தேசம்

img

வேகமாகப் பரவும் கொரோனா: 2,500 ரயில் பெட்டிகள் 40 ஆயிரம் படுக்கைகளாக மாற்றம்

புதுதில்லி, ஏப்.6- கொரோனா சிகிச்சைக்காக  ரயில்வே நிர்வாகம் ரயில்பெட்டிகளை  படுக்கைகளாக மாற்றியுள்ளது.  முதற்கட்டமாக 40 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நாட்டில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரமுடன் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அதன் வீரியம் அதிகரித்து வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை காலை ஒன்பது மணிக்கு வெளியிட்ட அறிவிப்பின்படி நாடு முழுவதும் 4,087 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை அளிக்க, மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு உதவும் வகையில் ரயில்வே நிர்வாகம் ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், ‘ரயில் பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றுவதற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், ரயில்வே மண்டலங்களில்  பணிகள் உடனடியாகத் தொடங்கின.  சராசரியாக, நாள் ஒன்றுக்கு 375 பெட்டிகள் தனி வார்டுகளாக மாற்றப்பட்டுவருகின்றன. இதற்காக நாட்டின் 133 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.  இதன்படி, 2 ஆயிரத்து 500 பெட்டிகள் முதற்கட்டமாக  தனி வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன.  இதனால் 40 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளன’ என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் 2 ஆயிரத்து 500 பெட்டிகளை தனி வார்டுகளாக மாற்றும் பணிகள் தொடங்க உள்ளன.

;