தேசம்

img

தில்லி போலீசை, பேருந்துகளை எரிக்க பயன்படுத்துகிறது பாஜக... புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டு தில்லி துணை முதல்வர் குற்றச்சாட்டு

பாஜகவுடன் இணைந்து காவல்துறை, தில்லி மாணவர் போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பதாக தில்லி மாநில ஆம் ஆத்மி அரசின் துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா புகைப்படங்களை வெளியிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தில்லியில் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தி கடுமையாக தாக்கி வெறியாட்டம் போட்டது.காவல்துறையோடு இணைந்து பாஜகவை சேர்ந்த குண்டர்களும் மாணவர்களை தாக்கிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்த புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள தில்லி துணை முதல்வர் மனிஷ் சிஷோடியா, பாஜக காவல்துறையை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபட்டு வருவதாகவும், பேருந்துகளுக்கு தீவைப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இது மிகவும் கீழ்த்தரமான அரசியல் எனவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்களுக்கு அப்பல்கலைக்கழக நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துமீறிபல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து காவல்துறை வெளியாட்களை வைத்து வன்முறை நிகழ்த்துகிறது என பல்கலைக்கழக நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

கொதிக்கும் உ.பி. மாணவர்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். அங்கும் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி என போலீசார் பலப்பிரயோகம் செய்தனர். இந்நிலையில், இவ்விரு பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்வா கல்லூரி விடுதி மாணவர்கள் பேரணி செல்ல முயன்றனர்.  ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கல்லூரி வளாகத்திற்குள் திருப்பி அனுப்பினர். கல்லூரி வளாகத்திற்குள் இருந்தபடி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், வளாகத்திற்கு வெளியே பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். இருதரப்புக்கும் இடையே கல்வீச்சு  உள்ளிட்ட சம்பவங்களால் போர்க்களம் போல மாறியது.

;