தேசம்

img

மத்திய பாஜக அரசு ஒடுக்குமுறை அரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது - மக்களவையில் ஏ.எம். ஆரிப் குற்றச்சாட்டு

இந்த அரசு கொண்டுவந்துள்ள தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றம் சட்டவிரோத நடவடிக்கைகள் தடை (திருத்தச்) சட்டமுன்வடிவுகள், இந்த அரசு ஓர் ஒடுக்குமுறை அரசாக வளர்ந்து கொண்டிருப்பதற்கான அடையாளமாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் வழக்குரைஞர் ஏ.எம். ஆரிப் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று 2019ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்)சட்டமுன்வடிவின் மீதான விவாதத்தில் பங்கேற்று ஏ.எம். ஆரிப் பேசியதாவது:

2019ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்)சட்டமுன்வடிவானது, 2019ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடை (திருத்தச்) சட்டமுன்வடிவின் ஷரத்துக்கள் பலவற்றுடன் நெருங்கியமுறையில் ஒத்திருக்கிறது என்பதை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தச் சட்டமுன்வடிவின் 4-ஆவது பட்டியலுக்கு அளிக்கப்பட்டுள்ள திருத்தமானது, தேசியப் புலனாய்வு முகமையானது பயங்கரவாதிகளுடன், பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருப்பவர் எனத் தான் சந்தேகித்திடும் எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்திட அனுமதிக்கிறது. எனக்கு முன் பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டதைப்போல, இது அரசே கட்டவிழ்த்துவிடும்  பயங்கரவாதமே அன்றி வேறெதுவும் இல்லை. இது நம் அரசமைப்புச்சட்டத்தின் அடிப்படை உரிமைகளையும், சமுதாயப் பண்பின் அடிப்படைக் கூறுகளையும்  மீறுகிறது.

மாண்புமிகு உறுப்பினர் திரு. என்.கே. பிரேமசந்திரன், இந்தச் சட்டமுன்வடிவை அறிமுகப்படுத்தும் சமயத்தில் இதனை எதிர்த்து உரையாற்றுகையில், சட்டவிரோதமாக அடைத்து வைப்பது சம்பந்தமாக ஏ.கே. கோபாலன் (எதிர்) மதராஸ் மாநில அரசு வழக்கை மேற்கோள் காட்டினார்.

இப்போது ஒருசில குழுக்கள் மட்டுமே பயங்கரவாத அமைப்புகளாக கருதப்படுகின்றன. 2019 சட்டவிரோத நடவடிக்கைகள் தடை (திருத்தச்) சட்டமுன்வடிவு, எவரொருவரையும் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்பு வைத்திருக்கிறார் எனச் சந்தேகித்து அவரை பயங்கரவாதி என முத்திரை குத்த அனுமதிப்பதன் மூலம் இது ஒரு கொடுமையான சட்டமாக (Draconian Law) இருக்கும் என்பதைக் காட்டுகிறது.

சட்டவிரோத நடவடிக்மைககள் தடைச் சட்டத்தை வடிவமைத்த சமயத்தில், முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், இத்தகைய ஷரத்து கூடாது எனக்கூறி இதனை எதிர்த்திட்டார். இப்போது ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக தலைமையிலான அரசாங்கம் தங்கள் மூத்த தலைவரின் கருத்துக்களை மனதில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள எண்ணற்றோர் பல்வேறு சிறைச்சாலைகளில், நீதிமன்றங்களில் எவ்வித விசாரணையுமின்றி,  விசாரணைக் கைதிகளாக  அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

2019 சட்டவிரோத நடவடிக்கைகள் தடை (திருத்தச்) சட்டமுன்வடிவானது, ஆக்கியவனையே அழித்திடும் அரக்கனை (Frankenstein’s monster) கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. எதிர்காலத்தில் இது உங்கள்பக்கமாகவும் திரும்பக்கூடும். உலகம் உள்ளளவும் நீங்கள்தான் ஆட்சியிலிருப்பீர்கள் என்று தயவுசெய்து நினைக்காதீர்கள்.  

பயங்கரவாதம் தொடர்பாக மற்றுமொரு சட்டத்திற்கும் தங்கள் கவனத்தை ஈர்த்திட விரும்புகிறேன். தேசப் பாதுகாப்பு என்ற பெயரில் அரச பயங்கரவாதத்தை ஏவியதற்கு அது ஒரு சரியான உதாரணமாகும். ‘தடா’ என்று அறியப்பெற்ற பயங்கரவாத மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் (தடைச்) சட்டம் (TADA-Terrorist and Disruptive Activities (Prevention) Act), 1985க்கும் 1995க்கும் இடையே அமலில் இருந்தது. இதுதான், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து வரையறை செய்து, அவற்றை முறியடிப்பதற்காக அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட முதல் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாகும். அச்சட்டத்தின்கீழ் ஏராளமான அளவில் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக மிகவும் விரிவான அளவில் புகார்கள் எழுந்ததன்காரணமாக அச்சட்டம் நாளுக்குநாள் செல்வாக்கு இழந்து வந்தது. எனவே அது, 1995இல் தாமாகவே காலாவதியாக அனுமதிக்கப்பட்டது.

