வெள்ளி, ஆகஸ்ட் 7, 2020

தேசம்

img

1.20 லட்சம் பேருக்கு அரசுப்பணி

பாலா:
கேரளத்தில் அரசுப் பணியாளர் நியமனத்துக்கு முந்தைய யுடிஎப் அரசு விதித்திருந்த தடையை விலக்கியதுடன் 3 ஆண்டுகளில் ஒருலட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இடது ஜனநாயக முன்னணி அரசு வேலை வழங்கியுள்ளது; 22,500 புதிய பணியிடங்களையும் தோற்றுவித்துள்ளது என  கேரள முதல்வர் பினராயி விஜயன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

கேரள மாநிலம் பாலா சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது மேலக்காவு மடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:
மூன்றே கால் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தகேரளம் அல்ல இப்போதுள்ளது. கேட்பாரற்றவகையில் ஊழல் முறைகேடுகள் நடந்த ஆட்சியிலிருந்து முறைகேடுகள் கடுமையாக ஒடுக்கப்பட்ட மாநிலமாக கேரளம் மாறியுள்ளது. இதைமத்திய அரசும் அங்கீகரித்துள்ளது. ஆனால் அது போதாது, ஊழல் சிறிதளவும் இல்லா மாநிலமாக மாற வேண்டும். கேரளத்தில் இன்று யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. கேரளத்தின் முதலீட்டுச் சூழல் மாறிவிட்டது. புதிய
முயற்சிகளுடன் வருவோர் ஊக்குவிக்கப்படு கிறார்கள். நிஸானைப் போன்ற சர்வதேச நிறுவனங்கள் வருகின்றன. கேரளத்தில் 600 கிலோ மீட்டர் நடைபாதை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு நிறைவுபெறும். சபரிமலையில் விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ஓய்வூதியம் இரட்டிப்பு
இடதுசாரி அரசு எப்போதும் ஏழைகளின் பக்கம் நிற்கும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் இதை தெளிவுபடுத்தும். மூன்றேகால் ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வூதியம் வழங்க வேண்டிய ரூ.1800 கோடியை யுடிஎப் அரசு நிலுவையில் வைத்திருந்தது. எல்டிஎப் அரசு அந்த தொகையை வழங்கிவிட்டது. ஓய்வூதியதொகை ரூ.600லிருந்து ரூ.1200ஆக உயர்த்த ப்பட்டுள்ளது. இன்று அனைவருக்கும் ஓய்வூதியம் கிடைக்கிறது. புதிதாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
பட்டா வழங்குவதில் தீவிர நடவடிக்கையை இந்த அரசு மேற்கொண்டுள்ளது. 5 ஆண்டுகளில் 40ஆயிரம் பேருக்குத்தான் யுடிஎப் அரசுபட்டா வழங்கியது. எல்டிஎப் அரசு 3 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கியுள்ளது. முதல்வர் நிவாரண நிதியாக யுடிஎப் அரசு ரூ.453கோடி வழங்கியது. ஆனால், மூன்றாண்டுகளில் எல்டிஎப் அரசு வழங்கிய தொகை ரூ.1294 கோடி. இது 3.70லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

