தேசம்

img

தேசிய கல்விக் கொள்கை வரைவறிக்கை 2019 - சுப்பிரமணியன் குழு அறிக்கைக்கு என்னதான் நேர்ந்தது?

T.S.R.சுப்பிரமணியன் குழு 2016ஆம் ஆண்டில் அளித்திருந்த அறிக்கையின் தொடர்ச்சியாக அல்லது அந்த அறிக்கையின் பிரதியாக கஸ்தூரிரங்கன் குழு சமர்ப்பித்திருக்கும் வரைவறிக்கை இருக்கிறது என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வராத வகையில், கஸ்தூரிரங்கன் குழுவில் ஆரம்பித்து மத்திய அமைச்சகம் வரைக்கும் அனைவரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர் ஏன் சுப்பிரமணியன் குழுவிற்குப் பதிலாக கஸ்தூரிரங்கன் குழு அமைக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டது என்ற கேள்விக்கான பதிலைக் கண்டடைவதற்கு இன்னும் ஏராளமான கேள்விகளுக்கு நாம் பதிலைத் தேட வேண்டியதாகி விடுகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியாக பாஜக அளித்திருந்த புதிய கல்விக்கொள்கையை ஏன் ஸ்மிருதி இரானி தலைமையிலான அமைச்சகத்தால் கொண்டு வர முடியாமல் போனது? 2015ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சுப்பிரமணியன் குழுவோடு அல்லது குறைந்தபட்சம் குழுத் தலைவர் சுப்பிரமணியனோடு ஸ்மிருதி இரானிக்கு என்ன பிரச்சனை, எதனால் ஏற்பட்டது? இப்போது முன்னிறுத்தப்படுகின்ற சுப்பிரமணியன் குழு அறிக்கையைப் புறந்தள்ளி விட்டு ஸ்மிருதி இரானி 2016ஆம் ஆண்டு ஏன் அமைச்சகத்தின் ஆவணத்தை மட்டும் வெளியிட்டார்? தன்வசமிருந்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை பிரகாஷ் ஜவடேகரிடம் ஏன் ஸ்மிருதி இரானி இழக்க வேண்டியதாயிற்று?  அடுத்து வந்த ஜவடேகர், சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையை நிராகரித்து விட்டு, அதற்குப் பதிலாக புதியதொரு குழுவை ஏன் நியமனம் செய்தார்? கஸ்தூரிரங்கன் தலைமையில் இப்போது வரைவறிக்கையைச் சமர்ப்பித்திருக்கும் குழுவிற்கும், சுப்பிரமணியன் தலைமையில் செயல்பட்ட குழுவிற்கும் அடிப்படை வேறுபாடுகள் என்ன? நிராகரிக்கப்பட்ட சுப்பிரமணியன் குழு அறிக்கை ஏன் இப்போது முன்னிறுத்தப்படுகிறது? கல்விக் கொள்கையை இறுதியாக்குகின்ற பொறுப்பு ஜவடேகரிடமிருந்து தட்டிப் பறிக்கப்பட்டு பொக்ரியாலிடம் ஏன் இப்போது ஒப்படைக்கப்பட்டுள்ளது? இன்னும் பல கேள்விகள் எழுகின்றன. ஆனாலும் மர்மப் பின்னணியில் இயங்குகின்ற இந்த அரசின் செயல்பாடுகளிலிருந்து விடைகளைக் காண்பது கொஞ்சம் சிரமம்தான்.

2014  மே 26 அன்று பதவியேற்றுக் கொண்ட மோடி தலைமையிலான மத்திய அரசில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி நியமனம் செய்யப்பட்டார். தனது வாக்குறுதியை நிறைவேற்றுவது என்ற சாக்கில் பாஜக அரசு, கல்விக் கொள்கைகளை மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்க உடனடியாக முனைந்தது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உயர்கல்வி, பள்ளிக் கல்வி தொடர்பான 33 ஆய்வுப் பொருள்களைக் கண்டறிந்தது, இந்த ஆய்வுப் பொருட்கள் மீது தங்களுடைய கருத்துகளை இணையதளம் வழியாக பொதுமக்கள் வழங்கலாம் என்று 2015 ஜனவரி 26 அன்று அமைச்சகம் அறிவிக்கையை வெளியிட்டது. பல்வேறு நடைமுறைகளைப் பயன்படுத்தி பலதரப்பினருடனும் ஏறத்தாழ பத்து மாதங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டதாக கூறிக் கொண்ட அமைச்சகம், இறுதியாக இவ்வாறு பெறப்பட்ட கருத்துகளைத் ’தொகுத்து’ வழங்குவதற்கென்று 2015 அக்டோபர் 31 அன்று முன்னாள் அமைச்சரவைச் செயலாளர் T.S.R.சுப்பிரமணியன் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது. புதிய தேசிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான அந்தக் குழுவில், டெல்லி மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சைலஜா சந்திரா, டெல்லி மாநில முன்னாள் உள்துறைச் செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் சுதிர் மன்காட், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் J.S.ராஜ்புத் ஆகியோர் இருந்தனர்.  

