தேசம்

img

கடும் எதிர்ப்பால் 49 பிரபலங்கள் மீதான தேச துரோக வழக்கு வாபஸ் 

கூட்டு வன்முறைக்கு எதிராக இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட  49 பிரபலங்கள் மோடிக்கு கடிதம் எழுதிய விவகாரத்தில் அவர்கள் தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக  பாஜக கூட்டணி அரசு பின்வாங்கி உள்ளது. 
முன்னாக இயக்குநர்கள் மணிரத்னம், அனுராக்காஷ்யப், ராமச்சந்திரகுஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் முஸ்லீம்கள் தலித்துகள் சிறுபான்மையினருக்கு எதிரான கூட்டு வன்முறை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். நாட்டில் ஜெய்ஸ்ரீராம் என்ற கோஷம் வன்முறையை தூண்ட பயன்படுத்தப்படுகிறது என்பதை குறிப்பிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். இந்நிலையில் தற்போது பீகாரைச்சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் 49 பிரபலங்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டார். இதையடுத்து நீதிபதி சூர்ய காந்த் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதைத்தொடர்ந்து கடிதம் எழுதிய பிரபலங்கள் 49 பேர் மீதும் தேச துரோகம், பொது அமைதியை குலைத்தல், மத உணர்வை புண்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது 180 பிரபலங்கள் மோடிக்கு தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி மீண்டும் கடிதம் ஒன்றை எழுதினர். பிரபல பாலிவுட் நடிகர் நசருதீன்ஷா, வரலாற்றாசிரியர் ரோமிலா தாபர் உள்ளிட்டோர் எழுதிய கடிதத்தில் “நம் நாட்டில் நடக்கும் கூட்டு வன்முறைக்கு எதிராக பொறுப்புள்ள குடிமகன்களாக குரலெழுப்பிய காரணத்திற்காக எங்கள் கலைத் துறையைச் சேர்ந்த 49 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்தைப் பயன்படுத்தி, குடிமக்களின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.   இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேச துரோக வழக்கை ரத்து செய்ய பீகார் போலீஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை செய்திதொடர்பாளர் ஜிதேந்திர குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,``இந்த வழக்கு தொடர்பாக மாவட்டக் காவல்துறை தலைவர், `இது ஒரு பொய்யான வழக்கு. விளம்பரத்துக்காக மனுதாரர் இப்படி செய்துள்ளார்’ என்று கூறியுள்ளார். மேலும் மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்துள்ளார்.  எந்த ஒரு முறையான ஆதாரம் இல்லாமல் பொய் வழக்கை தாக்கல் செய்த புகார்தாரருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக ஒன்று அல்லது இரண்டு நாள்களில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கைதாக்கல் செய்யப்படும்” என அவர் தெரிவித்துள்ளார். 
 

;