தேசம்

img

வெற்றி பெறுவதற்காக மட்டுமே போர்கள் நடத்தப்படுவதில்லை – மக்சேசே விருது பெற்ற என்டிடிவி ரவீஷ் குமார்

பத்திரிக்கைத் துறை சார்ந்து வழங்கப்பட்ட மக்சேசே விருதை கடந்த திங்கள்கிழமை மணிலாவில் நடைபெற்ற விழாவில் என்டிடிவியின் ரவீஷ் குமார் பெற்றுக் கொண்டார். விருதைப் பெற்றுக் கொண்டு ஏற்புரை வழங்கிய ரவீஷ் குமார், தங்களுடைய உயிரைப் பணயம் வைத்து நேர்மையாக பத்திரிக்கைத் துறை தர்மத்தை கடைப்பிடிக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

ஏற்புரை

ரமோன் மக்சேசே  விருது அறிவிக்கப்பட்ட பிறகு எனது உலகம்  முற்றிலும் மாறி விட்டது. எனக்கு அளிக்கபப்ட்டிருக்கும் கவுரவத்தை  விட நான் மணிலாவில் இறங்கியதிலிருந்தே நீங்கள் அளித்திருக்கும் விருந்தோம்பல் என்னை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது. ஒரு விருந்தினராக இல்லாமல்,  என்னை  நீங்கள் உங்கள்  குடும்பத்தின் அங்கமாக்கி இருப்பதை என்னால் உணர முடிகிறது. இன்று சந்திக்கிறோம், மீண்டும் நாம் சந்திக்கப் போவதில்லை என்பதாகவே பெரும்பாலும் விருது வழங்கும் விழாக்கள் தற்காலிகக் கூட்டங்களாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இங்கே அது  மிகவும் வித்தியாசமாக  இருப்பதை என்னால் உணர முடிகிறது. நாங்கள் மிகச் சாதாரணமானவர்கள் என்பதால், என்னை இந்த விருதிற்காகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் உண்மையிலேயே நான் ஏதோ செய்திருக்க வேண்டும் என்பதை எனக்கு உணர்த்துவதில் நீங்கள் வெற்றி பெற்றிருக்கிறீர்கள். உங்களுடைய அன்பு  முன்பை விட மிகவும் பணிவும் பொறுப்பும் உள்ளவனாக என்னை மாற்றியிருக்கிறது.

சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே நாம் எப்போதும் சமத்துவமின்மையை அளந்து வந்திருக்கிறோம். ஆனால் இப்போதைய காலம் அறிவு சமத்துவமின்மையையும் இவற்றோடு சேர்க்க வேண்டிய  நேரமாக  இருக்கிறது. தரமான அறிவு என்பது இன்றைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சில நகரங்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்ற  நிலையில், இத்தகைய அறிவு சமத்துவமின்மையானது சிறிய  நகரங்கள் மற்றும் கிராமங்களில் என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நம்மால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.  'வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகத்தின்' பிரச்சார  இயந்திரமே அறிவின் ஆதாரமாக இப்போது இருப்பது தெளிவாகிறது.  அதற்காக இன்றைய  இளைஞர்களை ஒருவரால் குறை கூற முடியாது. ஏனெனில்  இந்த இளைஞர்களுக்கு சிறந்த கல்வி மறுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களில் நிலவுகின்ற நெருக்கடியை மதிப்பிடுவது இங்கே மிக முக்கியமானதாக இருக்கிறது. ஊடகங்கள் தங்களை 'வாட்ஸ்ஆப் பல்கலைக்கழகம்' என்று வகைப்படுத்திக் கொள்ளுமேயானால், பார்வையாளர்கள்  மற்றும்  சமூகத்தின் மீது அவற்றின் செல்வாக்கு எவ்வாறானதாக இருக்கும்?  இந்தியக்  குடிமக்கள் இதைப்  புரிந்து கொள்ளத்  தொடங்கியுள்ளார்கள் என்பது ஒரு நல்ல அறிகுறியாக இருக்கிறது. அவ்வாறு புரிந்து கொள்லத் தொடங்கி இருப்பதால்தான், நான் பெறுகின்ற வாழ்த்துச் செய்திகள் ஊடகங்கள் எவ்வாறு முரட்டுத்தனமாக மாறிவிட்டன என்ற கவலைகளாலும்  நிரம்பியுள்ளன. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்ற என்னிடம் என்னுடைய தொழிலின்  இன்றைய நிலையைப்  பார்க்கும் போதான சோகமும்  சேர்ந்தே நிறைந்திருக்கிறது.

