தேசம்

img

மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு  ரூ.5000 வழங்க வேண்டும் - ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை 

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இன்று அறிவித்த மத்திய அரசின் சிறப்பு நிவாரண தொகுப்பு மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரை பெரும் ஏமாற்றம் என ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

மத்திய நிதியமைச்சர் மூன்று மாதங்களுக்கு சேர்த்து மாற்றுத்திறனாளிகளுக்கு வெறும் ரூ.1000 மட்டுமே சிறப்பு உதவி நிதி, அதுவும் 2 தவணைகளாக வங்கிகளில் நேரடியாக செலுத்தும் முறையில் தருவதாக அறிவித்துள்ளார். இது மாதம் ஒன்றுக்கு சராசரியாக மாதம் ரூ.333.33 மட்டுமே என்பதால் எவ்விதத்திலும் போதாது.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை பெற அரசு வழங்கும் அடையாள சான்று அவசியம். ஆனால், மத்திய அரசின் ஊனமுற்றோர் துறையின் புள்ளி விபரங்களின்படி 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் அடையாளம் காணப்பட்ட ஊனமுற்றோரில் பாதி பேருக்கு அடையாள சான்றே இல்லை.  அது மட்டுமல்லாது 2011 கணக்கெடுப்பில் வெறும் 7 வகை ஊனமுற்றோர் குறித்து பதிவு செய்யப்பட்டது.  தற்போது, புதிய சட்டத்தின்படி அது மூன்று மடங்காக, அதாவது 21 வகையினராக உயர்ந்துள்ளது.

சமூக, பொருளாதார அடிப்படையில் மிகவும் பாதிக்கப்பட்ட பின்னணியை கொண்டவர்களாகவே மிகப்பெரும்பகுதியான மாற்றுத்திறனாளிகள் உள்ளனர்.   கடுமையாக பாதிக்கப்படும் இப்படிப்பட்ட அசாதாரண காலங்களில் தங்களை தற்காத்துக்கொள்வது மாற்றுத்திறனாளிகளக்கு மேலும் சிரமமாகி விடுகிறது.

பலவீனமான மற்றும் விளிம்புநிலை மக்களின் நலன்களை மிக நீண்ட காலமாகவே கைவிட்ட அரசாங்கத்திடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?  மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவி உபகரணங்கள் மற்றும் பராமரிப்புத் தேவைகளுக்குத் தேவையான செலவை ஈடு செய்ய வேண்டியது மட்டுமல்ல, பெரும்பாலான மாற்றுத்திறனாளிகளுக்கு முழுநேர பாதுகாவலர் தேவை என்பதையும் அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் உறுப்பினர் இந்த நோக்கத்திற்காக, பெரும்பாலும், அவர்களின் வேலைவாய்ப்பைக்கூட கைவிட்டுவிடுவதால், வீட்டுச் சுமையும் வறுமையும் பன்மடங்கு அதிகரிக்கிறது.

எனவே, கொரோனா வைரஸ் நீங்கி, இந்த ஊரடங்கு விலக்கிக்கொள்ளும் வரை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.5000/- வழங்க வேண்டுமென ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை மத்திய அரசை வலியுறுத்திக் கோருகிறது.  இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

;