தேசம்

img

இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தாதே இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் – ஊழியர்கள் கண்டனப் பேரணி

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே,  கார்ப்பரேட்டுகளுக்கு வெண்சாமரம் வீசி, தொழிலாளர்களை கசக்கிப்பிழியாதே, இந்துத்துவா மதவெறியைத் திணிக்காதே என்று முழக்கமிட்டு தலைநகர் தில்லியில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் செவ்வாய் அன்று கண்டனப் பேரணி நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்), அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி முதலானவை செவ்வாய் அன்று தில்லி மண்டி ஹவுசிலிருந்து, நாடாளுமன்ற வீதி வரை மேற்கொண்ட பேரணியில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பங்கு கொண்டார்கள். பேரணியில் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில் பிரகாஷ் காரத் உரையாற்றும் போது, மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதார மந்தத்திலிருந்து வெளிவருவதற்கான வழிகள் எதையும் அளித்திட வில்லை என்பதையும், சென்ற செப்டம்பரில் மோடி அரசாங்கம் 1.45 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகளை கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கியுள்ளது என்றும், இப்போது பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுத்துறை பங்குகளை விற்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார். மேலும் மோடி அரசாங்கம் பொது நலத்திட்டங்களுக்கான செலவினங்களையும் வெட்டிக்குறைத்திருக்கிற அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது  என்றும் கூறினார். மேலும் மோடி அரசாங்கம் பொருளாதார மந்தத்தைப் போக்குவதற்கான நடவடிக்கை எதையும் எடுக்கத் தவறியதோடு மட்டுமல்லாமல், நாட்டு மக்களை பிளவுபடுத்திட, இந்துத்துவா மதவெறி நிகழ்ச்சிநிரலை அமல்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாகவும், எனவே பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராகவும், இந்துத்துவா மதவெறிக் கொள்கைகளுக்கு எதிராகவும் போராட வேண்டியது அவசியம் என்றும் கூறினார். 
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) தில்லி மாநில செயலர் ரவி ராய், முதலானவர்களும் உரையாற்றினார்கள்.

;