தேசம்

img

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலை அளித்திடுக

புதுதில்லி, ஜூலை 19-

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் தமிழ்நாட்டில் இயங்கிடும் சுத்திகரிப்பு நிலையங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வேலை அளித்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கோரினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. வியாழன் அன்று மக்களவையில் நாடாளுமன்ற நடத்தை விதி 377ஆவது பிரிவின்கீழ் முக்கிய பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் பி.ஆர். நடராஜன் பேசியதாவது:

மத்திய பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டிற்கு தமிழ்நாட்டில் சென்னை அருகே மணலியிலும், நாகப்பட்டினத்திலும் இரு சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக் கின்றன.

இப்போது, பெட்ரோலிய அமைச்சகம், நாகப்பட்டினத்தில் இயங்கிடும் காவேரி பேசின் சுத்திகரிப்பு நிலையத்தை மூடிவிடவும், ஆண்டிற்கு 9 மெட்ரிக் மில்லியன் டன் உற்பத்தி செய்யக்கூடிய புதிய சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்திடவும் முன்மொழிந்திருக்கிறது.

சமீப ஆண்டுகளில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின்கீழ் அதிகாரிகள் அல்லாத ஊழியர்கள் மிகப் பெருமளவில் வட மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட விரும்புகிறேன். இதன் விளைவாக தமிழ்நாட்டில் ஏராளமாக இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் அல்லாத ஊழியர்களின் நியமனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கக்கூடிய விதத்தில் நிறுவனத்தின் தேர்வு விதிகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளில் பொருத்தமான விதத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், அதிகாரிகளையும், அதிகாரிகள் அல்லாத ஊழியர்களையும் தேர்வு செய்யும்போது, அகில இந்திய தேர்வு முறையில் அதிகாரிகளைத் தேர்வு செய்திடும் முறையை (Non-Supervisory recruitment) பின்பற்றுகிறது.  மாநிலத்தில் உள்ள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தேர்வு செய்வதில்லை. இது. மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை (DoPT) வழிகாட்டும் நெறிமுறைகளுக்கு (guidelines) எதிரானதாகும். இதுவும் தமிழக இளைஞர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது.

மேலும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் சமீபத்தில் சுற்றிக்கை ஒன்றை மே 2ஆம் தேதியன்று வெளியிட்டிருக்கிறது. அதில், ‘இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்’ சேர்ந்த அனைவருமே “கிரிமி லேயரின்” (“creamy layer”) கீழ் வருவார்கள் என்று கூறியிருக்கிறது.  இவ்வாறு சுற்றறிக்கை வெளியிடப் பட்டிருப்பதும் பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் வழிகாட்டும் நெறிமுறைகளை மீறிய செயலாகும். எனவே இதனைப் பொருத்தமான முறையில் மாற்றியமைத்திடவும் மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.  

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் புதிய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிகாரிகளையும், ஊழியர்களையும் தேர்வு செய்யும்போது மேலேகூறிய குறைபாடுகளைக் களைந்திட முன்வர வேண்டும் என்று மாண்புமிகு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு பி.ஆர். நடராஜன் கூறியுள்ளார்.

(ந.நி.)

ReplyReply allForward

;