2016 பிப்ரவரி 25 அன்று மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்காக சுப்பிரமணியன் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கின்ற ஆவணங்கள், பரிந்துரைகள், ஆலோசனைகளை பரிசீலித்து புதிய கல்விக் கொள்கை வரைவு, அதனைச் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பு ஆகியவற்றை இந்த மாத இறுதிக்குள் உருவாக்கித் தருமாறு அந்தக் குழுவைக் கேட்டுக் கொண்டிருப்பதாகப் பதிலளித்திருந்தார். அந்தக் குழு அமைக்கப்படுவதற்கு முன்பாக அமைச்சகம் செய்திருந்த பல்வேறு பணிகளையும் அவர் தன்னுடைய பதிலில் பட்டியலிட்டிருந்தார்.  

நாடு முழுவதும் பயணித்து மக்களை, ஆசிரியர்களை, கல்வியாளர்களைச் சந்தித்து, அவர்களின் கருத்தை கேட்டு அறிக்கையாக தயார் செய்து மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க உருவாக்கப்பட்ட அந்த சுப்பிரமணியன் குழு மாநிலம், மாவட்டம், கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்தி கருத்துக்களைப் பெற்றுக் கொண்டதாக பீற்றிக் கொண்டதைத் தவிர வேறெதனையும் உருப்படியாகச் செய்யவில்லை. அழைப்பிதழ் இருந்தவர்களுக்கு மட்டும் என்பதாக குறிப்பிடப்பட்டு தங்களுக்கு வேண்டியவர்களைக் கொண்டே பல்வேறு இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 2016 மே 7 அன்று தன்னுடைய அறிக்கையை அமைச்சரிடம் அந்தக் குழு சமர்ப்பித்ததாக கூறப்பட்டது. வெறுமனே அதிகாரிகளைக் கொண்டு மட்டுமே அமைக்கப்பட்டிருந்த அந்தக் குழு அறிக்கையைச் சமர்ப்பித்து பல மாதங்கள் ஆன பிறகும் மத்திய அரசு அதை வெளியிடாமலே வைத்திருந்தது.  

பண்டைய இந்தியாவின் குருகுல முறைப்படியான கல்வியை மையப்படுத்திய ’தேசியவாத’ கல்வி முறையை எதிர்பார்த்துக் காத்திருந்த ஆர்எஸ்எஸ் தலைமைக்கு சுப்பிரமணியன் குழு அறிக்கையில் தாங்கள் எதிர்பார்த்திருந்தவை இல்லாது போனது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுப்பிரமணியன் குழுவின் அறிக்கை முற்றிலும் ஏமாற்றத்தைத் தருவதாக பாஜக கருதியதால், அந்த குழுவின் அறிக்கையை வெளியிட ஸ்மிருதி இரானி மிகுந்த தயக்கம் காட்டினார். அறிக்கையை வெளியிடுவதன் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் எழுந்து கல்விக் கொள்கை கைநழுவிப் போய் விடும் என்பதான ஐயம் அமைச்சகத்திற்குள்ளேயே இருந்ததாகவும், அவ்வாறான சர்ச்சைகளை தவிர்க்கவே நாங்கள் விரும்பினோம் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக அப்போது தகவல்கள் வெளியாகின.

அறிக்கையை வெளியிட அரசாங்கம் தயங்குவதை அறிந்து கொண்ட சுப்பிரமணியன் அந்த அறிக்கை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் என்றும், அவ்வாறு வெளியிடப்படவில்லை என்றால் தானே அறிக்கையை வெளியிட நேரிடும் என்றும் தெரிவித்து அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு மூன்று பக்க கடிதம் ஒன்றை எழுதினார். தன்னைப் பொறுத்த வரையில் அந்த அறிக்கை மறைத்து வைக்கப்பட வேண்டியதாக இருக்கவில்லை என்று கூறிய சுப்பிரமணியன், தேசிய கல்விக் கொள்கையை அறிவிப்பதற்கு முன்பாக அதை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார். அரசாங்கம் அசையவில்லை. பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு மூலமாக இணையதளத்தில் அந்த 230 பக்க அறிக்கை அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியிடப்பட்டது.

