தேசம்

img

பொது சுகாதாரத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்திட அரசு முன்வர வேண்டும்

பொது சுகாதாரத் திட்டங்களுக்கு  அதிக நிதி ஒதுக்கீடு செய்திட அரசாங்கம் முன்வர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே. சோமபிரசாத் கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் கிழமையன்று மாநிலங்களவையில் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம் (naturopathy), யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி என்கிற ‘ஆயுஷ்’ அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அதில் பங்கேற்று கே. சோமபிரசாத் பேசியதாவது:

இந்த அரசாங்கத்திடம் என்னுடைய முதல் வேண்டுகோள் என்பது, பொது சுகாதாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் பணம் ஒதுக்கீட செய்யப்பட வேண்டும் என்பதாகும். இப்போது இதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் தொகை போதுமானதல்ல. இது மிகவும் அற்பமாகும். உண்மையில்,  இது தங்களுடைய சுகாதாரத்தின் மீது ஆர்வமடைய மக்களிடையே பெரிதும் ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய விதத்திலேயே அமைந்திருக்கிறது.

நம் நாட்டில் வாழும் 130 கோடி மக்களில் மிகப் பெரும்பாலானவர்கள் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழை மக்களாவர். அவர்களின் வாழ்நிலைமை மிகவும் பரிதாப கரமானதாகும். மிகவும் குறைந்த வருமானத்திலேயே அவர்கள் தங்கள் வாழ்நாளைக் கழித்து வருகிறார்கள். இவர்கள் தங்கள் உடல்நலத்திற்காக மிகவும் சார்ந்திருப்பது பொது சுகாதார அமைப்பின்கீழ் இயங்கும் மருத்துவமனைகளைத்தான்.

இந்த பட்ஜெட்டில் ஒட்டுமொத்த சுகாதார அமைப்பு முறைக்கும் ஒதுக்கீடு என்பது மிகவும் அற்ப அளவிலேயே உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்தத்துறைக்கு அரசாங்கம் அதிகக் கவனம் செலுத்திட வேண்டும்.

சென்ற மாதம், ஊடகங்களில் முசாபர்பூரிலும் மற்றும் நாட்டின் பல பகுதிகளிலும் குழந்தைகள் ஏராளமான அளவில் இறந்த விவரங்கள் நிரம்பி இருந்தன. இந்த சம்பவங்கள் நம் நாட்டில் கணிசமான அளவிற்கு மக்கள் ஏழைகளாக இருப்பதை உலகுக்கு வெட்டவெளிச்சமாக்கியது. அவர்கள், தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகளைப் பெறக்கூடிய அளவிற்கு வசதியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் முழுமையாக அரசாங்க மருத்துவமனைகளையே சார்ந்திருக் கிறார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. எனவே, பொது சுகாதார அமைப்புமுறை வலுப்படுத்தப்பட வேண்டும். இதன் உள்கட்டமைப்பு வசதிகளுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.  

இந்தியா, பன்முக மருத்துவக் கலாச்சாரத்தைக் கொண்ட நாடு என்பதை அனைவரும்  அறிவோம். பல்வகை மருத்துவ முறைகளும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வரலாற்றை நாம் பெற்றிருக்கிறோம். ஆயுர்வேதம், யோகா, யுனானி, இயற்கை மருத்துவம், சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய அனைத்தும் நம் மருத்துவ அமைப்பு முறைகளில் பின்னிப்பிணைந்தவைகளாகும்.

இதற்காக அரசாங்கம் ‘ஆயுஷ்’ துறை என அமைத்திருப்பது ஒரு நல்ல முடிவு. ஆனால், இதன்மீதான தொடர் நடவடிக்கை மற்றம் நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. இவையும் அவசியமாகும்.

‘ஆயுஷ்’ வளர்ச்சி அரசாங்கத்தின் அணுகுமுறையையே முழுமையாகச் சார்ந்திருக்கிறது. ஆயுர்வேதம், உடல்நலம் சார்ந்த மருத்துவமுறைகளில் முழுமையான அணுகுமுறையுடன் கூடிய, இந்தியாவின் மிகவும் புராதனமான மருத்துவ முறைகளில் ஒன்றாகும். இதற்கு ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பாரம்பர்யம் உண்டு. புற்றுநோய், நீரிழிவு, முடக்குவாதம், ஆஸ்த்மா போன்ற பல நாட்பட்ட நோய்களையும் தீர்க்கும் வல்லமை ஆயுர்வேத மருத்துவமுறைக்கு உண்டு. ஆயினும், பல்வேறு கருத்தாக்கங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக மெய்ப்பிக்கப்பட முடியாததால், நம்முடைய மூதாதையர்கள் நமக்கு விட்டுச்சென்றுள்ள நன்கொடையானது இப்போது சரியான ஆதரவின்றித் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எனவே, ஆயுர்வேத வைத்திய முறையை உலக அளவில் அங்கீகாரம் பெறும் விதத்தில் கொண்டுசெல்வதற்கு உதவிடும் விதத்தில் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கிட  வேண்டும்.

 உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கையின்படி, உலகில் உள்ள மக்களில் 70-80 சதவீதத்தினர் தங்கள் உடல்நலத்தைப் வேணுவதற்கு, மூலிகை மருந்துகளையே சார்ந்திருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறது.

அலோபதி மருந்துகளில் உள்ள பக்க விளைவுகள் மாற்று பாரம்பர்ய மருத்துவமுறைகளில் இல்லாததால் தற்போது மக்கள் பெரும் அளவில் இவற்றை நாடி வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

தற்போது உலக மக்கள் தொகை நம்முடைய ஆயுர்வேத வைத்திய முறையை அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆயுர்வேதக் கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு அரசாங்கம் ஒரு கால நிர்ணயம் செய்து திட்டங்கள் தீட்டிட வேண்டும்.

சீனாவில் பாரம்பர்ய சீன மருத்துவமுறையை வளர்த்தெடுத்திட நடவடிக்கைகள் எடுத்திருப்பதைப்போல நாமும் நம் ஆயுர்வேத மருத்துவமுறையை வளர்த்தெடுக்கக்கூடிய விதத்தில் அதன் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு அறிவியல்பூர்வமான அணுகுமுறையைக் கடைப்பிடித்திட வேண்டும். ஆராய்ச்சிக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டும்.

இவ்வாறு கே. சோமபிரசாத் பேசினார்.

(ந.நி.)

 

;