தேசம்

img

யோகி தலையில் ஓங்கிக் குட்டிய உச்சநீதிமன்றம்

புதுதில்லி:
ஆதித்யநாத் குறித்து ‘அவதூறு’ கருத்தைப் பரப்பியதாக, கடந்த சில நாட்களில் மட்டும் 5 பேரை, உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்திருந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கைக்கு உச்ச
நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று திரும்பிய, கான்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, முதல் வர் யோகி ஆதித்யநாத்தைத் தான் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், ஒரு‘சாமியார்’ என்பதால், அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக ஒருபெண் கூறியது பலரின் கவனத்தை ஈர்த்தது.அந்த அடிப்படையில், தில்லியைச் சேர்ந்த ‘ப்ரீலேன்ஸ்’ செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர், கான்பூர் பெண்
பேட்டியளித்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இதேபோல தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றிலும் அந்த வீடியோவை ஒளிபரப்பியது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர் பிரசாந்த் கனோஜியா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவுசெய்த உத்தரப்பிரதேச மாநில போலீசார், தில்லியிலுள்ள வீட்டிற்கே சென்று அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். டிவி சேனலின் தலைமை செய்தியாளர் ஈஷிகாசிங், செய்திஆசிரியர் அனுஜ் சுக்லா ஆகியோரும் மின்னல் வேகத்தில் கைது செய்யப்பட்டனர். ஆதித்யநாத் குறித்து பேட்டியளித்தகான்பூர் உள்பட 2 பேர் உத்தரப்பிரதேசத் தில் கைது செய்யப்பட்டனர்.இதையடுத்து, செய்தியாளர் பிரசாந்த் கனோஜியாவைக் கைது செய்த, உத்தரப்பிரதேச பாஜக அரசைக் கண்டித்து, தில்லி பத்திரிகையாளர்கள் திங்களன்று போராட்டம் நடத்தினர். மறுபுறத்தில் பிரசாந்த் கனோஜியாவின் மனைவி ஜாகிஷ் அரோரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தனது கணவர் கைது செய்யப்பட்டதுதவறு என்பதுடன், கைது நடவடிக்கையின்போது, பின்பற்றப்பட வேண்டிய சட்டவழிகாட்டுதல்களையும் போலீசார் பின்பற்றவில்லை என்று அரோரா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், அரோரா தொடர்ந்தவழக்கு செவ்வாயன்று உச்ச நீதிமன்றத் தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்தோகி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. 

அப்போது, அவதூறு குற்றச்சாட்டின் அடிப்படையில், உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்ட கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அவதூறு வழக்குக்காக ஒருவரை 11 நாட்கள் சிறையில் அடைப்பதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும், இது நேர்மையான நடவடிக்கை இல்லை என சாடிய அவர்கள், ட்விட்டரில் பதிவிட்ட ஒரு காரணத்துக்காகவே கனோஜியாவை சிறையில் அடைத்தது சரி அல்ல என்றும் விமர்சித்தனர். அத்துடன் கனோஜியாவை உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதன்மூலம் ஆதித்யநாத் அரசின் அராஜகத்திற்கு உச்சநீதிமன்றமே தலையில் குட்டு வைத்துள்ளது.

;