5 லட்சம் புதிய மாணவர்கள்
கேரளத்தின் பொதுவான வளர்ச்சியை முன்னிறுத்தி 4 முக்கிய திட்டங்கள் (மிஷன்கள்) செயல்படுத்தப்படுகின்றன. அதில் ஒன்றான லைப் திட்டத்தின் மூலம் 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் புதிதாக கட்டப்பட்ட சொந்த வீடுகளில் இம்முறை ஓண விருந்துண்டனர். பெருவெள்ளத்தில் வீடுகளை இழந்த 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்பட்டன. பொதுக்கல்வி பாதுகாப்பு திட்டத்தின் மூலம் உலகத்தின்எந்த கல்வி முறைகளையும் நம்மால் கடைப் பிடிக்க முடிந்துள்ளது. மூன்றாண்டுகளில் பொதுக்கல்வி நிறுவனங்களில் 5 லட்சம் வரையிலான மாணவ - மாணவிகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.கேரளத்தில் வேளாண்துறை பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அன்றைய கணக்கின்படி வேளாண்மை 4.6 சதவிகிதம் பின்னடைவில் இருந்தது. அதை கடந்து தற்போது பெருமைப்படும் வளர்ச்சியை எட்டியுள்ளோம். நெல் விவசாயம் அதிக அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. தரிசு நிலமற்றதாக பல உள்ளாட்சி அமைப்புகள் மாறியுள்ளன. கேரளத்தில் ரப்பர் விவசாயிகளுக்கு யுடிஎப் அரசு ரூ.210 கோடி வழங்க வேண்டிய தொகையை பாக்கி வைத்திருந்தது. அந்த தொகை கிடைக்காது என ரப்பர் விவசாயிகள் கருதினர். அந்தரூ.210 கோடியை வழங்கியதுடன், மேலும்ரூ.1310 கோடியை 4.12 லட்சம் விவசாயி களுக்கு இந்த அரசு வழங்கியது. பெருவெள்ளம் மற்றும் காலநிலை மாற்றங்களால் துயரத்துக்கு உள்ளான விவசாயிகளுக்கு எல்டிஎப் அரசுதுணை நின்றது. 61 சதவிகிதமாக  இருந்த திட்டச் செலவு இப்போது 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. நாட்டின் மீதும் மக்கள் மீதும் உள்ள அர்ப்பணிப்பை எல்டிஎப் அரசு இந்த வகையில் வெளிப்படுத்தி வருகிறது. 

லாபத்தில் பொதுத்துறை நிறுவனங்கள்
தேசிய அளவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ஆளுநரே இதை தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கொள்கைகளின் விளைவாக பொதுத்துறை நிறுவனங்கள் தகர்ந்து வருகின்றன. ஆசியான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை எல்டிஎப் கடுமையாக எதிர்த்தது. அவ்வாறு எதிர்த்த எங்களை பலரும் ஏளனம் செய்தனர். யுடிஎப்அரசின் 5 வருட ஆட்சி காலத்தில் இதேஉலகமயமாக்கல் கொள்கையை வெளிப்படையாக அமல்படுத்தினர். யுடிஎப்பும், யுபிஏவும் பிடிவாதமாக உலகமயமாக்கல் கொள்கைகளை அமல்படுத்தின. யுடிஎப் அரசு முடிவுற்றபோது பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.131கோடி நட்டத்தில் இருந்தன. இப்போது அதேபொதுத்துறை நிறுவனங்கள் ரூ.258 கோடி லாபம் ஈட்டியுள்ளன. நாட்டின் வளர்ச்சி என்பதில் அடிப்படை வசதிகள் மிகவும் முக்கியமானவை. அதற்காகபுதிய நிதி ஆதாரத்தை நாம் கண்டறிந்தோம். அதற்கு உதவும் ‘கிஷ்பி’ யை தகர்க்க வேண்டும்என்கிற மனநிலை சிலரிடம் உள்ளது. நீங்கள் இங்கே எந்த ஒரு வளர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டாம் என்பதே அவர்களது மனநிலை. அவர்கள் எதையும் செய்யவில்லை என்பதற்காக நாட்டுக்கு நன்மை தரும் திட்டங்களை தடுக்க வேண்டுமா என்ன? கிஷ்பி மூலமாக ரூ.50ஆயிரம் கோடிக்கான திட்டங்களை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. ரூ.45ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான திட்டங்கள் இப்போதே துவக்கப்பட்டுள்ளன. மலையோர நெடுஞ்சாலை, கடற்கரை நெடுஞ்சாலை,தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்தவும் ஒரு பகுதி நிதி கண்டறியப்பட வேண்டியுள்ளது. 

திருவனந்தபுரத்திலிருந்து காசர்கோடு வரை 4 மணி நேரத்தில் செல்லும் அதிவிரைவு ரயில் திட்டத்திற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன. கொச்சி மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட இயக்கம் துவக்கி வைக்கப்பட் டுள்ளது. முழுமையான மின் இணைப்பு என்றால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் சென்றடைய வேண்டும். இத்தகைய வளர்ச்சிப்பணிகள் யுடிஎப் ஆட்சியில் நடக்குமா? கடந்த முறை பாலா தொகுதியில் வெற்றியின் வாயில்வரை வந்தபோதிலும் எல்டிஎப் வெற்றி 
பெற முடியவில்லை. இந்த முறை அந்த தயக்கத்தை எல்லாம் விலக்கி மாணி சி.காப்பனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு பினராயி விஜயன் பேசினார்.

;