தேசம்

img

அரசமைப்புச்சட்டத்தில்  மோசடி காஷ்மீருக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது - பிரசுரம் வெளியீடு

புதுதில்லி, ஆக. 23-

அரசமைப்புச் சட்டத்தில் மோசடி செய்யப்பட்டு, காஷ்மீருக்குத் துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது என்னும் பெயரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிறுபிரசுரம் வெளியிடப்பட்டது. பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வியாழன் அன்று மாலை இதனை வெளியிட்டார்கள்.

அரசமைப்புச் சட்டத்தில் மோசடி – காஷ்மீருக்குத் துரோகம் (Fraud on Constitution – Kashmir betrayed) என்னும் தலைப்பில் சிறுபிரசுரம் வியாழன் அன்று மாலை புதுதில்லியில் உள்ள மத்தியக் குழு அலுவலகமான ஏ..கே. கோபாலன் பவனில் வெளியிடப்பட்டது. பிரசுரத்தை வெளியிட்டு, சீத்தாராம் யெச்சூரி பேசியதாவது:

இந்தப் சிறுபிரசுரம் காஷ்மீர் மக்களுக்கு எப்படியெல்லாம் துரோகம் இழைக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதையும் காஷ்மீருக்கு எதிராக அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொய்ப்பிரச்சாரங்கள் அனைத்தும் எப்படியெல்லாம் உண்மையல்ல என்பதையும் தக்க ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைத்தது. அந்த சமயத்தில் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திடவில்லை. அது இந்தியாவுடனும் இணையாமல், பாகிஸ்தானுடனும் இணையாமல் தனி நாடாகத்தான் இருந்தது. அப்போது காஷ்மீரை ஆண்டுவந்த மகாராஜா, மௌண்ட் பேட்டனுக்குத் தாங்கள் யாருடன் இணைவது என்பது குறித்து தங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது என்று எழுதியிருந்தார். எனவே நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது அதனுடன் காஷ்மீர் இணைந்திடவில்லை.

அந்த சமயத்தில் பாகிஸ்தான் காஷ்மீருக்குள் ஊடுருவியது. மகாராஜா ஜம்முவுக்குத் தப்பி ஓடிவிட்டார். பின்னர் தங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்படி மௌண்ட்பேட்டனுக்கு எழுதினார்,. அதற்கு மௌண்ட்பேட்டன், தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் தேவையானால் இந்தியாவைக் கேளுங்கள் என்றும் சொல்லிவிட்டார்.

அதன்பிறகு காஷ்மீர் மகாராஜா இந்தியாவுடன் சேர ஒப்புக்கொண்டார். அப்போது காஷ்மீர், இந்தியாவுடன் சேர்வதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் மூன்று அம்சங்கள் மட்டும்தான் இந்தியாவுடன் இருந்திடும். பாதுகாப்பு (Defence), அயல்துறை விவகாரங்கள் (External Affairs) மற்றும் தொடர்பு (Communication) ஆகியவை மட்டும்தான் இந்தியா கவனித்திடும்,. மற்ற அனைத்துத் துறைகளும் காஷ்மீரில்தான் இருந்திடும். இது ஒரு தற்காலிக ஷரத்துதான். இவை குறித்து பின்னர் விரிவாகப் பேசி முடிவு செய்துகொள்ளலாம் என்ற முறையில்தான் அரசமைப்புச் சட்டம் 370ஆவது பிரிவு உருவானது.

அதனால்தான் இது ஒரு தற்காலிகமான ஷரத்து என்று கூறப்பட்டது. எனினும் பின்னர் மத்தியில் ஆட்சி செய்தவர்கள் காஷ்மீர் மாநிலத்தின் அதிகாரங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்துக்கொண்டார்கள்.

காஷ்மீர் மாநிலத்துக்கு மட்டும்தான் சிறப்பு அந்தஸ்து அளித்திருந்ததுபோலவும் அதனை இப்போது அரசு நீக்கி இருக்கிறது என்பது போலவும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. இது உண்மையல்ல. நாட்டில் பத்து மாநிலங்களுக்கும் மேலானவற்றிற்கு சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்பட்டிருக்கின்றன. வட கிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கின்றன. மகாராஷ்ட்ரா, கோவா, ஆந்திரா, தெலங்கானா, சிக்கிம், மிசோரம், நாகாலாந்து என பல மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கின்றன. எனவே காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும்தான் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்ததுபோலவும், அதனைத்தான்  இப்போது ரத்து செய்திருக்கிறோம் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுவதும் உண்மையல்ல.

அதேபோன்று காஷ்மீர் மாநிலத்தில் மட்டும்தான் எவரும் சொத்து வாங்க முடியாது என்ற நிலை இருந்தது அதனை ரத்து செய்துவிட்டோம் என்று அரசு கூறுவதும் உண்மையல்ல. உத்தர்காண்ட் மாநிலத்தில் வெளியார் எவரும் சொத்து வாங்க முடியாது. இமாசலப் பிரதேசத்தில் எவரும் சொத்து வாங்க முடியாது. வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றில் சொத்து வாங்க முடியாது. பழங்குடியினர் வாழும் பகுதிகளில் எவரும் சொத்து வாங்க முடியாது. எனவே சொத்து வாங்குவது தொடர்பாக அரசு அவிழ்த்துவிட்டுள்ள சரடும் உண்மையல்ல.