‘தடா’ சட்டம் எந்த அளவிற்கு மனித உரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தது என்பதனை கீழேயுள்ள எடுத்துக்காட்டு மிகச்சரியாகக் காட்டிடும்.

‘தடா’ சட்டத்தின்கீழும் மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின்கீழும்  கைது செய்யப்பட்டு, சுமார் 20 ஆண்டுகள் சிறைக் கம்பிகளுக்குப்பின்னால் சித்திரவதைகளை அனுபவித்தபின்னர்,  11 முஸ்லீம்கள் நிரபராதிகள் என்று கண்டு, 2019 பிப்ரவரி 27 அன்று நாசிக் சிறப்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இதேபோன்றே கேரளாவில் அப்தல் நாசர் மதானி வழக்கு. அவர், சுமார் ஒன்பது ஆண்டு காலம் நீதிமன்றக் காவலில் இருந்தபின்னர், அவர்மீதான குற்றச்சாட்டின்கீழ் அவர் குற்றவாளி இல்லை எனக் கண்டு,. விடுவிக்கப்படுகிறார்.

இந்தச் சட்டமுன்வடிவானது, 2008ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தைத் திருத்துகிறது. இந்தச் சட்டமானது, அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள குற்றங்களைப் புலனாய்வு செய்திடவும், வழக்குத் தொடர்ந்திடவும் நாடு தழுவிய அளவில் இம்முகமைக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும், இந்தச் சட்டம் அட்டவணையில் குறிப்பிட்டுள்ள குற்றங்களின் மீதான விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்திடவும் வகை செய்கிறது. இந்தச் சட்டமுன்வடிவானது, மத்திய அரசாங்கம், மாநிலங்களில் இயங்கிடும் அமர்வு நீதிமன்றங்களை இச்சட்டப்பிரிவின்கீழான சிறப்பு நீதிமன்றங்களாக அமைத்துக்கொள்ளலாம் என்றும் கூறுகிறது. மேலும் அவ்வாறே மாநில அரசாங்கங்களும், அமர்வு நீதிமன்றங்களை, சிறப்பு நீதிமன்றங்களாக மாற்றிடலாம் என்றும் இச்சட்டமுன்வடிவு கூறுகிறது.  

இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தற்போது நிலுவையில் உள்ள வழக்குகளின் விவரங்களுக்குள் நான் போகவில்லை. நம் நீதிமன்றங்கள் ஏற்கனவே ஏராளமான வழக்குகளை முடிக்கமுடியாமல் விழிபிதுங்கித் திண்டாடிக் கொண்டிருக்கின்றன. இப்போது இச்சட்டத்திருத்தத்தின்மூலம் தேசியப் புலனாய்வு முகமைச் சட்ட வழக்குகளையும் அந்நீதிமன்றங்களின்பக்கம் தள்ளிவிடுவது என்பது பொருத்தக்கேடானதாகும்.

தேசியப் புலனாய்வு முகமைச் சட்டத்தின்கீழ், அனைத்து அமர்வுநீதிமன்றங்களுமே, இச்சட்டத்தின்கீழான சிறப்பு நீதிமன்றங்கள் என்று வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இப்போது கொண்டுவந்திருக்கும் திருத்தங்கள், தேசியப் புலனாய்வு முகமையை சைபர் குற்றங்களை விசாரித்திடவும் (cyber crimes) அனுமதிக்கிறது. 2000ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 11ஆவது அத்தியாயத்தின் 66-F பிரிவின்படி, சைபர் குற்றம், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழோ அல்லது வேறெந்தச் சட்டத்தின் கீழோ  அதிகாரபூர்வமாக வரையறுக்கப்படவில்லை.  உண்மையில், அவ்வாறு செய்திடவும் முடியாது.

முடிவாக, 2019ஆம் ஆண்டு தேசியப் புலனாய்வு முகமை (திருத்தச்) சட்டமுன்வடிவு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைத்) திருத்தச் சட்டமுன்வடிவு ஆகிய இரண்டும் ஒழுங்கான வடிவமற்ற மற்றும் தெளிவற்றவைகளாகும்.  

இச்சட்டமுன்வடிவுகள் அரசு ஒடுக்குமுறை அரசாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அடையாளமாகும். இந்த அரசாங்கத்திடம், உண்மையான மற்றும் திறமையுடன் செயல்படக்கூடிய சிறப்பு நீதிமன்றங்களை அமைத்திட முன்வர வேண்டும் என்றும், 2019ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடைத்) திருத்தச் சட்டமுன்வடிவில் பயங்கரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணாகக்  கொண்டுவரப்பட்டுள்ள  கொடுமையான ஷரத்துக்களை (Draconian provisiuons) நீக்கிட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆரிப் பேசினார்.

(ந.நி.)

;