருக்கின்றன. இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து கோழி இறைச்சி பொருட்கள் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று மோடி அரசாங்கத்தை டிரம்ப் நிர்வாகம் நிர்பந்தித்து வருகிறது. அப்படி அனுமதிக்கப்படுமானால் லட்சக்கணக்கான சிறு குறு கோழி இறைச்சி விவசாய குடும்பங்கள் மற்றும் கோழி இறைச்சி வணிகர்கள் மற்றும் அதை சார்ந்துள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வீதியில் நிறுத்தப்படுவார்கள்.

அமெரிக்காவில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக இந்திய சந்தையை விழுங்க துடிக்கும் டிரம்ப்
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கிறது. அந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார் டிரம்ப். இந்த நிலையில் அவர் தன்னுடைய நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பது போல ஒரு வேடம் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதற்காக அவர் இந்திய விவசாயிகளின் நலன்களை பறிப்பது என திட்டமிட்டு சூழ்ச்சிக் காய்களை நகர்த்தி வருகிறார். இந்திய விவசாயச் சந்தையை கைப்பற்றும்  நோக்கத்துடன் மோடி அரசாங்கத்துடன் ஒப்பந்தம் போடுவதற்காகத் தான் பிப்ரவரி 24, 25 தேதிகளில் இந்தியா வருகை தர இருக்கிறார். இதுபற்றிய விவரங்களை வெளியிட்டுள்ள அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்  முல்லா, இந்தியாவின் பால் உற்பத்தி, கோழி இறைச்சி உற்பத்தி மற்றும் சிறு குறு தானியங்கள் உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விவசாய உற்பத்தி துறையை முற்றாகக் கைப்பற்றும் நோக்கத்துடன் தான் டொனால்டு டிரம்ப் இந்தியா வருகிறார் என குற்றம்சாட்டி இருக்கிறார்.
அமெரிக்க விவசாய உற்பத்திப் பொருட்களுக்காக இந்திய சந்தைகளை முற்றாக திறந்துவிட வேண்டும் என்று நரேந்திர மோடி அரசாங்கத்தை தனது பயணத்தின்போது டிரம்ப் நிர்ப்பந்திக்க இருக்கிறார். இது தொடர்பாக கையெழுத்திடும் ஒப்பந்தங்கள் இந்திய விவசாயிகளை மிகக் கொடுமையான துயரத்தில் தள்ளும் என்றும் அவர் குற்றம்சாட்டி இருக்கிறார்.

அமெரிக்க விவசாயிகளுக்கு மிக மிக அதிகமான அளவு மானியங்களை வாரி வழங்குகிற அமெரிக்க அரசு, இந்திய விவசாயிகளுக்கு எந்த மானியமும் அளிக்கக்கூடாது என்று மோடி அரசை மிரட்டிக் கொண்டிருக்கிறது. சர்வதேச உலக வர்த்தக உடன்பாடுகளிலும் இதையே வற்புறுத்தி வருகிறது. இதற்கு ஏற்றவாறு நரேந்திர மோடி அரசு டிரம்ப் அரசாங்கத்திற்கு அடிபணிந்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட தயாராக இருக்கிறது. எனவே “டொனால்டு டிரம்ப் திரும்பிப்போ” என்ற இயக்கத்தை நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திட வேண்டும் என ஹன்னன் முல்லா அழைப்பு விடுத்துள்ளார்.(ஐஎன்என்)

;