தேசம்

img

நடந்தே 900 கி.மீ கண்களை மூடிக்கொண்ட மோடி அரசால் கூலித் தொழிலாளர்கள் சொல்லொணொ துயரம்

புதுதில்லி,மார்ச் 28- இந்திய தலைநகர் தில்லியிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல கூட்டம் கூட்டமாக நடந்தே செல்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு,அமலில் உள்ளது. தில்லியில் வாழும் காய்கறி விற்பவர்கள், ரிக்சா ஓட்டுபவர்கள், கட்டுமான தொழிலாளர்கள் பலரும் அருகில் உள்ள உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச்  சேர்ந்தவர்கள்தான். தற்போது இந்த ஊரடங்கு உத்தரவால் பணி இல்லாமல், செய்வதறியாமல் தவித்த தொழிலாளர்கள், சாரை சாரையாக அவர்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்கிறார்கள்.  பல ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மூட்டை முடிச்சுகளுடன் வியாழனன்று தில்லியிலிருந்து புறப்பட்டு காசிப்பூர் வழியாக உத்தரப்பிரதேசத்தை நோக்கிச் சென்றனர். ஒரு நாளில் மட்டும் சுமார் 10 ஆயிரம் பேர் தில்லி எல்லையை கடந்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காசிப்பூரில் அரசு ஏற்பாடு செய்த சிறப்பு பேருந்துக்காக சிலர் காத்திருந்தார்கள் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது. அப்படி மேற்கு தில்லியின் நஜப்கர் பகுதியிலிருந்து, உத்தரப் பிரதேச மாநிலத்தில் இருக்கும் பதேபூரில் உள்ள அவரது வீட்டிற்கு செல்ல 570 கிலோ மீட்டர் பயணத்தைத் தொடங்கினார் 35 வயதான தன்ராஜ். கட்டுமான இடங்களில் இரும்புக் கம்பிகளைப் பொருத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்த அவர், நாள் ஒன்றுக்கு 300- 400 ரூபாய் வரை சம்பாதித்துக் கொண்டிருந்தார். "என்னிடம் பணம் இல்லை. என் வீட்டு உரிமையாளர் என்னிடம் வாடகை கேட்டார். என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டை விட்டு காலி செய்யுமாறு கூறினார்.

நான் வேலை பார்த்த இடத்திலும் காசு இல்லை என்று கூறிவிட்டார்கள். எனவே நான் என் ஊருக்குப் போவதுதான் நல்லது. ஆனால், நடந்து செல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை" என்று பிடிஐ நிறுவனத்திடம் பேசிய தன்ராஜ் கூறினார். ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், அனைத்து ரயில் சேவைகள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆயிரக்கணக்கானோர் உண்ண உணவு மற்றும் அருந்த தண்ணீர் இல்லாமல் தவிப்பதாக கூறுகின்றனர். தொண்டு நிறுவனங்கள் சில, இவ்வாறு பயணம் செய்யும் மக்களுக்கு ஆங்காங்கே உணவு மற்றும் குடிநீர் கொடுத்து உதவி வருகின்றனர். இதுகுறித்து டிவிட் செய்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுமக்கள்,

காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள், பயணம் மேற்கொண்டிருக்கும் தொழிலாளர் மக்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடம் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டார். மேலும், இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் இப்படி நடந்தே செல்லும்  அவலம் ஏற்பட்டதற்கு அரசாங்கம்தான் பொறுப்பு. இது மிகப்பெரிய குற்றம். பெரிய துன்பம் ஏதும் நேர்வதற்குள் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார். "நான் அகமதாபாத்தில் இருந்து வருகிறேன். என் வீடு உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் இருக்கிறது. எனக்கு அகமதாபாத்தை விட்டு தற்போதைக்கு வர விருப்பம் இல்லை என்றாலும் என்னை வேலையில் வைத்திருந்த நபர் காசு கொடுக்க மறுத்துவிட்டார். கடந்த மூன்று நாட்களாக சரியாக சாப்பிடவில்லை" என்று கூறுகிறார் ராஜஸ்தான் ஜெய்ப்பூரை  தற்போது தாண்டியுள்ள ஒரு கூலித் தொழிலாளி. இந்நிலையில், வெளிநாடுகளில் இருக்கும் மக்களை விமானம் வைத்து இந்தியா அழைத்து வர தெரிந்த அரசுக்கு, கூலித் தொழிலாளிகளுக்கு எந்த அடிப்படை போக்குவரத்து வசதிகளும் இல்லை என்பது தெரியவில்லையா என பலரும் சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றனர்.

;