சுப்பிரமணியன் எழுதிய அந்தக் கடிதத்தால் கோபமடைந்த அமைச்சர் ”மத்திய அரசிற்கு வந்துள்ள பரிந்துரைகள் தங்களிடம் பகிர்ந்து கொள்ளப்படும் என்று எங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற ஒரு லட்சம் மக்கள், 10000 கிராமங்கள், 5000 வட்டாரங்கள், 500 மாவட்டங்கள், 20 மாநிலங்களின் சொத்தாக இந்த கொள்கைப் பரிந்துரை இருக்கிறது. தவறான, நாகரிகமற்ற தகவல்கள் வெளியாவது துரதிர்ஷ்டவசமானது. தலைப்புச் செய்திகளில் தனியொருவரின் பெருமையை பறைசாற்றுவதாக அந்த அறிக்கை மாறுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். தேசத்திற்கு அர்ப்பணிப்பதற்கு முன்பாக, மாநில அரசுகளின் குரலுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று நான் அளித்துள்ள உறுதிமொழியிலிருந்து தவற மாட்டேன்” என்று 2016 ஜூன் 3 அன்று பத்திரிக்கையாளர்களிடம் மிகவும் கறாராகத் தெரிவித்தார். மாநில அரசுகளைக் கலந்தாலோசித்த பிறகே அந்த அறிக்கை வெளியிடப்படும் என்று உறுதிபடத் தெரிவித்து சுப்பிரமணியன் குழு அறிக்கையை வெளியிட அவர் மறுத்தார்.  

ஆனாலும் மாநில அரசுகளிடமும் கருத்துகளைப் பெறுவதற்காக அந்த அறிக்கையை அவர் அனுப்பாததால், சர்ச்சை எழுந்தது. பீகார் மாநில கல்வி அமைச்சர் அசோக் சௌத்ரி, ”நீங்கள் அறிவித்திருந்த 2015 டிசம்பர் 31 என்ற காலக்கெடு முடிந்து போய் விட்டது. உங்களுடைய வாக்குறுதியை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள்” என்று ட்வீட் செய்ததற்கு, இதுவரை பீகாரிலிருந்து ஆலோசனைகள் எதுவும் பெறப்படவில்லை என்று இரானி பதிலளித்திருந்தார். அறிக்கையே இதுவரை பெறப்படாத போது, ஆலோசனைகளை எவ்வாறு வழங்குவது என்று காட்டமாக கேள்வியெழுப்பிய சௌத்ரி, அறிக்கையை பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்காத அமைச்சர் மாநிலங்களை கலந்தாலோசித்ததாகக் கூறுவது அனைவரையும் முட்டாளாக்குவதாக இருப்பதாக ஃப்ரண்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சீறினார். 

