தேசம்

img

இந்தியாவில் 873 பேர் தமிழகத்தில் 40 பேர்

 புதுதில்லி,மார்ச் 28- இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 பேராக அதிகரித்துள்ளது. வெள்ளியன்று 748 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இந்தியாவில் 873 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 177 பேருக்கும், கேரளாவில் 165 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 40 பேராக அதிகரிப்பு
தமிழகத்தில் வெள்ளியன்று சென்னையை சேர்ந்த 2 பேர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய் பாதித்தோரின் எண்ணிக்கை 38 பேராக அதிகரித்தது. இந்நிலையில் தமிழகத்தில் சனிக்கிழமையன்று மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் நாட்டில் இருந்து திரும்பிய கும்பகோணத்தை சேர்ந்த 42 வயது நபரிடம் ரத்த மாதிரி உள்ளிட்டவை பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா உறுதியானதால், அவர் தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காட்பாடியை சேர்ந்த 49 வயது நபர், பிரிட்டனில் இருந்து அண்மையில் திரும்பியிருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. அவர் தற்போது வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் 2 பேரும் வெளிநாடுகளில் இருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக தமிழகம் வந்தவர்கள் ஆவர்.

;