தேசம்

img

ஐஐடி, ஐஎம்எம்களிலும் போதிய பேராசிரியர்கள் இல்லை

புதுதில்லி:
போதிய பேராசிரியர்கள் நியமிக்கப்படாததால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிலையங்கள் கடுமையான சிக்கலை எதிர்கொண்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், தேசிய வடிவமைப்பு நிலைய திருத்தச் சட்டமுன்வடிவு (National Institute of Design (Amendment) Bill, 2019) மீது, கடந்தவாரம் விவாதம் நடைபெற்றது. இதில்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஆழப்புழா தொகுதி நாடாளுமன்றஉறுப்பினர் ஏ.எம். ஆரிப் பங்கேற்றுப் பேசியதாவது:

கடந்த அறுபது ஆண்டுகளில் நாடாளுமன்றம் 134 நிலையங்களை தேசிய முக்கியத்துவம் உடையவை என பிரகடனம் செய்திருக்கிறது. 1956-இல் காரக்பூர், ஐஐடி-யில் தொடங்கி, இப்போது, மேலும் நான்குநிலையங்களை இதில் இக்கூட்டத் தொடரின்போது இணைத்திட இருக்கிறோம்.இதுபோன்று நிலையங்களை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் என்று பிரகடனம் செய்வது மட்டும் போதாது. பல நிலையங்கள் எண்ணற்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அவை குறித்தும் நாம் ஆழமான முறையில் சிந்தித்திட வேண்டும்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்களில் பிரதானமான பிரச்சனை மாணவர்கள் கிடையாது.கல்வியாளர்கள் பணியிடங்கள்நிரப்பப்படாமல் இருப்பதுதான்முக்கியமானது. இந்நிலையங்களுக்கு மாணவர்கள் போட்டித் தேர்வுவைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவதால் அவர்கள் சிறந்தவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அந்நிலையங்களின் ஆசிரியர் பணியிடங்கள் (Faculty) ஏராளமாக காலியாக இருக்கின்றன. ஐஐடி-களில்கூட 30 முதல்40 சதவிகித பணியிடங்கள் காலியாகஇருக்கின்றன. ஐஐஎம்-களில் 20 முதல் 30 சதவிகிதம் காலியாக இருக்கின்றன. இவை அனைத்தும் தேசியமுக்கியத்துவம் உடையவைகளாகும். இப்பணியிடங்களை நிரப்பிட துறையின் அமைச்சர் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்ததாக, இந்த கல்வி நிலையங்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணங்கள் நாளுக்கு நாள் உயர்த் தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இதனால் இங்கே பயிலும் மாணவர்கள் மிகவும் கொதித்துப் போயிருக்கிறார்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இதில் தலையிட வேண்டும்; விடுதிக் கட்டண உயர்வுக்கு எதிரான ஜேஎன்யு மாணவர்களின் போராட்டத்திற்குத் தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.தேசிய வடிவமைப்பு நிலையம்போன்ற நிறுவனங்கள் சமூக வளர்ச்சியிலும், வேலை வாய்ப்புகளை அளிப்பதிலும் மிக முக்கியப் பங்களிப்பினைச் செய்கின்றன என்பதை ஒப்புக்கொள்ளும் அதே சமயத்தில், இதுபோன்ற நிலையங்கள் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்பிரிவுகளில் வடிவமைப்பு வல்லமையை முன் னேற்றுவதற்கு உதவும் விதத்தில் அமைக்கப்பட்டவை ஆகும்.எனவே, தேசிய வடிவமைப்பு நிலையங்கள் தாங்கள் வடிவமைப்புகளை மேம்படுத்திட வேண்டும். நமது பாரம்பரிய கைவினைப்பொருள்களை மேம்படுத்தாவிட் டால் அதன்மூலம் நம் கைவினைஞர்களின் திறமையை வளர்த்தெடுக்காவிட்டால், இத்துறைகளில் வேலைவாய்ப்பை விரிவாக்க முடியாது. ஏற்றுமதியையும் அதிகரித்திடமுடியாது. எனவே அந்தத் திசைவழியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஏ.எம். ஆரிப் பேசியுள்ளார்.  (ந.நி.)

;