செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தேசம்

img

கொரோனா கோரத்திலும் ‘சரக்கு’ விற்று சாதனை.... ஆந்திரா ரூ.40 கோடி, கர்நாடகம் ரூ.45 கோடி, உ.பி. ரூ.100 கோடி

புதுதில்லி:
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாநில அரசுகள் கேட்கும் நிதியை வழங்க மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. செலவுகளை அந்தந்தமாநில அரசுகளே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டது. 

ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மட்டுமன்றி, மாநில அரசுகளுக்கு முறைப்படிபங்கீட்டுத் தொகையை வழங்குவதற்குக்கூட மோடி அரசு தயாராக இல்லை.இதனால் மாநில அரசுகள், வருவாயைத் திரட்டுவதற்கு பெட்ரோல் - டீசலுக்கான மதிப்புக்கூட்டு வரியை அதிகரிப்பது, மதுக்கடைகளை திறப்பது என்று முடிவெடுத்து குறுக்கு வழியில் களத்தில் இறங்கியுள்ளன.மதுக்கடைகளைத் திறக்கும் முடிவானது, இதுவரை இருந்து வந்த குறைந்தபட்ச சமூக இடைவெளியையும் உடைத்துவிடும்; இது கொரோனா பாதிப்பை பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் ஆபத்தில் போய் முடியும் என்று மருத்துவர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் விடுத்த எச்சரிக்கைகள் எதுவும் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

அதற்கேற்பவே, மதுக்கடைகள் திறக்கப்பட்ட தில்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடக உள் ளிட்ட மாநிலங்களில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதத் துவங்கியுள்ளது.தலைநகர் தில்லியில் 150 கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், சமூக விலக்கலைக் கடைப்பிடிக்காமல் மக்கள் முண்டியடித்ததால் பல கடைகளை, திறந்த உடனேயே மூடவேண்டியநிலை ஏற்பட்டது. பல இடங்களில் போலீசார் லத்தி சார்ஜ் செய்ய வேண்டிய நிலைஉருவானது. இதனால் தற்போது மதுபானங்களுக்கான வரியை 70 சதவிகிதம் வரை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயர்த்தியுள்ளார்.

இதேபோல ராஜஸ்தானிலும், மதுப்பிரியர்கள் ஆயிரக்கணக்கில் குவிந்துகடை விற்பனையாளர்களை திணறடித்ததால், திறந்த மதுக்கடைகளை உடனேயே மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டது.பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 26 ஆயிரம் மதுபானக் கடைகள் ஒரேநேரத்தில் திறக்கப்பட்டன. இங்கும் கொரோனா தொற்றைப்பற்றி கவலைப்படாமல் கூட்டம் அலைமோதியது. ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா, இமாச்சலப்பிரதேசங்களிலும் மதுப்பிரியர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டம் கூட்டமாக மதுவை வாங்கிச் சென்றனர்.

இவை ஒருபுறமிருக்க, இந்த கொரோனா கொடூரத்திலும் மதுபான விற்பனையில், ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேச மாநிலங்கள் சாதனை படைத்துள்ளன.ஆந்திர மாநிலத்தில், 3,468 அரசு மதுபானக் கடைகள் உள்ள நிலையில் முதற்கட்டமாக திங்கட்கிழமையன்று 2,345 மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 40 நாட்களுக்குப் பின் மதுக்கடைகள்  திறக்கப்பட்டதால், பல இடங்களில் கூட்டம்கட்டுக்கடங்காமல் இருந்தது. மதுபானங்களின் விலை, வழக்கத்தைக் காட்டிலும் 25 சதவிகிதம் உயர்த்தப்பட்டு இருந்தது. எனினும், கூட்டம் அலைமோதியது. நெல்லூர் மாவட்டத்தில் மதுவாங்க வரிசையில் நின்றிருந்த ஒருவர்வெயில் தாங்க முடியாமல் சுருண்டுவிழுந்த சம்பவமும் நடந்தது. கடைசியாக மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல்நாளில் மட்டும் ஆந்திராவில் ரூ. 40 கோடிக்கு மதுவகைகள் விற்றுத் தீர்ந்தன. 

பாஜக ஆளும் கர்நாடக மாநிலம், ஆந்திராவைக் காட்டிலும் ரூ. 5 கோடி அதிகமாக ரூ. 45 கோடிக்கு மது விற்றுள்ளது. திங்கட்கிழமையன்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 500 கடைகள் மூலம், 3.9 லட்சம் லிட்டர் பீர், 8 லட்சம் லிட்டர் ஏனைய மதுபான வகைகளை விற்றுத் தீர்த்துள்ளது.முன்னதாக ஹசன் மாவட்டம் சாலேகாமே சாலையில் உள்ள மதுபானக் கடை முன்பு திரண்ட மதுபான பிரியர்கள்கடையை மலர்களால் அலங்கரித்த சம்பவமும், அத்துடன் கடை முன்பு அகல்விளக்கு ஏற்றி, ஆரத்தி எடுத்து, கைகளைக் கூப்பி பூஜைசெய்து வணங்கிய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

மாண்டியாவில் உள்ள ஒரு மதுக் கடை முன்பு பட்டாசு வெடித்து மது விற்பனையை கொண்டாடி வரவேற்றுள்ளனர். பெங்களூருவில் உள்ள ஒரு கடைமுன்பு இளம்பெண் மண்டியிட்டு இருகைகளை கூப்பி வணங்கிவிட்டு சென்றுமதுவை வாங்கியுள்ளனர்.பெலகாவியில் ஞாயிற்றுக்கிழமை இரவே மதுபான கடைக்கு சென்ற மதுப்பிரியர்கள் தேங்காய் உடைத்து பூஜை செய்துள்ளனர்.இவற்றுக்கெல்லாம் உச்சமாக, பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரப்பிரதேசம் தனது 26 ஆயிரம் கடைகள் மூலம் ஒரே நாளில் ரூ. 100 கோடிக்குமதுபானங்கள் விற்று, புதிய சாதனை படைத்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில், வழக்கமாக நாள் ஒன்றுக்கு ரூ. 70 முதல்80 கோடிக்கு தான் மது விற்பனையாகும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தலைநகரான லக்னோவில் 4 மணி நேரத்திற் குள் மட்டும் ரூ. 6.3 கோடிக்கு மதுபானங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.உத்தரப்பிரதேசத்தின் பல இடங்களில், மதுபானம் வாங்குவதற்காக 3 கிலோமீட்டர் தூரம் வரை மதுப்பிரியர்கள் வரிசையில் காத்திருந்துள்ளனர்.
 

;