இந்திய ஊடகங்கள் மிகுந்த நெருக்கடி நிலையில் உள்ளன. இது தற்செயலானதாகவோ அல்லது சீரற்றதாகவோ இல்லாமல் நன்றாக கட்டமைக்கப்பட்டதாக இருக்கிறது. செய்தி நிறுவனங்களால் சமரசமற்ற  ஊடகவியலாளர்கள்  வேலையிலிருந்து  வெளியேற்றப்படுவதைக் காணும் போது, பத்திரிகையாளராக இருப்பது  ஒருவரின் தனிப்பட்ட முயற்சியாகி விட்டது தெரிகிறது. ஆயினும்கூட, நேர்மையான பத்திரிகை தர்மத்தைக் கடைப்பிடிப்பதற்காக தங்கள் வாழ்க்கையையும், வேலையையும் மிகுந்த சிக்கலுக்குள் வைத்திருக்கும் மிகச் சிலராலேயே நாம் இன்னும் தப்பிப் பிழைத்திருக்கிறோம்  என்பதைப்  பார்க்கும் போது  மனம் மகிழ்கிறது. தங்களுடைய கருத்துக்களைப் பேசுகிற  பெண் பத்திரிகையாளர்கள் பலரும் எந்த நிறுவனத்தையும் சாராது தனித்து பணியாற்றி சம்பாதிப்பதின் மூலம் தங்களைத் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

காஷ்மீரில்  இணையம்  முற்றிலுமாக முடக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான செய்தி சேனல்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையே கடைப்பிடித்தன. ஆயினும்கூட, அந்த இணைய முடக்கத்திற்கு ஊடாக இருந்து  தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து ராணுவத்தின்  கோபத்தை எதிர்கொள்ளத் துணிந்தவர்களை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு அமைப்பாக பத்திரிக்கைத் துறை காணாமல் போயிருக்கும் நிலையில், சில பத்திரிகையாளர்கள் தொடர்ந்து  போராடி தங்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

செய்திகளைத் தருகின்ற பணியின் புனிதத்தை  நம்மால் மீட்டெடுக்க முடியுமா? செய்திகளைத் தருவதில்  உண்மைத்தன்மையையும், எழுப்படுகின்ற குரல்கள் மற்றும் தளங்களில் இருக்கின்ற பன்முகத்தன்மையையும்  பார்வையாளர்கள்  நிச்சயம் மதிப்பார்கள்  என்றே நான் நம்புகிறேன். அளிக்கப்படுகின்ற  செய்திகள் உண்மையாக இருக்கும் வரை மட்டுமே ஜனநாயகம் செழிக்கும்.

இந்த ரமோன் மக்சேசே விருதை  நான் ஏற்றுக் கொள்கிறேன். அறிவு சமத்துவமின்மை உள்ள  காலத்தில் வாழ்ந்து வருகின்ற, நல்ல மற்றும் உண்மையான தகவல்கள் மற்றும் அறிவின் மீது தாகம் கொண்ட வாசகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரின் சார்பிலும் நான்  இந்த விருதை ஏற்றுக் கொள்கிறேன். இந்த தாகத்தை இளம் பத்திரிகையாளர்கள் பலரும் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்று பத்திரிகை துறையின் அர்த்தம் முழுமையாக மாறி விட்டிருக்கும் நிலையில், வரவிருக்கும் காலங்களில், அவர்கள்  இந்தப் போரில் தோற்றுப் போவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றாலும், இந்த நிலையை எதிர்த்து நிற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை. ”வெற்றி அடைவதற்காக மட்டுமே போர்கள் நடத்தப்படுவதில்லை -  ஒருவர்  போர்க்களத்தில்  இறுதி வரை இருந்தார் என்று இந்த உலகுக்குச்  சொல்வதற்காகவும் சிலர் போராடுகிறார்கள்".

நன்றி: https://www.ndtv.com/india-news/full-text-of-ravish-kumars-ramon-magsaysay-award-acceptance-speech-2098005

தமிழில்:முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்

 

 

;