தேசம்

img

‘தேசம் காக்க ஒரே மனிதனாக எழுவோம்’

தஞ்சைக் கூட்டத்தில்  சீத்தாராம் யெச்சூரி அழைப்பு

தஞ்சாவூர், ஆக. 18 - ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான பாசிசத் தன்மை கொண்ட எதேச்சதிகார ஆட்சியின் பிடியிலிருந்து இந்திய தேசத்தை பாதுகாத்திட, நாடு முழுவதும் உள்ள ஒட்டுமொத்த தேசபக்தர்களும், ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும், ஒட்டுமொத்த இந்திய மக்களும் ஒரே மனிதனாக எழுந்து நின்று போர்க்குரல் எழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார். தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15, 16, 17 தேதிகளில் நடைபெற்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாட்டின் நிறைவாக ஞாயிறன்று நடைபெற்ற சாதி ஒழிப்புப் பேரணி - மாபெரும் பொதுக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நான்கு முக்கிய தூண்களான மதச்சார்பின்மை, பொருளாதார சுயசார்பு, சமூகநீதி மற்றும் கூட்டாட்சி ஆகிய வற்றை முற்றாக தகர்த்து, மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசான இந்தியாவை மதவெறி பிடித்த இந்துத்துவா ராஜ்ஜியமாக மாற்றுவதற்கு மிக வேகமாக மோடி அரசு  முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். அதன் ஒரு பகுதியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தையே சிதைத்து, அதன் சிறப்பு அந்தஸ்தை பறித்து, மாநிலம் என்ற தகுதியை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக துண்டாடி, தலைவர்களையும் மக்களையும் சிறை வைத்து, அம்மாநிலத்தையே திறந்தவெளி சிறைக்கூடமாக்கி, ராணுவத்தின்பிடியில் வைத்திருப்பதை விரிவாக விவரித்தார். இந்தத் தாக்குதல் நாளை எந்த மாநிலத்திற்கு வேண்டுமானாலும் நிகழலாம்; இதன்மூலம் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் - பாஜக தலைமையிலான ஒற்றை ஆட்சி என்ற திட்டத்தோடு மோடி அரசு சர்வாதிகார எண்ணத்துடன் நகர்கிறது எனவும் சீத்தாராம் யெச்சூரி சுட்டிக்காட்டினார்.

இந்தப் பின்னணியில், தலித்-பழங்குடி மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் உள்பட நாடு முழுவதும் வெவ்வேறு வடிவங்களில் நடைபெற்று வருகிற ஒவ்வொரு போராட்டமும், இன்றைக்கு இந்திய தேசத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தூண்களை பாதுகாப்பதற்கான மிகப்பிரம்மாண்டமான தேசபக்த போராட்டத்தின் ஒரு பகுதியாக மாறியிருக்கிறது என்று யெச்சூரி சுட்டிக்காட்டினார். தலித் - பழங்குடி மக்கள் மீதான சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான - சமூகநீதிக்கு ஆதரவான போராட்டமும், நாடு முழுவதும் தலித் - பழங்குடி மக்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த உழைப்பாளி வர்க்க மக்கள் மீதான பொருளாதாரச் சுரண்டலுக்கு முடிவு கட்டுகிற போராட்டமும் இணைந்து வீச்சுடன் கொண்டுசெல்லப்பட வேண்டும்; இந்த இரண்டு போராட்டங்களும், இன்றைக்கு இந்திய தேசம் என்ற மாபெரும் கட்டமைப்பை - வேற்றுமையில் ஒற்றுமை எனும் மகத்தான விழுமியத்தை உயர்த்திப் பிடித்திருக்கிற இந்திய தேசத்தை - பாதுகாப்பதற்கான பிரம்மாண்டமான போராட்டமாக விரிவடைய வேண்டும் என்றும் சீத்தாராம் யெச்சூரி விவரித்தார். தேசத்தின் பொருளாதாரம் உட்பட ஒவ்வொரு துறையும், ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மக்களும், அரசியலமைப்பின் ஒவ்வொரு அம்சமும் மோடி அரசால் தகர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் ஒட்டுமொத்த தேசமே ஒரே மனிதனாக எழுந்து நின்று முழங்க வேண்டும்; அதன் மூலம் பாசிச எதேச்சதிகாரத்திற்கு முடிவுகட்ட வேண்டும் என்றும் சீத்தாராம் யெச்சூரி அழைப்பு விடுத்தார்.

;