இவ்வாறு தாங்கள் எதற்காக காஷ்மீர் மாநிலத்தை சிதைத்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றியிருக்கிறோம் என்கிற உண்மையை மக்களிடமிருந்து மறைப்பதற்காகத்தான் இத்தகைய சரடுகளை அரசாங்கம் அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரே மாநிலம் காஷ்மீர்தான். எனவே இதனை அழித்து ஒழிக்க வேண்டும், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இல்லாதபடி இம்மாநிலத்தின் அமைப்பை மாற்றியமைக்கவேண்டும் என்கிற சூழ்ச்சித்திட்டத்தின்காரணமாகத்தான், தற்போதுள்ளள மதச்சார்பற்ற குடியரசை, ஆர்எஸ்எஸ் விரும்பும் பாசிஸ்ட் இந்து ராஷ்ட்ரமாக மாற்ற வேண்டும் என்கிற இழிநோக்கத்தின் ஒரு பகுதியாகத்தான் காஷ்மீர் மாநிலத்தை இவ்வாறு சிதைத்து சின்னாபின்னப்படுத்தி இருக்கிறார்கள்.

நாட்டில் இதுவரை 29 மாநிலங்கள் இருந்தன. காஷ்மீரை இவ்வாறு சிதைத்தபின் இப்போது 28 மாநிலங்களாகிவிட்டன. இவ்வாறு மாற்றிய விதம் மிகமிக ஆபத்தானதாகும்.

அரசமைப்புச்சட்டத்தின் 3ஆவது பிரிவு என்ன சொல்கிறது?  எந்தவொரு மாநிலத்தின் எல்லையையும் மாற்றியமைக்கவேண்டும் என்றால், அம்மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்கிறது. ஆனால் காஷ்மீரில் என்ன நிலைமை? இங்கே கூட்டணி ஆட்சியிலிருந்த பாஜக, கூட்டணியிலிருந்து விலகிக் கொண்டது. பின்னர் மாநில சட்டமன்றத்தைக் கலைத்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியைத் திணித்தது. மாநில சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடத்த வாய்ப்பிருந்தும் தேர்தலை நடத்திடவில்லை. மக்களவைக்கு மட்டும்  தேர்தலை நடத்தியது. இப்போது ஆளுநர் ஒப்புதலையே சட்டமன்றம் ஒப்புதல் அளித்ததாகக் கூறி, மாநில சட்டமன்றத்தையே சிதைத்துவிட்டது. இவ்வாறு காஷ்மீர் மாநிலத்தைச் சிதைத்து சின்னாபின்னப்படுத்தியுள்ள விதம் மிகவும் ஆபத்தானது. இதுபோன்று இதற்முன் நடந்ததே இல்லை. இவ்வாறு காஷ்மீர்மாநிலத்தைச் சிதைத்ததுபோன்ற நிலைமை வேறு மாநிலங்களுக்கும் வரலாம். தங்களை ஆதரிக்காத அரசாங்கங்கள் உள்ள மாநிலங்களை இவ்வாறு மத்திய அரசு கலைக்கலாம். பின்னர் அவற்றை யூனியன் பிரதேசங்களாக மாற்றலாம்.

நாடாளுமன்றத்தில் இதனை இந்த அரசு மேற்கொள்வதற்கு முன்பு அம்மாநிலத்திற்கு ராணுவத்தினரை ஏராளமாக அனுப்பி நிறுத்தி வைத்துள்ளது. இதுபோன்றதொரு நிலைமை உலகத்தில் வேறெங்குமே கிடையாது. மாநிலத்தில் இயங்கிவந்த அனைத்து அரசியல்கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். முன்னாள் முதல்வரும், இப்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவருமாகிய பரூக் அப்துல்லா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். எங்கள் கட்சியைச் சார்ந்த – நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த – முகமது யூசுப் தாரிகாமி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஏன்? இவ்வாறு இந்த அரசாங்கம் காஷ்மீர் மீது மேற்கொண்ட நடவடிக்கை என்பது நம் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது, மதச்சார்பின்மைக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சித்தத்துவத்திற்கு எதிரானது. இவ்வாறு நம் அரசமைப்புச் சட்டத்தின் நான்கு தூண்களுக்கும் எதிரானது.

இவர்களின் குறிக்கோள் இப்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை, தங்களுடைய ஆர்எஸ்எஸ் விரும்பும் வெறிபிடித்த பாசிஸ்ட் இந்துத்துவா ராஷ்ட்ரமாக மாற்றவேண்டும் என்கிற இழி நோக்கத்துடன் இவ்வாறு காஷ்மீர் மாநிலம் சிதைக்கப்பட்டிருக்கிறது.

காஷ்மீர் மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக ஆட்சியாளர்கள் திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை என்பதை அந்நிய  ஊடகங்கள் உலகத்திற்கு தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இயல்பு வாழ்க்கைத் திரும்பி இருக்கிறது என்றால் எங்கள் கட்சித் தலைவரைச் சந்திப்பதற்காக ஸ்ரீநகருக்குச் சென்ற என்னை ஏன் விமான நிலையத்திலிருந்து வெளியே செல்வதற்கு அனுமதித்திடவில்லை? ஏன் திருப்பி அனுப்பினீர்கள்? பாலஸ்தீனம் போன்று நம் நாட்டையும் மாற்றிடும் நடவடிக்கைகளில் ஆட்சியாளர்கள் இறங்கியிருக்கிறார்கள். இவர்கள் நடவடிக்கைகளால் நம் நாடும் நாட்டின் ஜனநாயகமும் மிகவும் ஆபத்திற்குள்ளாகி இருக்கிறது. 

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி பேசினார்.

(நநி.)  

 

 

;