தேசம்

img

இந்தியா: கும்பல் குண்டர்களின் கொலை,வன்முறைகளுக்கு எதிராக அமெரிக்காவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள்

புதுதில்லி, ஜூலை 2-

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் நடைபெற்று வரும் கும்பல் குண்டர்களின் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களுக்கு அங்கே இருக்கின்ற பாஜக அரசாங்கங்கள்தான் காரணம் என்று கூறி அமெரிக்காவின் பல நகரங்களில் கண்டனப் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.

அமெரிக்காவின் கிரேட்டர் போஸ்டான் நகரிலும், சிகாகோவிலும் சனிக்கிழமையன்று இவ்வாறு கண்டனப் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பேரணியில் வந்தவர்கள் இந்தியாவில் மக்களின் மனித உரிமைகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது அதிகரித்துக் கொண்டிருப்பதாகவும், இத்தகைய கும்பல்குண்டர்களின் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்திட அங்கே ஆளுகின்ற பாஜக அரசாங்கங்கள் தயாராக இல்லை என்றும் மாறாக அவர்களுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினார்கள்.

கும்பல் குண்டர்களின் கொலை மற்றும் வன்முறை வெறியாட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிராக அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள வெறுப்புக் குற்றங்களைக் கட்டுப்படுத்திடக்கூடிய விதத்தில் உலகம் திரண்டிட வேண்டும் என்றும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரியுள்ளார்கள்.

இப்பேரணி/ஆர்ப்பாட்டத்தில் இந்தியா, தெற்கு ஆசியா மற்றும் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களும் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும்  பங்கேற்றிருந்தார்கள்.

“இந்தியக் குடிமக்களாகவும் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கவாழ் மக்களுமாக இருக்கின்ற நாங்கள், இந்தியாவில் கும்பல் குண்டர்கள் நடத்திவரும் கொலைகள் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாகவும், அவர்கள் காட்டாட்சி நடத்திட ஊக்குவிக்கும் விதத்தில்,  இந்திய அரசும், மாநில அரசுகளும் உணர்ச்சியற்றிருப்பதனை, கண்டிக்கிறோம். இத்தகைய இருண்ட காலத்தை நோக்கி இந்தியாவை இழுத்துச்செல்கின்றவர்களிடமிருந்து இந்தியா காப்பாற்றப்பட வேண்டும்,” என்று அவர்கள் கூறினார்கள்.

கிரேட்டர் போஸ்டான் பகுதியிலிருந்து பேரணியாக வந்தவர்கள், மசாசூசெட்ஸ், கேம்பிரிட்ஜ் அருகிலிருந்த ஹார்வர்ட் சதுக்கத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

“கும்பல் குண்டர்களுக்கு ஆதரவு நல்கும் கிரிமினல் அரசியல்வாதிகளைத் தண்டித்திடுக,” என்றும், “அக்லாக், பெஹ்லு, அஃப்ராசுல், தப்ரேஷ், … அடுத்து அவர்கள் உங்களைக் கொல்வதற்கு முன் இதனைத் தடுத்து நிறுத்த முன்வாருங்கள்,” என்றும், ஆர்ப்பாட்டத்தினர் பதாகைகளை ஏந்தி இருந்தார்கள்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கொல்லப்பட்ட தப்ரேஷ் அன்சாரியின் நினைவாக ஒருவர் கவிதை ஒன்றை வாசித்தார். இவர் தன்னுடைய கவிதையில் இவ்வாறு தப்ரேஷ் அன்சாரி கொல்லப்படுவதற்கு ராமனின் பெயர் எப்படிப் பயன்படுத்தப்பட்டது என்பதையும் வெறுப்பு அரசியலை மக்கள் மத்தியில் பரப்பிட ராமன் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வருகிறார் என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்கலைக் கழக மாணவர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பலதரப்பட்ட மக்கள் பங்கேற்றிருந்தார்கள்.

(ந.நி.)

;