தேசம்

img

கார்ப்பரேட் கம்பெனிகளின் மோசடி நடவடிக்கைகள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படுகின்றனவா?

புதுதில்லி, ஜூலை 18-

நாட்டில் இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகளின் மோசமான நடவடிக்கைகளைக் கண்டறியக்கூடிய விதத்தில் விழிப்புப்பணி மையங்களை அரசாங்கம் அமைத்திட இருக்கிறதா என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கேட்டிருந்த கேள்விக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கேள்வி நேரத்தின்போது, பி.ஆர். நடராஜன், நாட்டில் இயங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்திடும் மோசடிகளைக் கண்காணித்திட, விழிப்புப்பணி மையங்கள் அமைத்திட அரசாங்கம் உத்தேசித்திருக்கிறதா என்றும், ஆம் எனில் அதன் விவரங்கள் என்ன என்றும், மேலும் அவ்வாறு நாட்டில் மோசடியில் ஈடுபட்டுவரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எவை எவை என்றும், அவை  மேற்கொண்டுள்ள மோசடிகளின் தன்மைகள் என்னென்ன என்றும், அந்த மோசடிக் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன என்றும் கேட்டிருந்தார்.

இதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர்,  உறுப்பினர் கோரியிருப்பதுபோன்று விழிப்புப்பணி மையங்கள் அமைக்கும் கருத்துரு எதுவும் அரசிடம் கிடையாது என்றும், எனினும் அரசாங்கம் ஆழமான மோசடிப் புலனாய்வு அலுவலகம் (SFIO-Serious Fraud Investigation Office) அமைத்திருக்கிறது என்றும். அது கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் மோசடிகள் குறித்து புலனாய்வு மேற்கொள்கிறது என்றும், இந்த அலுவலகத்திற்கு மோசடி செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உரிமையாளர்களைக் கைது செய்வதற்கு அதிகாரம் உண்டு என்றும், இவ்வாறு கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த அலுவலகததிற்கு அனுப்பிய வழக்குகளின் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் அளித்துள்ள பட்டியலை ஆராய்கையில் 2015-16ஆம் ஆண்டில் 23 நிறுவனங்கள் மீதும், 2016-17ஆம் ஆண்டில் 25 நிறுவனங்கள் மீதும், 2017-18ஆம் ஆண்டில் 21 நிறுவனங்கள் மீதும், 2018-19ஆம் ஆண்டில் 33 நிறுவனங்கள் மீதும், 2019-20ஆம் ஆண்டில் ஜூன் 30 முடிய உள்ள தேதிகளில், 6 நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது.

இவற்றில் தமிழ்நாட்டில் 2016-17ஆம் ஆண்டில் இரண்டு நிறுவனங்கள் மீதும், 2017-18ஆம் ஆண்டில் ஒரு நிறுவனத்தின் மீதும், 2018-19ஆம் ஆண்டில் மூன்று நிறுவனங்கள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. எனினும் எவரும் கைது செய்யப்பட்டதாகவோ, மோசடிகள் மீது எவரும் தண்டிக்கப்பட்டதாகவோ அமைச்சரின் பதிலிருந்து தெரிய வரவில்லை.

(ந.நி)

;