தேசம்

img

மோடி அரசின் பொய்த்துப் போன ‘370’ நீக்கக் காரணங்கள்.... முன்பைவிட மோசமான ஜம்மு - காஷ்மீர்..

புதுதில்லி:
மத்திய பாஜக அரசானது, ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு உரிமைகளை வழங்கும் அரசியல்சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி, மாநில அந்தஸ்தை யும் பறித்து, ‘2020 ஆகஸ்ட் 5’ தேதியுடன் ஓராண்டு முடிவடைகிறது.

முன்னதாக இதற்கு எதிர்ப்பு எழுந்தபோது, ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதத் தாக்குதல், வன்முறைகள் அதிகம் நடப்பதற்கும், ஊழல், நிர்வாக குளறுபடிகளில் சிக்கித் தவிப்பதற்கும் பொருளாதார அடிப்படையில் காஷ்மீர் மாநிலம் முன்னேறாமல் இருப்பதற்கும் 370 சட்டப்பிரிவுதான் தடையாக இருக்கிறது என்று நாடாளுமன்றத்தில் மோடி அரசு காரணம் கூறியது. ஆனால், மோடி அரசு கூறிய காரணங்கள்எதுவும் உண்மையில்லை என்பதையும், முன்பிருந்ததைக் காட்டிலும், 370 நீக்கப்பட்டதற்கு பிந்தைய கடந்த ஓராண்டில் ஜம்மு காஷ்மீர் எந்த வகையிலும் முன்னேறவில்லை என்றும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சக அறிக்கையின்படி, 370 வாபஸ் பெற்ற பின்னர், பயங்கரவாத நிகழ்வு சுமார் 36 சதவிகிதம் குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.ஆனால், 2019 ஜனவரி முதல் ஜூலை 15 வரை, 120 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றிருந்தன என்றால், 2020 ஜனவரி முதல் ஜூலை 15 வரை 188 பயங்கரவாத சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.முந்தைய ஆண்டில் 51 கையெறி குண்டு தாக்குதல்கள் நடந்த நிலையில், இந்தாண்டு அது 21 கையெறி குண்டு தாக்குதல்களாக குறைந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு 126 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் எனில்,இந்தாண்டு 136 பயங்கரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர். அதேபோல பயங்கரவாத தாக்குதல்களில் 23 பொதுமக்களும், 75 பாதுகாப்புவீரர்களும் கடந்த ஆண்டில் கொல்லப்பட்டனர்.

இந்தாண்டு 22 பொதுமக்களும், 35 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 110 பேர் உள்ளூர் பயங்கரவாதிகள் என்றும் மீதமுள்ளவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்றும் உள்துறை அமைச்சக அறிக்கை கூறுகிறது.முன்புபோல இயல்பான காலத்தில் நடந்தசம்பவங்கள் அல்ல இவை. ஊரடங்கு மூலம் மக்களை வீடுகளை விட்டே வெளியேவரவிடாமல் தடுத்துள்ள நேரத்திலும், பல ஆயிரம் பாதுகாப்பு படை வீரர்கள் மூலம், ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலமும் ஒரு வலைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில்தான் இவ்வளவும் நடந்துள்ளது.நிர்வாகம் சரியாக நடைபெறுவதற்கு அரசு ஊழியர்கள் முக்கியமானவர்கள். ஆனால், உள்துறை அமைச்சக தகவலின்படி, அம்மாநிலத்தில் மொத்தம் 84 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

குரூப் 4- நிலையில் 22 ஆயிரத்து 78 பணிவாய்ப்புகளும், கெஸட்டட் அல்லாத நிலையில் 54 ஆயிரம் 375 பணிவாய்ப்புகளும், கெஸட்டட் நிலையில் 7 ஆயிரத்து 552 பணிவாய்ப்புகளும் உள்ளன.ரூ. 13 ஆயிரத்து 600 கோடி மதிப்பில், 168புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், கையெழுத் திடப்பட்டு உள்ளதாக மத்திய அரசின் மற்றொரு புள்ளிவிவரம் கூறியுள்ளது. ஆனால், கடந்த 2019 ஆகஸ்ட் 5 முதல் (சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்ட நாள்), ஜம்மு-காஷ்மீரின் வர்த்தக நடவடிக்கைகளில் ரூ. 40 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக காஷ்மீர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஷெய்க் ஆஷிஸ் கூறியிருக்கிறார். சுற்றுலாத்துறை பலத்த அடிவாங்கியுள்ளது. மாநிலத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிப்ப தாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதுதான் 370 நீக்கத்திற்குப் பிந்தைய காஷ்மீரின் நிலைமையாக உள்ளது.

;