செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தேசம்

img

‘பாதாள லோகத்தால்’ பாஜக பதற்றம்.... அனுஷ்கா ஷர்மா தேசத்துரோகியாம்!

புதுதில்லி:
அமேசான் இணைய தொடரில் காட்டப்பட்டு வரும் ‘பாதாள லோகம்’ இணைய தொடர் தடை செய்யப்பட வேண்டும் என்றும், அதனைத் தயாரித்த அனுஷ்கா ஷர்மா மீது தேசத்துரோகச் சட்டப்பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் உ.பி.சட்டமன்றத்தின்  லோனி தொகுதி பாஜக உறுப்பினர் நந்த்கிஷோர் குர்ஜார் வழக்கு தொடுத்திருக்கிறார். அனுஷ்கா சர்மா, கிரிக்கெட் வீரர் விராட்கோலியின் மனைவி ஆவார்.

அமேசான் இணைய தொடரில் ‘பாதாள லோகம்’ என்று ஓர் இணைய தொடர் (மொத்தம் ஒன்பது தொடர்கள்) வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தத் தொடரில் வடமாநிலங்களில் பாஜகவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்களை தத்ரூபமாகக் காட்டியிருக்கிறார்கள். ரயிலில் வந்த முஸ்லிம் ஒருவரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று இந்துத்துவா வெறியர்கள் கொலை செய்திடும் காட்சி, கிராமங்களில் தலித்துகளுக்கும் குஜ்ஜார் இனத்தினருக்கும் இடையில் நடைபெறும் கொடூரமான சம்பவங்கள், அமைச்சர் ஒருவர் தலித்துகள் மத்தியில் சமபோஜனம் உண்டுவிட்டு, பின் வீட்டிற்குத் திரும்பியபின் தன்னுடன் கொண்டுவந்துள்ள கங்கை நீரால் தன்னைப் ‘புனிதப்படுத்திக்கொண்டு’ செல்வது முதலானவையும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. மேலும் வடமாநிலங்களின் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளை மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் பல சம்பவங்கள் அதில் இடம்பெற்றிருக்கின்றன. கதையின் ஆரம்பத்தில் நான்குபேர் ஒரு ஊடகவியலாளரைக் கொல்வதற்காகச் செல்கிறார்கள். அவர்களைக் காவல்துறையினர் வழிமறித்துக் கைது செய்துவிடுவார்கள். அவர்கள் யார் அந்த ஊடகவியலாளர் யார் என்பதில் ஆரம்பித்து சுமார் ஆறரை மணி நேரம் படமாக்கப்பட்டிருக்கிறது.

அந்த நால்வரும் கூலிக்காகக் கொலைகளைப் புரிந்திடுபவர்கள்தான். ஆனாலும் ஆட்சியாளர்கள் அதனை பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐஎஸ்ஐ தூண்டுதலுடன் நடைபெற்ற நிகழ்வாக மாற்றுவதாக காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன.
இத்தகு சம்பவங்கள் இத்தொடரில் இடம்பெற்றிருப்பதால் பதற்றமும் ஆத்திரமும் அடைந்து பாஜக எம்எல்ஏ வழக்கு தொடுத்திருக்கிறார் போல் தெரிகிறது. நந்த்கிஷோர் குர்ஜார், உத்தரப்பிரதேசத்தின் லோனி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர். அவர் இப்படத்தைத் தயாரித்த விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு எதிராக, அவர்மீது தேசத்துரோகப் பிரிவின்கீழ் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறி, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளார். மேலும் இத்தொடரை தடை செய்ய வேண்டும் என்று கோரி மத்திய தகவல் ஒலிபரப்புத்தறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கும் கடிதம் எழுதியிருக்கிறார். இவ்விரண்டையும் இவர் தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்திருக்கிறார்.   மேலும் நந்த்கிஷோர் குர்ஜார், நியூஸ்ரூம் போஸ்ட் தொலைக்காட்சியிலும் (முகக்கவசம் அணியாமல்) தோன்றி இந்தப்படத்தை அனுஷ்கா ஷர்மா எடுத்ததற்காக கிரிக்கெட் வீரர் விரோட் கோலி, அவரை விவாகரத்து செய்திட வேண்டும் என்றும் மிரட்டியிருக்கிறார்.   (ந.நி.)

;