அறிக்கை வெளியாவதை காலதாமதப்படுத்தும் நிலைமையையே இந்த சர்ச்சைகள் உருவாக்கின. எதிர்காலத் தலைமுறையினருக்கான கல்விக் கொள்கையை வெளியிடுவதால் என்ன நடந்து விடப் போகிறது என்ற கேள்வியை கல்வியாளர்கள் பலரும் எழுப்பினர். ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட 29000 கருத்துகள் மற்றும் மூன்று மாநிலங்கள் மட்டுமே தெரிவித்திருந்த ஆலோசனைகள் என்று எதுவுமே பொதுவெளிக்கு கொண்டு வரப்படாமல், அறிக்கையை இவ்வாறு ரகசியமாக வைத்திருக்க வேண்டியதன் அவசியமென்ன என்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. கல்வியாளர்கள் எவருமில்லாது அதிகாரிகளை மட்டுமே கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை கல்வியாளர்களின் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாமா என்ற நியாயமான விமர்சனம் முன்வைக்கப்பட்டது. ஆர்எஸ்எஸ்சின் முழு ஆதரவையும் பெற்றவராக அந்தக் குழுவில் இருந்த ராஜ்புத், ”சுப்பிரமணியன் அந்தக் கடிதத்தை எழுதியிருக்கக் கூடாது. அறிக்கையை எழுதுவது மட்டுமே எங்களுடைய வேலை. அறிக்கையைச் சமர்ப்பித்த பிறகு அது குறித்து அரசாங்கம் என்ன செய்கிறது என்பது பற்றி எங்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது” என்று கருத்து தெரிவித்திருந்தார்.  சுப்பிரமணியன் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொண்டதாகவோ, வெளியிடுவதாகவோ அமைச்சகம் கூறாத நிலையில், சில நாட்களிலேயே அறிக்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக நம்பப்படும் வகையில், ’வரைவுக் கொள்கை உருவாக்கத்திற்கான சில உள்ளீடுகள்’ என்ற தலைப்பில் 43 பக்க ஆவணத்தை இணையதளத்தில் அமைச்சகம் வெளியிட்டது. செப்டம்பர் 30க்குள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்ற குறிப்புடன் அந்த ஆவணம் வெளியிடப்பட்டது. அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட அந்த ஆவணத்தில் சுப்பிரமணியன் குழுவைப் பற்றி எந்தவொரு தகவலும் குறிப்பிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இந்த சர்ச்சைகள் ஓயாத நிலையில், ஒரு மாத காலத்திற்குள்ளாகவே அதாவது 2016 ஜூலை 5 அன்று அமைச்சரவை மாற்றம் என்ற பெயரில் ஸ்மிருதி இரானி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு, ஜவுளித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அவருக்கு மாற்றாக சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகர் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார்.

சுப்பிரமணியன் குழு அறிக்கை அதிகாரப்பூர்வமற்ற வகையில் வெளியாகி இருந்த நிலையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி அந்த குழுவின் அறிக்கை ஒருபோதும் கல்விக் கொள்கையாக மாறிட அனுமதிக்க கூடாது என்றும் அவ்வாறு அனுமதித்தால் மதயானை நாட்டிற்குள் நுழைந்தது போல ஆகிவிடும் என்றும் 2016 ஜூலை 23 அன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில்,
''மத்திய அமைச்சரவை முன்னாள் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு புதிய கல்விக் கொள்கை தொடர்பான 200 பக்க அறிக்கையை அளித்துள்ளது. 5 பேர் கொண்ட இக்குழுவில் ஒருவர் மட்டுமே கல்வியாளர் என்பது கவனிக்கத்தக்கது. இக்குழு பரிந்துரைத்துள்ள பல அம்சங்கள் விவாதத்துக்கு உரியவை. பல அம்சங்கள் மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளன.

நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி என்பதை அமல்படுத்தினால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் அனைவருக்கும் கல்வி என்பது சாத்தியமற்று கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். உலகிலேயே கல்வியில் முதலிடத்தில் உள்ள பின்லாந்து நாட்டில் 7 வயதில் தான் கல்வி தொடங்குகிறது. 16 வயது வரை 9 ஆண்டுகளுக்கு தேர்வு இல்லாமல் அனைவருக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்வது நலம். ஒரு மாணவன் தேர்ச்சி பெறவில்லை என்றால் தொழில் பயிற்சிக்கு அனுப்பலாம் என்ற பரிந்துரையும் உள்ளது. மறைமுகமாக குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்துகிறது. அனைத்து மாணவர்களும் வேலைவாய்ப்பை பெற்றிடும் வகையில் தொழில் கல்வியை உருவாக்கி நடைமுறைப்படுத்துவதே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

கல்வி நிர்வாகப் பணிக்கு இந்திய கல்விப் பணித் தேர்வு வைக்க வேண்டும் என்ற பரிந்துரையும் உள்ளது. இதன்படி கல்வித் துறை இயக்குநர்களை மாநில அரசு நேரடியாக நியமிக்க முடியாது. பிளஸ் 2 முடித்தவர்கள் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுத வேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் பாடத் திட்டங்களை மாநில அரசுகள் திட்டமிட முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் இந்தியாவின் அடிப்படை கூறான பன்முகம் சிதைவுறும்.
வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதித்தால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி கிடைக்கும். வெளிநாடுகளில் தரமான கல்வி வழங்கப்படுகிறது என்றால் அதுபோன்ற கல்வியை இந்தியாவிலும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் கட்டாயம் லைசென்ஸ் அல்லது சான்றிதழ் வைத்திருக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதி லைசென்ஸை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆசிரியர்கள் பயிற்சி பெற வேண்டும் போன்ற பரிந்துரைகளை இக்குழு அளித்துள்ளது. இது ஆசிரியர்களிடம் ஒருவித இயந்திரத் தன்மையை தோற்றுவிப்பதோடு, காலப்போக்கில் சலிப்பு, விரக்தியை ஏற்படுத்தும்.

தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய கல்விக் கொள்கை வெளிப்படைத் தன்மையோடும், ஜனநாயக அடிப்படையிலும் உருவாக்கப்படவில்லை. கடந்த 2015-ல் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க சில விவாத தலைப்புகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டது. அதன்படி கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்பட்டதாக செய்திகள் எதுவும் வரவில்லை. திரட்டப்பட்டதாகச் சொல்லப்படும் கருத்துகளை தொகுத்து சுப்பிரமணியன் குழு அறிக்கை அளித்துள்ளது. அந்த அறிக்கையையும் மத்திய அரசு வெளியிட மறுக்கிறது. இவ்வாறு ரகசியமாக கல்விக் கொள்கையை தயாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியிருப்பதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது. புதிய கல்விக் கொள்கை நவீன குலக்கல்வித் திட்டம் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கல்விக் கொள்கையை வரையறுக்க கல்வியாளர்களைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைக்க வேண்டும். அக்குழுவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த கல்வியாளர்களை இடம்பெறச் செய்ய வேண்டும். இக்குழுவின் அறிக்கை நாட்டு மக்கள் முன்பு வைக்கப்பட்டு, மக்கள் கருத்து அடிப்படையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும். புதிய கல்விக் கொள்கை குறித்து நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அந்தத் தீர்மானத்தில், கல்வியை மீண்டும் மாநில அரசுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் இடம் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கை என்ற மத யானை தமிழகத்தில் நுழைய அனுமதிக்கக் கூடாது. தமிழகத்துக்கு சிறிதும் பொருந்தாத இந்தப் பிரச்சனையை முதல்வர் ஜெயலலிதா எச்சரிக்கையோடு கையாண்டு, இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும்'' என்று சுப்பிரமணியன் குழு அறிக்கைக்கு எதிரான கருத்துகளை கருணாநிதி மிகவும் வலுவாக முன்வைத்திருந்தார் என்பது பிரச்சனைக்குள்ளான அந்த அறிக்கையும்கூட பொதுமக்களுக்கானதாக இருக்கவில்லை என்பதையே காட்டுகிறது. 

இந்த நிகழ்வுகள் அனைத்தும் புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்குவதற்காக உடனடியாக களத்தில் இறங்கிய ஸ்மிருதி இரானியின் நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் யார், சுப்பிரமணியனுடன் ஏன் அவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது, அந்தக் கருத்து வேறுபாடு அந்த அறிக்கையில் இருந்த பரிந்துரைகள் குறித்ததாக இருந்ததா, ஏன் கல்வி அமைச்சகப் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார், குழு அமைக்கப்படுவதற்கு முன்பாகவே அமைச்சகம் தயாரித்துப் பெற்றிருந்த ஆலோசனைகளுக்கு மாறுபட்டு சுப்பிரமணியன் குழு அறிக்கையைச் சமர்ப்பித்ததா என்ற கேள்விகள் விடாது தொடர்கின்றன.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரகாஷ் ஜவடேகர் சிறிது காலம் கழித்து புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான புதிய குழு அமைக்கப்படும் என்று அறிவித்த போது, பேராசிரியர் ஜே.ஆர்.வி.எட்வர்ட் எழுதி காலச்சுவடு 2017 பிப்ரவரி மாத இதழில் வெளியான கட்டுரை இத்தகைய கேள்விகளுக்கு விடையளிக்கின்ற விதத்தில் இருந்தது. சுப்பிரமணியன் குழு அறிக்கை தொடர்பாக நடந்தவை, கல்விக் கொள்கைகள் குறித்து அரசாங்க நடவடிக்கைகளுக்குப் பின்னணியில் இருந்த ஆர்எஸ்எஸ் அதிகார மையம், ஆர்எஸ்எஸ்சின் கட்டளைகளை மீற முடியாது பாஜக அரசாங்கம் நடந்து கொண்ட விதம் ஆகியவற்றை அந்தக் கட்டுரை மிகத் தெளிவாக எடுத்து வைக்கிறது.


(தொடரும்) 


கட்டுரையாளர்

முனைவர் தா.சந்திரகுரு

விருதுநகர்
 

;