தேசம்

img

ஆர்.எஸ் பாரதி கைது: ரூ. 200 கோடி ஊழலை அம்பலப்படுத்த முயன்றதால் கைது செய்யப்பட்டேன் - ஆர்எஸ்பாரதி

தலித் மக்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதாகக் கூறப்பட்ட புகாரில், திராவிட முன்னேற்ற கழக அமைப்பு செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதியை இன்று அதிகாலை  அவரது இல்லத்தில் போலீஸார் கைது செய்தனர்.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி கடந்த  பிப்ரவரி 14 ஆம் தேதி, சென்னை, அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, "தலித் சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை" என பேசினார். இதற்கு பல்வேறு தலித் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன.  ஆர்.எஸ் பாரதி இந்த பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, தன்னுடைய பேச்சு யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் தான் அதற்கு வருத்தம் தெரிவித்து கொள்வதாக ஆர். எஸ் பாரிதி தெரிவித்தார். .
இந்நிலையில், ஆர்.எஸ்.பாரதி பேச்சு தலித் சமுதாயத்தினரை அவமதிக்கும் விதமாக இருப்பதாக கூறி அவரை கைது செய்ய வேண்டும் என, ஆதிதிராவிடர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண் குமார் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், இன்று (மே 23) அதிகாலை, சென்னை, ஆலந்தூரில் உள்ள ஆர்.எஸ்.பாரதியின் இல்லத்தில் அவரை போலீஸார் , எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 
இதையடுத்து, ஆர்.எஸ்.பாரதி எழும்பூரில் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். 
இதையடுத்த எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன்பு விசாரணைக்கு  ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது வழக்கை ரத்து செய்ய கோரிய மனு உயர்நீதிமன்றத்தில்  நிலுவையில் உள்ளது. இதனால் நீதிமன்ற காவல் வழங்க கூடாது என்று வாதிடப்பட்டது.  இதையடுத்து அவர் எந்த  நிபந்தனைகளும் இல்லாமல் அவரை  ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 
முன்னதாக கைது செய்து அழைத்துச்செல்லப்பட்டபோது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.எஸ் பாரதி  கூறியதாவது: ஓபிஎஸ் செய்த ஊழல் குறித்து நேற்று மாலை விஜிலன்ஸ் கமிஷனில் நான் புகார் அளித்துள்ளேன். கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக 4 ஆயிரம் மதிப்புள்ள  பிளிச்சிங் பவுடர் ஸ்பிரே 14 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.  2 நாட்களில் கோவை மாநகராட்சியில் ஏறத்தாழ  ரூ. 200  கோடி ரூபாய்க்கு பில் கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை நான் சேகரித்து புகாரளிக்க உள்ளதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொண்டதால்தான் நான் கைது செய்யப்பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.  
 

;