தேசம்

img

கேரளத்திற்கு  5 கோடி  வேலை நாட்கள் குறைப்பு

புதுதில்லி:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் கேரளத்திற்கான 5 கோடிவேலை நாட்களை பறித்து கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வில் மத்திய அரசு மண்அள்ளி போட்டுள்ளது.முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்ப்பந்தம் காரணமாக ஊரக வேலை உறுதித்திட்டத்தை அமல்படுத்தியது. சட்டப்பூர்வ உரிமையான இந்த திட்டத்திற்கு தேவையான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் மூலம் நாடு முழுவதும் கிராமப்புற ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய் கிடைத்து வந்தது. 

இந்நிலையில் 2019-20க்கான மத்திய நிதிநிலைஅறிக்கையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தைசிறப்பாக செயல்படுத்திவரும் கேரள மாநிலத்துக்கு பெருமளவு வேலை நாட்கள் வெட்டி சுருக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில்  ஐந்து கோடி வேலை நாட்கள் அனுமதிக்கப்பட்டிருந்தது. பெருவெள்ள பாதிப்பை தொடர்ந்து கூடுதலாக ஒன்றரைக்கோடி வேலை நாட்கள் அனுமதிக்கப்பட்டன. இந்த ஆண்டு 7 கோடி வேலை வாய்ப்புகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. 9.4 கோடி வேலை நாட்களை அனுமதிக்குமாறு கேரள அரசு கோரியிருந்த நிலையில் கடந்த 2ஆண்டுகளில் 5 கோடி வேலைவாய்ப்புகளை  மத்திய அரசு வெட்டிக் குறைத்துள்ளது. இதற்கு எதிராக போராட்டம் நடத்த கேரள மாநில ஊரக தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

மத்திய பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது மேலும் கேரளத்திற்குபாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலை நாட்கள் குறைப்புக்கு இணையாக நிதி ஒதுக்குவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. கடந்தநிதி ஆண்டில் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக ஊதிய நிலுவை ஏற்பட்டது. மாநில அரசின் வலுவான தலையீடுகளுக்கு பிறகே அந்த தொகையை பெற முடிந்தது.

;